search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers happy"

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று மழை பெய்ததால் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. மேலும் தருமபுரி மாவட்டம் விவசாய பூமி என்பதால் மழை இல்லாமல் நிலம் ஈரப்பதம் அற்று காணப்பட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் இருந்து வந்தனர். 

    மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. இதை போன்று நேற்றும் தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்தது. மழையின் அளவு வருமாறு:-

    அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 42மி.மீ. மழையும், பாப்பிரெட்டிபட்டியில் 40.2 மி.மீ. மழையும், அரூரில் 5.2 மி.மீ. மழையும், தருமபுரியில் 4மி.மீ. மழையும் மற்றும் பென்னாகரத்தில் 1.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது. 

    இந்த 2 நாட்களாக பெய்த மழை பெரிய அளவு விவசாயம் செய்யக்கூடிய கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் நெல் விவசாயிகளுக்கு உதவிகரமாக இல்லாவிட்டாலும், சிறிய அளவு விவசாயம் செய்யக்கூடிய காய்கறி மற்றும் கீரை விவசாயிகளுக்கு இந்த மழையானது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் இன்று காலை மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7மணி அளவில் திடீரென மழை பெய்ய துவங்கியது. இந்த மழையால் சாலையில், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

    இதையடுத்து பூமி குளிர்ச்சியடைந்து, வெப்ப காற்று தணிந்து, குளிர்காற்று வீச துவங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இன்று அதிகாலை கிருஷ்ணகிரி பகுதியில் லேசான தூறல் மழை இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல்லில் 86.20 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. பாரூர் - 37.80 மி.மீ., போச்சம்பள்ளி - 20.40 மி.மீ., கிருஷ்ணகிரி - 10 மி.மீ., ஊத்தங்கரை - 1 மி.மீ., என மொத்த மழை அளவு 155.40 மி.மீ பதிவாகியிருந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் -பென்னாகரத்திலும் மழை பெய்து வருகிறது. தருமபுரி நகரில் இன்று காலை 6 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த அவதிப்பட்டனர். மாலை நேரத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் மிதமான மழை பெய்தது. மழையானது தற்போது காலைவரை நீடித்த நிலையில் காணப்பட்டது.

    இதனால் வானம் பார்த்து பூமியில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு ஆகிய பயிர்களுக்கு இந்த மழை சற்று ஆறுதல் தருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருகிறது. எனவேதான் இந்தியா மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இவர்கள் கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை ரசித்து தங்களது கேமராக்களில் படம் பிடித்து வருகிறார்கள். அதோடு ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.

    தென் மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்தது. எனவே இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் உருளை, கேரட், பீன்ஸ் ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அதன் பின்னர் மழை ஓய்ந்து விட்டது.

    இன்று கொடைக்கானல் பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. காலையிலேயே கரு மேகம் சூழ்ந்ததால் கொடைக்கானல் நகரம் இருளாக காட்சியளித்தது. அதன் பின்னர் லேசானது முதல் மிதமான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள இடங்களை ரசித்து பார்த்தனர். இந்த சாரல் மழை பட்டர் பீன்ஸ், கேரட் ஆகியவற்றுக்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    நாகை மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருமருகல்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் பருவமழை பெய்யாமல் வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திருமருகல், ஆதீனக்குடி, குருவாடி, அண்ணாமண்டபம், திருப் புகழுர், திருகண்ணபுரம், திருசெங்காட்டாங்குடி, சீயத்தமங்கை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்தமழை பெய்தது. 

    இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதேபோல் வேதாரண்யம் சீர்காழி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றுஇரவு மழை பெய்தது. இந்த மழை சம்பா நேரடி நெல்விதைப்பு செய்துள்ள விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
    கரூர் மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தி குறைவாலும் கோவில் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் அதிகமாக இருப்பதாலும் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்பு பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், என். புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். 

    இங்கு விளையும் வெற்றிலைகளை வேலாயுதம் பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், விவசாயிகள் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் அனுப்பி வைக்கின்றனர். இப்பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக் கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.  

    கடந்த வாரம் இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.5 ஆயிரத்துக்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.2 ஆயிரத்திற்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.2500-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1000-க்கும் வாங்கி சென்றனர்.  

    இந்த வாரம் இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.6ஆயிரத்திற்கும், முதிகால் வெள்ளக் கொடி வெற்றிலை ரூ.2500-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.3,500க்கும் முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1500க்கும் வாங்கி சென்றனர். 

    வெற்றிலை உற்பத்தி குறைவாலும் கோவில் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் அதிகமாக இருப்பதாலும் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி திகழ்கிறது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் ஏரி வறண்டு காணப்பட்டதால் மார்ச் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கல்லணை வழியாக கீழணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த 27-ந்தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 920 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 800 கனஅடியாக குறைந்தது. இருப்பினும் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் நேற்று 46.40 அடியாக இருந்தது.

    இன்று காலை அது 46.80 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.

    வீராணம் ஏரியில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசனத்துக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சேத்தியாதோப்பு, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சம்பா சாகுபடிக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக பொதுப்பணிதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சம்பா சாகுபடிக்கு ஓரிரு நாளில் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அதன் பின்னர் சென்னைக்கு குடிநீருக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் என்றார்.  #VeeranamLake
    கரூர் மாவட்டத்தில் மரவள்ளிகிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல் வேட்டமங்கலம், ஒரம்புபாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். தற்போது மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகள் நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, கீரனூர், நாமகிரி பேட்டை, தொ.ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயார் செய்யும் கிழங்கு மாவு மில்களுக்கு புரோக்கர்கள் மூலம் டன் கணக்கில் வாங்கி செல்லப்படுகிறது. 

    கடந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ.6 ஆயிரத்து ஐநூறுக்கு வாங்கிச்சென்றனர். சிப்ஸ் தயாரிப்போர் ஒரு டன் ரூ.8 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். இந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ.7,500-க்கும், சிப்ஸ் தயாரிப்போர் ஒரு டன் ரூ.9,500-க்கும் வாங்கிச்சென்றனர். 

    ஜவ்வரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மரவள்ளிக்கிழங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    முதுகுளத்தூரில் நேற்று மாலை தொடர்ந்து பெய்த மழையால் பருத்தி போன்ற சிறு தானிய வகைகளை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூரில் நேற்று மாலை தொடர்ந்து பெய்த மழையால் பருத்தி போன்ற சிறு தானிய வகைகளை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தபோதிலும், வெப்ப சலன காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் கடுமையான வெயிலால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு இருந்த போது, நேற்று மாலை பெய்த மழையால் வெப்பம் குறைந்து, தரிசு நிலங்களில் புற்கள் முளைத்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு போதுமான நீர் ஆதாரங்கள், மேய்ச்சல் வசதி கிடைத்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கோடைமழை இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி குறித்த நேரத்தில் பெய்து வருவதால், பருவமழை சீசன் ஆடி மாதத்திலேயே பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    நேற்று மாலை பெய்த கன மழையால், முதுகுளத்தூர் பஸ் நிலையம் உள்பட முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் அவதிபட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டுச் சென்றனர்.

    ×