search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farm Laws"

    அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் இருந்தால் பணமதிப்பு நீக்கம் ஒரு இமாலய தவறு என்பதை பிரதமர் ஒப்புக்கொள்வார் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்துவருகின்றனர்.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறுகையில், அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டதால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது?  விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

    பிரதமர் மோடி

    இந்த முடிவின் பொருள் பா ஜ க அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள்.

    இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவு. மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பா ஜ க அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதேபோல் அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் இருந்தால், பணமதிப்பு நீக்கம் ஒரு இமாலய தவறு என்பதை பிரதமர் ஒப்புக்கொள்வார்.

    சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வார். சிஏஏ என்பது ஒரு பாரபட்சமான சட்டம் என்பதை ஒப்புக்கொள்வார். 

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக இத்தனை நாட்களாகப் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக கார்கே கூறினார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடங்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்று கொண்டாடிவருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம், மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், இது வேளாண் சட்டங்களுக்கு எதிராக இத்தனை நாட்களாகப் போராட்டம் நடத்திய விவசாயிகளின் வெற்றி என்றார்.

    ‘இந்த விஷயத்தில் மத்திய அரசே குற்றம்செய்திருப்பது போல் தெரிகிறது. ஆனால் விவசாயிகள் பட்ட கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பது? இந்த விவகாரங்களை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்’ என்றும் கார்கே கூறினார்.
    வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    அந்த வகையில், இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

    இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!

    மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

    உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்!

    அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. விவசாயிகளின் தியாகத்திற்கு பலன் கிடைத்துள்ளது - எதிர்க்கட்சிகள் கருத்து
    விவசாயிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை வரும் தலைமுறையினர் நினைவு கூர்வார்கள் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்று கொண்டாடிவருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

    அவ்வகையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிரகாஷ் திவாஸ் அன்று மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. மூன்று சட்டங்களும் நீக்கப்படுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி, 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகம் என்றும் அழியாமல் இருக்கும். விவசாயிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை வரும் தலைமுறையினர் நினைவு கூர்வார்கள். விவசாயிகளுக்கு தலைவணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், "விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டத்தால், நாட்டின் ஆணவம் தலை குனிந்தது. அநீதிக்கு எதிரான இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்..." என்று பதிவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு
    3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர்மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். இது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காக ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் தியாகத்திற்கு பலன் கிடைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

    குருநானக் ஜெயந்தி கொண்டாடும் இந்த வேளையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான், அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

    சரியான விதைகள், உரம், பயிர்க் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளையும் வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர்.

    விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.  எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம்.

    விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விவசாயிகள் நீண்ட காலமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை அரசால் பெற முடியவில்லை.
    லக்னோ :

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா, ‘அனைவருடன் இணைந்து வளர்ச்சி காண்போம்’ என்று அடிக்கடி சொல்கிறது. ஆனால், விவசாயிகள் நீண்ட காலமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை அரசால் பெற முடியவில்லை.

    அப்படியானால், பா.ஜனதாவின் கோஷத்தை மக்கள் எப்படி நம்புவார்கள்? பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்ததுபோல், தீபாவளி பரிசாக, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×