search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    தேர்தல் பயத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ்- ப.சிதம்பரம் கருத்து

    அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் இருந்தால் பணமதிப்பு நீக்கம் ஒரு இமாலய தவறு என்பதை பிரதமர் ஒப்புக்கொள்வார் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்துவருகின்றனர்.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறுகையில், அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டதால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது?  விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

    பிரதமர் மோடி

    இந்த முடிவின் பொருள் பா ஜ க அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள்.

    இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவு. மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பா ஜ க அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதேபோல் அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் இருந்தால், பணமதிப்பு நீக்கம் ஒரு இமாலய தவறு என்பதை பிரதமர் ஒப்புக்கொள்வார்.

    சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வார். சிஏஏ என்பது ஒரு பாரபட்சமான சட்டம் என்பதை ஒப்புக்கொள்வார். 

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

    Next Story
    ×