search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Board"

    வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை 5 மடங்கு உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. #TNEB
    சென்னை:

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது.

    மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சில வருடங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை.

    கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் உள்ள வீடுகளுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு பெற தற்போது ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரூ.9,800 ஆக உயர்த்த உள்ளனர்.

    மும்முனை மின்சார இணைப்பு கட்டணத்தை ரூ.7,475-ல் இருந்து ரூ.35 ஆயிரம் ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ரூ.18 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


    இதேபோல் தொழிற்சாலைகள், வர்த்தக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், முடிவு செய்துள்ளனர்.

    துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் பெறுவதற்கும், மின் கட்டணத்துக்கு கொடுக்கும் காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பினால் அதற்காக வசூலிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளன.

    புதிய கட்டண உயர்வை அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

    மின்வாரியத்தின் பரிந்துரையை ஒழுங்கு முறை ஆணையம் அப்படியே ஏற்றுக் கொள்ளுமா? அல்லது மறுபரிசீலனை செய்ய சொல்லுமா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    ஆணையம் ஒப்புதல் வழங்கியதும் புதிய கட்டண உயர்வு எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். #TNEB
    மழை காலங்களில் மின் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று கோவை மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.
    கோவை:

    கோவை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழை காலங்களில் மின்விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டி, இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது. வீட்டில் மின்அதிர்ச்சி ஏற்பட்டால் ரப்பர் செருப்பை அணிந்து சுவிட்சை அணைத்த பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

    தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கவோ, நடமாடவோ கூடாது. இடி- மின்னலின்போது மின் கம்பிகள், கம்பம், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவைகள் இல்லாத தாழ்வான பகுதியில் தஞ்சமடைய வேண்டும். இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனப் பொருட்களை பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    மின் கம்பி அறுந்து கிடந்தால் அதனை மிதிக்காமல் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களில் பந்தல் அமைக்க விளம்பர பலகைகளை பொருத்த கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பி அருகிலோ அல்லது மின்மாற்றி அருகிலோ நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கவோ கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகே இருக்க வேண்டாம்.

    ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மறறும் விளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால் நடைகளை கட்ட வேண்டாம். மின்சாரத்தினால் ஏற்படும் தீயிணை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்ய கூடாது. மழை காலங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் விழிப்போடும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    வசதியானவர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதை நிறுத்தி, அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்வாரியம், மின்சாரம் வினியோகம் செய்கிறது.

    இதனால் ஆண்டுக்கு சராசரியாக 3600 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகையை மின்வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

    மத்திய அரசு, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நிறுத்தி உள்ளது. அதே போல் நிதி நெருக்கடியில் உள்ள மின்வாரியம் வசதியானவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஏழை மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் மின்சாரம் வழங்குவதில் தவறில்லை. ஆனால் பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டும் வசதி படைத்தவர்கள் உள்பட 2 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் ஆண்டுக்கு 1650 கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஏற்படுகிறது.

    வசதியானவர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதை நிறுத்தினால் அதில் கிடைக்கும் தொகையை வைத்து புதிய மின் திட்டங்களை செயல்படுத்தலாம்.


    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது கையெழுத்திட்ட 5 கோப்புகளில், 100 யூனிட் இலவச மின்சார திட்டமும் ஒன்று. எனவே இந்த திட்டத்தை நிறுத்த அரசு முடிவெடுக்காது.

    ஆனால் கியாஸ் மானியம் வேண்டாம் என பொது மக்கள் தாமாக முன் வந்து தெரிவிப்பது போல் 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என மின்வாரியத்தில் கடிதம் வழங்கினால் அரசு அதை பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovernment #ElectricityBoard
    சிறுசேரி மற்றும் பனையூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சென்னை கோட்டத்தின் அமலாக்க அதிகாரிகள், மின் பகிர்மான வட்ட அதிகாரிகளுடன் இணைந்து சென்னை தெற்கு-2 மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட சிறுசேரி மற்றும் பனையூர் பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முறைகேடாக மின் இணைப்பு பயன்படுத்தியதற்காக ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 767 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

    மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை தவிர்க்க விதி முறைகளின் படி, அவர்களே முன்வந்து அதற்குரிய சமரச தொகையான ரூ.76 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    செஞ்சி அருகே மின்வாரிய ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவர் தேவனூரில் உள்ள மின்சார வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வயல்வெளியில் மாட்டு கொட்டகை அமைத்துள்ளார். நேற்று இரவு மாடு கன்று ஈன்றது. இதனால் முருகன் தனது வீட்டை பூட்டி விட்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இன்று காலை வயல்வெளியில் இருந்து வீட்டுக்கு முருகன் திரும்பி வந்தார். வீட்டின் கதவை உடைக்கப்பட்டது இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. மர்ம மனிதர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கொள்ளை சம்பவம் பற்றி சத்தியமங்கலம் போலீசுக்கு முருகன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×