search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ED raid"

    • அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர்.
    • துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக அமலாக்கத்துறையினர் புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் கரூர் மல்லம்பாளையம் மணல் குவாரியில் இன்று சோதனை மேற்கொண்டனர்.

    இன்று காலை அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அவர்கள், அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் அங்கிருந்த பணம், பில் புத்தகம் உள்ளிட்ட அலுவலக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் மணல் குவாரியில் இருந்து, கடந்த மாத சோதனைக்கு பின்னர் இதுவரை அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்தும் அவர்கள் கணக்கிட்டனர்.

    இதற்காக பிரத்யேக தொழில்நுட்ப வல்லுனர்களையும் அவர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மணல் அள்ளப்பட்ட அளவை நவீன கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் இந்த மணல் குவாரி மூடப்பட்டது, தடையை மீறி யாரும் மணல் அள்ளாமல் இருப்பதற்காக, அகழிகள் வெட்டப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் மணல் அள்ளியதாக அமலாக்கத்துறையினருக்கு புகார்கள் சென்றது.

    இதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. அதை வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை காரணமாக கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
    • கருவன்னூர் வங்கியில் கணக்காளராக பணிபுரிந்த ஜில்ஸ் என்பவரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில் ரூ300 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக குற்றப்பிரிவுபோலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் அமலாக்கத் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். அதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் நடந்த இந்த மோசடி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக முதல்-மந்திரி பினராய் விஜயனின் மந்திரி சபையில் இருந்த, தற்போதைய எம்.எல்.ஏ. மொய்தீன், வடக்கஞ்சேரி நகரசபை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலர் அரவிந்தாஷன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். விசாரணையின் போது தன்னை அமலாக்கத் துறையினர் தாக்கியதாக அரவிந்தாஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார்.

    இந்நிலையில் அரவிந்தாஷனை வடக்கஞ்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும் கருவன்னூர் வங்கியில் கணக்காளராக பணிபுரிந்த ஜில்ஸ் என்பவரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட இருவரும் எர்ணாகுளம் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இருவரையும் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    • தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை குறி வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • அமலாக்கத்துறையினர் கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட நிறுவனங்களை கண்காணித்து வந்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை குறி வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ரியல்-எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    தி.நகரில் ரியல்-எஸ்டேட் அதிபர் ஒருவரின் வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தி.நகர் சரவணா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    தஞ்சையை சேர்ந்த இவர் ரியல்-எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் ஆவார். இதை தொடர்ந்து ரியல்-எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்திருப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    இதேபோன்று தஞ்சையில் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    30 இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரியல்-எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரித்த அமலாக்கத்துறையினர் கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட நிறுவனங்களை கண்காணித்து வந்தனர்.

    இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்று வருகிறது. ரியல்-எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள பணம் எந்த வகையில் திரட்டப்பட்டது? முதலீடு தொடர்பாக முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் சில நிறுவனங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதை தொடர்ந்தே சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை முடிவில்தான் ரியல்-எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் என்னென்ன? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்.

    • நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
    • 3-வது நாளாக ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    மணல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடு புகார் தொடர்பாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டையில் பிரபல தொழிலதிபரும் மணல் குவாரி ஒப்பந்ததாரருமான முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் இடங்களில் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் பகுதியில் சண்முகம் என்பவரது குவாரி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

    பின்னர் 2-வது நாளாக நேற்று நிஜாம் காலனி ராமச்சந்திரன் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், ராமச்சந்திரனின் தொழில் கூட்டாளியான தொழிலதிபர் மணிவண்ணன் வீடு, வம்பன் அருகே மழவராயன்பட்டியில் உள்ள ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பன் வீடு, கறம்பக்குடியில் குவாரி அதிபர் கரிகாலன் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதில் நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது. ராமச்சந்திரனின் அலுவலகம் தவிர்த்து கரிகாலன் உள்ளிட்ட மற்றவர்களின் வீடுகளில் நடந்த சோதனையும் நேற்று மாலை மற்றும் இரவில் நிறைவு பெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

    புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் இல்லை. ஆகவே ஏற்கனவே சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.

    அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு ள்ளது. ஆகவே அவரை அதிகாரிகள் தொ டர்பு கொள்ள இயலாமல் தவிர்த்து வருகின்றனர்.

    இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவல்களையும் அமலாக்கத்து றை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    • மண்டபம் பூட்டி கிடந்ததை அடுத்து கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
    • கரிகாலன் வீட்டில் அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    திண்டுக்கல் ரத்தினத்தின் மருமகனும், ராமச்சந்திரனின் தொழில் பங்குதாரருமான கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கரிகாலன் இன்று புதிதாக அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளார்.

    முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 கார்களில் கரிகாலனுக்கு சொந்தமான பன்னீர்தேவர் திருமண மண்டபத்திற்கு இன்று காலை சென்றனர்.

    மண்டபம் பூட்டி கிடந்ததை அடுத்து கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் கரிகாலனின் தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் உள்ளனர். கரிகாலன் சென்னையில் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் கரிகாலன் வீட்டில் அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் கரிகாலன் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.

    • பெரும்பாலான குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் மணல் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகாா் கூறின.
    • அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் சட்டவிரோதமாக மணலை விற்பதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் நீா்வளத்துறையின் கீழ் சுமாா் 15 ஆற்று மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதில் 12 மணல் குவாரிகள் மட்டும் முழுமையாக செயல்படுகின்றன. இந்த மணல் குவாரிகளில் இருந்து மணலை பெறுவதற்கு நீா்வளத்துறையின் பிரத்யேகமான இணையதளத்தில் (டி.என்.சாண்ட்) பதிவு செய்து, பணத்தை செலுத்தி ரசீது பெற்று, அந்த ரசீது மூலம் சம்பந்தப்பட்ட குவாரியில் மணலை லாரிகளில் பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.

    இந்த குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1,000-க்கு விற்கிறது. ஆனால், குவாரிக்குள் லாரிகள் செல்ல முடியாது என்பதால், அங்குள்ள யாா்டுக்கு மணல் கொண்டுவரப்பட்டு, அங்கு லாரிகளில் ஏற்றப்படுகிறது. இதற்காக கூடுதல் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.650 பெறப்படுகிறது.

    சாதாரணமாக ஒரு லாரியில் 3 யூனிட் மணல் வரை ஏற்ற முடியும் என்பதால், மூன்று யூனிட் மணல் யாா்டில் ரூ.8,000 வரை விற்கப்படுகிறது. ஆற்றில் இருந்து மணலை எடுத்து வந்து யாா்டில் மணலை இருப்பு வைத்து, லாரியில் ஏற்றுவதற்கு தனியாருக்கு அரசு ஒப்பந்தம் வழங்குகிறது.

    தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகளில் இந்த ஒப்பந்தப்பணியை புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த தொழில் அதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் வசிக்கும் தொழில் அதிபா் ரத்தினம் ஆகியோா் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இணையவழியில் அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு பெயரளவில் மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. பெரும்பாலான குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் மணல் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகாா் கூறின. இதன்மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதில் அரசு இணையதளம் பெரும்பாலான நாள்களில் தொழில்நுட்பக் காரணங்களால் செயல்படாமலேயே இருப்பதால், மணல் வியாபாரிகள் மூலம் போலி ரசீது பெற்று அதிக விலைக்கே வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனா்.

    அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் சட்டவிரோதமாக மணலை விற்பதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது.

    குவாரிகள் மூலம் சட்ட விரோதமாக ஈட்டப்படும் பணம் தொடா்பாக அண்மையில் அமலாக்கத் துறை விசாரணை செய்ததில், அங்கு நடைபெறும் விதிமுறை மீறல்கள் அனைத்தையும் கண்டறிந்தது.

    இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கருதப்படும் புதுக்கோட்டை தொழில் அதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா் ரத்தினம் ஆகியோருக்கு சொந்தமான மற்றும் தொடா்புடைய இடங்கள் உள்பட 30 இடங்களில் அமலாக்கத்துறையினா் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். இன்று 2-வது நாளாக சோதனை நடந்தது.

    • நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    தமிழகத்தில் மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை, திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் அமலாக்கத்துறையின் நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

    அதன்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி அதனை சேமித்து வைக்கும் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான மணல் கிடங்கிலும் மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அமலாக்கத்துறையை சேர்ந்த 10 அதிகாரிகள், 7 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் செவிட்டுரங்கன்பட்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மணல் கிடங்கு அலுவலகத்தில் திடீரென சோதனையை தொடங்கினர்.

    இந்த சோதனையில் ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. அதில் எவ்வளவு மணல் விற்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் பதிவு மூலம் எவ்வளவு விற்பனை நடைபெற்று உள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மோகனூர் மணல் கிடங்குக்கு மணல் அள்ளி கொண்டு வரும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவரும், குவாரியில் உள்ள மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் பெற்று உள்ளனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று காலை அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைக்கு வருவதை அறிந்த மணல் கிடங்கில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், மணல் அள்ளும் பொக்லைன் எந்திர ஆபரேட்டர் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்தபோது, அங்கு பணியில் இருந்தவர்களில் பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் ஒருவர் மட்டுமே அலுவலகத்தில் இருந்தார். எனவே அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

    பின்னர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கீதா மணல் குவாரிக்கு வரவழைக்கப்பட்டு, அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. சோதனையையொட்டி மணல் குவாரிக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    • குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1000-க்கு விற்பனை செய்து வருகிறது.
    • பணத்தை எண்ணுவதற்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் நீர்வளத்துறையின் சார்பில் 15 ஆற்றுமணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதில் 12 மணல்குவாரிகள் மட்டும் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. நீர்வளத்துறையின் பிரத்யேகமான இணையதளத்தில் (டி.என்.சாண்ட்) பதிவு செய்து பணத்தை செலுத்தி ரசீது பெற்று அதன்மூலம் சம்பந்தப்பட்ட குவாரிகளில் மணலை பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.

    இந்த குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1000-க்கு விற்பனை செய்து வருகிறது. ஆனால் குவாரிக்குள் லாரி செல்ல முடியாது என்பதால் அங்குள்ள யார்டுக்கு மணல் கொண்டுவரப்பட்டு அங்கு லாரிகளில் ஏற்றப்படுகிறது.

    இதற்காக கூடுதல் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.650 வரை பெறப்படுவதாக புகார் எழுந்தது. சாதாரணமாக ஒரு லாரியில் 3 யூனிட் மணல் வரை மட்டுமே ஏற்றமுடியும் என்பதால் 3 யூனிட் மணல் யார்டில் ரூ.8000 வரை விற்கப்படுகிறது.

    யார்டில் மணலை இருப்பு வைத்து லாரியில் ஏற்றுவதற்கு தனியாருக்கு அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகளில் இந்த ஒப்பந்த பணியை புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டிணத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில் வசித்துவரும் தொழிலதிபர் ரத்தினம் ஆகியோர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இணைய வழியில் அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு பெயரளவில் மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன. மேலும் பல குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் மணல் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதன்மூலம் அரசுக்கு ரூ. பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. பெரும்பாலான நாட்களில் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் இணையதள சேவை செயல்படாமலே இருந்ததால் போலி ரசீதுகள் பெற்று அதிக விலை கொடுத்து மணல் வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

    இதனைதொடர்ந்து மணல் விற்பனையில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம், அவரது உறவினர் கோவிந்தனின் வீடு ஆகிய 3 இடங்களில் சென்னை, கோவை, கேரளாவில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை 9 மணிமுதல் சோதனை மேற்கொண்டனர்.

    ரத்தினத்தின் அலுவலகத்தில் நேற்று மாலை சோதனை நிறைவடைந்தது. கோவிந்தனின் வீட்டில் இன்று அதிகாலை 5 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. ரத்தினத்தின் வீட்டில் தொடர்ந்து நள்ளிரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

    இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பணத்தை எண்ணுவதற்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோதனைக்கு அதிகாரிகள் வந்தபோது ரத்தினம் வீட்டில் இல்லை. அவரது மனைவி செல்வி, முதல் மகன் துரைராஜ், அவரது மனைவி மற்றும் 2-வது மகன் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ரத்தினம் தற்போது வெளியூரில் இருப்பதாகவும், சோதனை குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். ரத்தினத்தின் 2-வது மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று மாலை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ரத்தினத்தின் வீட்டு முன்பு குவிந்தனர். நள்ளிரவை தாண்டியும் அவர்கள் அதே இடத்தில் இருந்ததால் போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமலும், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று காலையிலும் அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

    • விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.
    • 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி ரோடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் அருகே செவிட்டு ரங்கன்பட்டி பகுதியில் மணல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.

    இங்கு கூடுதல் விலைக்கு மணல் விற்கப்படுவதாகவும், நேரிடையாக மணல் விற்பனை செய்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மணல் வழங்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • மணல் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.

    மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • 3 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
    • கோவை மற்றும் கேரளாவில் இருந்து 8 கார்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில் வசித்து வருபவர் ரத்தினம். இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகளை வைத்து நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட், மணல் குவாரிகள் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே தரணி குழும அலுவலகமும் உள்ளது.

    இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 3 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழையாதபடி சி.ஆர்.பி.எஃப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இவரது முதல் மகன் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியை நிர்வகித்து வருகிறார். 2-வது மகன் திண்டுக்கல் மாநகராட்சியின் தி.மு.க கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேகர் ரெட்டியின் தொடர்பில் இருந்து அதிகளவு பணத்தை முறைகேடாக மாற்றியதாக புகார் எழுந்தது. அப்போது இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரத்தினத்தை கைது செய்தனர். அதன் பின்பு தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மணல் குவாரிகள் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    தொழிலதிபர் ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன். இவர் என்.ஜி.ஓ.காலனி அருகே ஹனிபா நகரில் வசித்து வருகிறார். இவர் பெட்ரோல் பங்க், மணல் குவாரி, நிதி நிறுவனம் மற்றும் ரியல்எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரது வீட்டிலும் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வெளிநபர்கள் யாரும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. திண்டுக்கல்லில் இன்று ஒரே நேரத்தில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் கேரளாவில் இருந்து 8 கார்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×