search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் 2-ம் நாளாக அமலாக்கத்துறை சோதனை
    X

    தொழிலதிபர் ரத்தினம் - ரத்தினத்தின் வீடு முன்பு திரண்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்

    திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் 2-ம் நாளாக அமலாக்கத்துறை சோதனை

    • குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1000-க்கு விற்பனை செய்து வருகிறது.
    • பணத்தை எண்ணுவதற்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் நீர்வளத்துறையின் சார்பில் 15 ஆற்றுமணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதில் 12 மணல்குவாரிகள் மட்டும் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. நீர்வளத்துறையின் பிரத்யேகமான இணையதளத்தில் (டி.என்.சாண்ட்) பதிவு செய்து பணத்தை செலுத்தி ரசீது பெற்று அதன்மூலம் சம்பந்தப்பட்ட குவாரிகளில் மணலை பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.

    இந்த குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1000-க்கு விற்பனை செய்து வருகிறது. ஆனால் குவாரிக்குள் லாரி செல்ல முடியாது என்பதால் அங்குள்ள யார்டுக்கு மணல் கொண்டுவரப்பட்டு அங்கு லாரிகளில் ஏற்றப்படுகிறது.

    இதற்காக கூடுதல் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.650 வரை பெறப்படுவதாக புகார் எழுந்தது. சாதாரணமாக ஒரு லாரியில் 3 யூனிட் மணல் வரை மட்டுமே ஏற்றமுடியும் என்பதால் 3 யூனிட் மணல் யார்டில் ரூ.8000 வரை விற்கப்படுகிறது.

    யார்டில் மணலை இருப்பு வைத்து லாரியில் ஏற்றுவதற்கு தனியாருக்கு அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகளில் இந்த ஒப்பந்த பணியை புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டிணத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில் வசித்துவரும் தொழிலதிபர் ரத்தினம் ஆகியோர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இணைய வழியில் அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு பெயரளவில் மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன. மேலும் பல குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் மணல் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதன்மூலம் அரசுக்கு ரூ. பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. பெரும்பாலான நாட்களில் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் இணையதள சேவை செயல்படாமலே இருந்ததால் போலி ரசீதுகள் பெற்று அதிக விலை கொடுத்து மணல் வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

    இதனைதொடர்ந்து மணல் விற்பனையில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம், அவரது உறவினர் கோவிந்தனின் வீடு ஆகிய 3 இடங்களில் சென்னை, கோவை, கேரளாவில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை 9 மணிமுதல் சோதனை மேற்கொண்டனர்.

    ரத்தினத்தின் அலுவலகத்தில் நேற்று மாலை சோதனை நிறைவடைந்தது. கோவிந்தனின் வீட்டில் இன்று அதிகாலை 5 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. ரத்தினத்தின் வீட்டில் தொடர்ந்து நள்ளிரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

    இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பணத்தை எண்ணுவதற்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோதனைக்கு அதிகாரிகள் வந்தபோது ரத்தினம் வீட்டில் இல்லை. அவரது மனைவி செல்வி, முதல் மகன் துரைராஜ், அவரது மனைவி மற்றும் 2-வது மகன் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ரத்தினம் தற்போது வெளியூரில் இருப்பதாகவும், சோதனை குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். ரத்தினத்தின் 2-வது மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று மாலை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ரத்தினத்தின் வீட்டு முன்பு குவிந்தனர். நள்ளிரவை தாண்டியும் அவர்கள் அதே இடத்தில் இருந்ததால் போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமலும், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று காலையிலும் அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

    Next Story
    ×