search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar card"

    • அடையாள ஆவணத்தை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும்.
    • புதுப்பித்தலின் மூலம் ஆதார் தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    அனைவருக்கும் யூ.ஐ.டீ.ஏ.ஐ. என்ற ஆதார் எண் வழங்கி ஆதார் அட்டை ஆவணம் மூலம் நலத்திட்ட உதவிகள், வங்கி சேவை, பத்திர பதிவுக்கு ஆவணமாக்கப்படுகிறது.

    மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பங்களுக்கான அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவடைந்தவர்கள் தங்கள் அடையாள போட்டோ, முகவரி ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

    புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம், முகவரிக்காக அடையாள ஆவணத்தை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும்.

    புதுப்பித்தலின் மூலம் ஆதார் தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யலாம். இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவி கள், சேவைகளை சிரமம் இன்றி பெறலாம்.

    இதற்காக 'மை ஆதார்' என்ற https://www.myaadhaar.uidai.gov.in/ இணைய தளத்தில், மை ஆதார் செயலியிலும் 'அப்டேட் டாக்குமென்ட்' என்ற பிரிவையும் பயன்படுத்தலாம்.

    பொதுமக்கள் இத்தளத்தில் ரூ.25 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம். அல்லது ஆதார் மையம் சென்று ரூ.50 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம்.

    தொலைபேசி, குறுந்தகவல் மூலம் ஆதார் குறித்து வரும் தகவல்களுக்கு ஆதார் விபரத்தை தர வேண்டாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் தங்கள் ஆதார் தகவல்களை இலவசமான முறையில் 'மை-ஆதார்' இணையதள பக்கத்தின் மூலம் மார்ச் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
    • ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள் தங்கள் ஆதார் தகவல்களை இலவசமான முறையில் 'மை-ஆதார்' இணையதள பக்கத்தின் மூலம் மார்ச் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஆதார் இணையதள பக்கத்தின் வாயிலாக தகவல்களைப் புதுப்பிக்க ரூ.25 கட்டணமாக செலுத்தவேண்டியிருந்தது. இருப்பினும், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்வதற்கு வழக்கத்தில் உள்ள கட்டணம் பொருந்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோவில்கள் கட்டப்பட்ட திட்டம்.
    • நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறியிருப்பதாவது:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்யும் பக்தர்கள், இனி ஆதார் அட்டை மூலம் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோயில்கள் வரை கட்டும் பணி திட்டமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநில அறநிலையத்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் அரசியல் சார்பற்ற இந்து தர்ம பிரச்சார குழு ஏற்பாட்டில் இந்த கோவில் கட்டும் பணிகள் நடைபெறுவதாக ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறியது குறிப்பிடத்தக்கது.

    • ஆதார் அட்டையில் வயதை மாற்றக்கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன்.
    • எந்த ஒரு நலத்திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்கமுடியவில்லை.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி தாயனூரை சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (வயது 41) ஒரு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது வாக்காளர் அடையாள அட்டையில் 3.5.1982 என்று பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ரேஷன் கார்டில் 41 வயது என்று உள்ளது. ஆனால் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 1900 என்று ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின்படி எனக்கு 123 வயது. தற்போது ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்து ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிலும் எனது வயது மாறுகிறது.

    ஆதார் அட்டையில் வயதை மாற்றக்கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன். ஆனால் மாற்ற முடியவில்லை. இதனால் பல இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எந்த ஒரு நலத்திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்கமுடியவில்லை.

    இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் நிலவி வருகிறது. எனவே, எனது வயதை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேஷன்கார்டு, திருமண பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை இதற்கான சான்றாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • சான்று எதுவும் இல்லாவிட்டால், குடும்ப தலைவரின் சுய ஒப்புதல் பத்திரத்தை பூர்த்தி செய்து முகவரியில் திருத்தம் செய்யலாம்.

    புதுடெல்லி:

    யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழங்கும் ஆணையம், பொதுமக்களுக்கான ஆதார் விவரங்களை வழங்கி வருகிறது.

    ஆதாரில் ஏற்கனவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது குடும்பத் தலைவர் முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

    அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த முறையில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தாங்களாகவே மாற்றிக் கொள்வதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். https://myaadhaar.uidai.gov.in// என்ற இணையதளத்தில் சென்று இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். குடும்ப தலைவரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து இந்த நடவடிக்கையை தொடங்கலாம்.

    குடும்ப தலைவருக்கும், முகவரியில் மாற்றம் அல்லது திருத்தம் மேற்கொள்ள விரும்பும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள உறவுமுறைக்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    குறிப்பாக ரேஷன்கார்டு, திருமண பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை இதற்கான சான்றாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்று எதுவும் இல்லாவிட்டால், குடும்ப தலைவரின் சுய ஒப்புதல் பத்திரத்தை பூர்த்தி செய்து முகவரியில் திருத்தம் செய்யலாம்.

    இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் செலுத்திய பிறகு குடும்ப தலைவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.

    எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் இணையதளத்தில் குடும்ப தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு மற்ற உறுப்பினர்கள் ஆன்லைனில் ஆதாரில் முகவரி மாற்றம் செய்யலாம்.

    • இணைய இணைப்பு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் அடையாள சரி பார்ப்புக்கான ஒரே ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது.
    • மின்னணு முறையில் தங்களுடைய அடையாள சான்றுகளை சரி பார்க்க ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

    புதுடெல்லி:

    எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் எண்ணை பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கைப்பேசி எண், வங்கி கணக்கு எண், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக ஆதார் எண்ணை பகிரும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. பல்வேறு வகையான பலன்கள், சேவைகளை பெற பொதுமக்கள் விருப்பப்படி ஆதாரை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். ஆனால் வங்கி விவரங்கள், பான் கார்டு உபயோகங்களை போன்று ஆதார் அட்டையையும் எண்ணையும் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    இணைய இணைப்பு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் அடையாள சரி பார்ப்புக்கான ஒரே ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது. மின்னணு முறையில் தங்களுடைய அடையாள சான்றுகளை சரி பார்க்க ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

    அதே சமயம் எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் எண்ணை பகிரும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது தளத்தில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம். ஆதார் வைத்திருப்பவர்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திற்கும் அதற்கான ஓ.டி.பி.யையும் அளிக்க வேண்டாம்.

    ஆதார் எண்ணை பகிராமலும் வசதிகளை பெற முடியும். குறிப்பிட்ட இடங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்துவதை விரும்பாத பட்சத்தில், விர்ச்சுவல் ஐடியை (வி.ஐ.டி.-மெய்நிகர் அடையாளம் காட்டி) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஐ.டி.யை உருவாக்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) வழங்குகிறது. இதை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் 'மைஆதார்' போர்ட்டல் வழியாக ஒருவர் விர்ச்சுவல் ஐடி எளிதாக உருவாக்கி, அங்கீகாரத்தை ஆதார் எண்ணுக்கு பதிலாக பெறலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பின்னர் இந்த 'வி.ஐ.டி.'யை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    ஆதார் எண்ணை பயோமெட்ரிக் முறையில் 'லாக்கிங்' செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு ஆதாரை பயன்படுத்த வாய்ப்பில்லை என்றால், லாக்கிங் செய்து கொள்ளலாம். தேவைபடும் சமயங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பான, மென்மையான, விரைவான அங்கீகார அனுபவத்தை உறுதி செய்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.

    ஆதார் கோரும் நிறுவனங்கள், அது எந்த நோக்கத்துக்காக எடுக்கப்படுகிறது என்பதை குறிப்பிடப்படும்படியும் ஒப்புதலை பெறவும் கூறப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெறும் நிறுவனங்கள், ஆதார் சட்டத்தின் விதிகள், பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்தவும், தரவுகளை வைத்து கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது.
    • 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய அடையாளமாகிவிட்டது. ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்தது. அதன் பிறகு வருமானவரி கணக்கு எண்ணுடன் இணைக்க உத்தர விடப்பட்டது.

    கடந்த மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்பதால் சிலர் ஆதாரை இணைக்க தயக்கம் காட்டி வந்தனர்.

    ஏனென்றால் 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே வீட்டில் ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இது எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.

    இந்த சூழலில் ரேஷன் கார்டுடன் வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இப்போது ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்து வரி எண்ணை இணைக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுவீடாக ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்துவரி எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதன் மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கு என்னென்ன சொத்து உள்ளது. எவ்வளவு வரி கட்டுகிறார்கள். இவர்கள் ஏழையா? வசதி படைத்த வர்களா? என்ற விவரம் துல்லியமாக தெரிந்துவிடும்.

    • ஆதாரில் ஆவணங்களை புதுப்பித்து வைத்திருப்பது, சிறந்த சேவைகள் பெற உதவுகிறது.
    • தற்போதைய அடையாளச் சான்று, முகவரிச் சான்றுடன் புதுப்பிப்பது நன்மை அளிக்கும்.

    ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பர் 9ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட ஆதார் விதிமுறைகள் 2022-ன் கீழ், பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இது வரையில் புதுப்பிக்காத ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு அதை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

    மை ஆதார் போர்ட்டல் மூலம் ஆன்லைனிலும் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்றும் தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று) பதிவேற்றுவதன் மூலம் பொது மக்கள் தங்கள் ஆதார்களைப் புதுப்பிக்கலாம்.

    மத்திய அரசின் நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    வங்கிகள், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பலவேறு நிதி வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை அங்கீகரித்து, அனைத்து வகையான சேவைகளை வழங்க ஆதாரைப் பயன்படுத்துகின்றன.

    ஆதார் அட்டையை தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுடன் புதுப்பித்து வைத்திருப்பது பொது மக்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் சிறந்த சேவைகள் மற்றும் துல்லியமான அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவும்.

    எனவே பொது மக்கள் தங்களுடைய ஆதார் எண்ணை புதுப்பிக்கத் தேவையான ஆவணங்களை இணைக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின் பேரிலானது.
    • நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடிக்கு அதிகமானோர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு தேர்தல் சட்டங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்காளர்களின் அடையாளத்தை நிறுவும் நோக்கில், ஏற்கனவே இருக்கும் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்ய வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம்-2021 அனுமதி அளித்து உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின் பேரிலானது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிவம் 6பி-ல் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.

    எனினும் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த வசதியும் இல்லை.

    அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது முற்றிலும் விருப்பத்தின் பேரிலானது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.

    இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

    முன்னதாக மாநிலங்களவையில் நேற்று முன்தினம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, 'நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடிக்கு அதிகமானோர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஆதார் எண் நகல், அதில் உள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்து சென்றால் போதுமானது.

    சென்னை:

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்கும் பணி கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது.

    வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் மற்றும் விசைத்தறி பயன்பாட்டாளர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது.

    இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மின் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    ஆதார் எண் நகல், அதில் உள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்து சென்றால் போதுமானது. மின்சார அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று வரை 54 லட்சத்து 55 ஆயிரம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2811 சிறப்பு கவுண்டர்கள் மூலம் 83 ஆயிரமும், ஆன்லைன் வழியாக 1.55 லட்சமும் இணைக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரே வாரத்தில் 54 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளன.

    • சிறு-குறு நிறுவனங்களின் உற்பத்தியாளர்களும் மின் கட்டண உயர்வால் தொழில் செய்ய முடியாத அளவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மின் அழுத்த நிறுவனங்களுக்கு 0 முதல் 50 கிலோவாட் உபயோகப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ.35 லிருந்து ரூ. 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    மின்சார பயனீட்டாளர்களை ஆதார் அட்டையுடன் இணைக்க சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இவர்களை ஆதார் எண்ணுடன் இணைத்து படிப்படியாக 100 யூனிட் இலவச மின்சார சலுகையை பறிப்பதே ஒன்றிய அரசின் நோக்கமாகும். இதனை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த முன்வந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதார் எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சார சலுகை பறிக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில்-ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மத்தியிலும் குறிப்பாக, வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

    மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மின் கட்டண உயர்வோடு, பொதுப் பயன்பாட்டிற்கான கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் ஆகியவற்றிக்கான மின்கட்டணம் இதுவரையில் 1-ஏ என்ற அடிப்படையில் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1-டி-யாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 கட்டணமும், நிலையான கட்டணம் ரூ. 200ம் வசூலிக்கப்படுகிறது.

    இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உபயோக மின் கட்டணத்துடன், பொதுப் பயன்பாட்டிற்கான கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டிய இரட்டைச் சுமை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாத வருமானத்தில் வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மின் கட்டணத்திற்கே என்று பெரும் தொகை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    காலங்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பை தற்போது வணிக பயன்பாடு கட்டணமாக மாற்றியுள்ளது முறையற்றதாகும். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருவதால் இதில் வணிக பயன்பாடு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்து பொதுமக்களும், குடியிருப்பு சங்கங்களும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

    சிறு-குறு நிறுவனங்களின் உற்பத்தியாளர்களும் மின் கட்டண உயர்வால் தொழில் செய்ய முடியாத அளவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நிரந்தர கட்டணம் (பிக்சட் சார்ஜஸ்) என்பது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அது தவிர குறைந்த மின் அழுத்த நிறுவனங்களுக்கு 0 முதல் 50 கிலோவாட் உபயோகப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ.35 லிருந்து ரூ. 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    50 முதல் 112 கிலோவாட் வரை உபயோகப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ. 300 என்றும், 112 கிலோ வாட்டுக்கு மேல் எச்.டி. தொழிற்சாலைகளுக்கு ரூ.35லிருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் பீக் ஹவர் சார்ஜஸ் மூலம் 15 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. உயர்வு, கொரோனா தாக்கம் ஆகியவற்றிலிருந்து மீள முடியாத சிறு-குறு நிறுவனங்கள் தற்போது மின் கட்டண உயர்வால் தொழில் நடத்த முடியாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயமும் நேர்ந்துள்ளது.

    எனவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பதை கைவிடவும், தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்திட வேண்டுமெனவும், அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் ஆகியவற்றிற்கு 1-ஏ என்ற அடிப்படையிலேயே கட்டண விகிதம் வசூலிக்க வேண்டுமெனவும், சிறு-குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வையும், பிக்சட் சார்ஜ் மற்றும் பீக் ஹவர் கட்டணத்தையும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    ஆதார் கார்டு நகலை சமர்ப்பிப்பதற்கு பதிவாக, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் ‘மாஸ்க் ஆதார் கார்டை’ பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    புதுடெல்லி:

    ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியிருந்தது. 

    “ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டுகளின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. எனவே, தனியார் நிறுவனம் உங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என்று கூறினாலோ, அல்லது உங்கள் ஆதார் கார்டு நகலைப் பெற விரும்பினாலோ, ஆதார் ஆணையத்திடம் இருந்து சரியான உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவேண்டும். 

    பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது மையங்களல் இ-ஆதார் டவுன்லோடு செய்வதை தவிர்க்கவேண்டும். அப்படியே டவுன்லோடு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டால், தேவையான நகல் எடுத்ததும், கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்ததை நகலை நிரந்தரமாக டெலிட் செய்துவிடவேண்டும். ஆதார் கார்டு நகலை சமர்ப்பிப்பதற்கு பதிவாக, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் ‘மாஸ்க் ஆதார் கார்டை’ (masked Aadhaar card) பயன்படுத்தலாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்த செய்தி இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன. டுவிட்டரில் ஆதார் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. ஏற்கனவே ஆதார் நகலை பல இடங்களில் கொடுத்துள்ள நிலையில், இப்போது இப்படி சொல்கிறார்களே, என பலர் கூறி உள்ளனர். 

    இதனையடுத்து, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. 

    ஆதார் ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், இந்த சுற்றறிக்கையின் மூலம் தவறான புரிதலுக்கும், தவறாக விளக்கம் அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக திரும்பப் பெறுவதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் (சாதாரண எச்சரிக்கையுடன்) பயன்படுத்தலாம் எனவும் கூறி உள்ளது. 
    ×