search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Indians"

    • கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
    • உறவினர், நண்பர்கள் சிலர் குடும்பத்தினருடன் ரெயில் நிலையம் வந்திறங்குவதை காண முடிகிறது.

    திருப்பூர் :

    கடந்த மார்ச் 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. திருப்பூரில் பணியாற்றி வந்த வடமாநிலத்தினர் பலர் பண்டிகை கொண் டாட்டங்களுக்கு சொந்த மாநிலம் பயணித்தனர். கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.பண்டிகை முடிந்து 2வாரங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் திருப்பூருக்கு பலரும் வர தொடங்கியுள்ளனர். சென்றவர்கள் மட்டுமின்றி திருப்பூருக்கு பலரை புதிதாக அழைத்தும் வருகின்றனர். உறவினர், நண்பர்கள் சிலர் குடும்பத்தினருடன் ரெயில் நிலையம் வந்திறங்குவதை காண முடிகிறது.

    வாரநாட்களை விட வார இறுதி விடுமுறை நாட்களில் திருப்பூரை கடந்து செல்லும் ரப்திசாகர், அரோனி, ஹிம்சாகர், ஸ்வர்ண ஜெயந்தி, எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட், பிலாஸ்பூர், பரூனி, கோர்பா சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட ரெயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    திருப்பூரில் அதிகமாக பீகார் மாநிலத்தவர் பணிபுரிகின்றனர்.அம்மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ெரயிலில் பொது பெட்டிகள் நிரம்பி வழியும் அளவு வடமாநிலத்தினர் வந்திறங்குகின்றனர்.இதனால் கடந்த இரு தினங்களாக திருப்பூர் ரெயில் நிலைய பிளாட்பார்ம் வடமாநிலத்தினரால் நிரம்பி வழிகிறது.திருப்பூருக்கு வேலைவாய்ப்பு தேடி வடமாநிலத்தினர் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால் தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது.
    • தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    டெல்லியைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார் உம்ராவ். இவர் டெல்லி பா.ஜ.க. பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    மேலும் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை என்றும், வந்த தகவலை பதிவேற்றம் செய்ததாகவும், இதில் எந்த உட்கருத்தும் இல்லை.

    நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பிரசாந்த் குமார் உம்ராவ் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது. இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆகையால் முன் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி இது போன்ற வீடியோக்களை பதிவு செய்வதை பார்க்கும்போது, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதட்டமான சூழலும் நிலவியது என கருத்து தெரிவித்தார். மேலும் நீதிபதி மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்து விட்டார். இந்த மனு குறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
    • புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கிருந்து ரெயில்களில் வருகிறார்கள்.

    மிக குறைந்த சம்பளத்தில் இவர்கள் வேலைபார்ப்பதாலும் அடிக்கடி லீவு எடுப்பது இல்லை என்பதாலும் பல நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன.

    கட்டுமான பணிகள், ஓட்டல்கள், அழகு நிலையங்கள், பின்னலாடை நிறுவனங்கள், தென்னந்தோப்பு பணிகள், விவசாய பணிகள், மளிகை கடை, காய்கறி மார்க்கெட் வேலைகள், மூட்டை தூக்குபவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என பல்வேறு நிறுவனங்களிலும் இவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, சேலம், நீலகிரி உள்பட பல மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். பீகார், ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல சமூக ஊடகங்களில் போலியான வீடியோ சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து பதட்டமான சூழல் உருவாகி உள்ளது.

    பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து உயர் அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும், போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்து உண்மை நிலையை அறிந்து வருகின்றனர்.

    இந்த சூழலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தமிழகத்தில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், '6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் இருப்பதாகவும், சரியான புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ள கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், திருமழிசை, மப்பேடு, பொன்னேரி பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பற்றிய விபரங்களை கணக்கெடுக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார். கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள மகேந்திராசிட்டி, மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை கணக்கெடுத்து வருகின்றனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அமைப்புசார் மற்றும் அமைப்பு சாரா துறைகளில் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் பணி அமர்த்துநர்கள் மேற்படி தொழிலாளர்கள் குறித்த விவரங்களை www.labour.tn.gov.in/ISM என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும், ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்பிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நலன்காத்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் பயணங்களின் போதும், இதர தருணங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது குறைகள், புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சட்டம்-ஒழுங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • பீகார், ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, எஸ்.பி., சஷாங் சாய், துணை கமிஷனர் அபிஷேக் குப்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின் அமைச்சர் மு.சாமிநாதன் பேசியதாவது:-

    வடமாநிலத்திலிருந்து, தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பாதுகாப்பு குறித்து முதல்வர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்த நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பீகார், ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். அவர்களின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என்று பாராட்டு தெரிவித்தனர். வடமாநிலத்தினர் சொந்த ஊருக்கு, பண்டிகையை முன்னிட்டு சென்றுள்ளனர். தவிர பயந்தோ, அச்சுறுத்தலுக்குட்பட்டோ செல்லவில்லை. வதந்தி பரப்புவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புகார்கள் ஏதும் வந்தால், உடனடி நடவடிக்கை, சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

    பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் முழுக்க முழுக்க வட இந்தியர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கு 21 பேர், இயந்திரவியல் பொறியாளர் பணிக்கு 9 பேர், மின்னியல் பொறியாளர் பணிக்கு 5 பேர் உட்பட மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 42 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 24-ந் தேதி வெளியிடப்பட்டது.

    அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 11-ந்தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 65 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது தான் அதிர்ச்சியளிக்கும் வி‌ஷயமாகும்.

    சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணியாளர்களும், அதிகாரிகளும் கடந்த 2003-ம் ஆண்டு வரை முழுக்க முழுக்க தமிழக அளவில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2003-ம் ஆண்டிற்கு பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர். இப்போக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போது முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர்.

    அதற்கு ஏற்ற வகையில் தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு வரை சென்னை பெட்ரோலிய நிறுவனம் நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஆள் தேர்வுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை செய்து தான் முழுக்க முழுக்க வட இந்தியர்கள் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு அஞ்சல்துறை பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத அரியானா மாணவர்கள் எப்படி 96 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனரோ, அதேபோல் தான் சென்னை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியரை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து முறைகேடுகளும் செய்யப்படுகின்றன. இதற்கு சென்னை பெட்ரோலிய நிறுவன நிர்வாகமும் துணை போகிறது.

    அதிகாரிகள் நிலையிலான நியமனங்களில் மட்டுமே வட இந்தியர் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது தொழில் பழகுனர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் வட இந்தியர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றனர்.

    சென்னை பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்பட்டது. அதற்கு கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழாய்ப் பாதை அமைக்க ஒத்துழைத்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று சென்னை பெட்ரோலிய நிறுவனம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றாமல் வட இந்தியர்களை பணியில் திணிக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

    தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 75 விழுக்காடும், அதற்கு கீழ் உள்ள பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், இந்த சமூக அநீதியைக் கண்டித்து சென்னை பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Ramadoss

    ×