search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central prison"

    மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் உருவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaduraiCentralPrison
    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள்  சட்டைகளை அவிழ்த்து சிறையில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை வீசினர். சிறை அருகே உள்ள சாலைகளில் கற்களை வீசியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiCentralPrison
    ஜெயில்களில் சோதனை நடத்துவது காலம் கடந்த நடவடிக்கை என்று நல்லக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TNPrisons #Nallakannu

    நாகர்கோவில்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புழல் ஜெயிலில் கைதிகள் அறையில் பயன்படுத்தப்பட்ட டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் துணை இல்லாமல் ஜெயிலுக்குள் டி.வி. கொண்டு செல்ல முடியாது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகம் முழுவதும் ஜெயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை காலம் கடந்து நடத்தப்படும் நடவடிக்கை ஆகும்.

    தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக கூறி வருகிறார்கள். ஆனால் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளது. இதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    27 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதில் சட்ட சிக்கலும் இல்லை. மக்கள் ஆதரவும் அளித்துள்ளனர். எனவே அவர்களை தாமதம் இல்லாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

    தமிழக அமைச்சர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயபாஸ்கர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

    ஆட்சியை தக்க வைக்க வேண்டும், வரும் தேர்தலை அதிகாரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டே அவர்கள் செயல் படுகிறார்கள். மக்களை பற்றி கவலைப்பட வில்லை. ஜனநாயக விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

    அ.தி.மு.க. அரசு பாரதிய ஜனதாவின் கை பொம்மையாக உள்ளது. எச். ராஜா உள்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் வரைமுறை இல்லாமல் பேசுகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூத்துக்குடிக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் வந்தபோது, அதே விமானத்தில் வந்த மாணவி சோபியா பாரதிய ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டதால் அவர் கைது செய்யப்பட்டும், அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கிய பிறகு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பிரதமர் மோடியும் காலம் கடந்து வந்தே இங்கு பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, மலை வாழ் மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.

    நாகர்கோவிலில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான அடிப்படை வசதி பற்றி அரசு கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPrisons #Nallakannu

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். #TNPrisons
    சென்னை:

    சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

    இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

    சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில்  40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    ×