search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதிகள்"

    • கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி உத்தரவு.
    • ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனையில் உள்ள கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி, விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, கடலூர் 4, கோவை 6, வேலூர் 1, புழல் 1 என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

    • பாடலுக்கு கைதிகள் நடனமாடினர்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் கைதிகளோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் மறுவாழ்வுக்காக சிறை நிர்வாகம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் மன அழுத்தம் குறைக்க பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    சமீபத்தில் சிறைக்கு வந்து சென்ற நடிகர் பார்த்திபன், சிறை கைதிகள் மன அழுத்தம் குறைக்க இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார்.

    அதன்படி, பார்த்திபன் மனித நேய மன்றம் சார்பில், காலாப்பட்டு சிறையில் இசை நிகழ்ச்சி நடந்தது.

    இதில், பாடகர்கள் ஸ்ரீராம், சபிதா, தந்தை பிரியன் உட்பட பலர் கலந்து கொண்டு பாடல் பாடி அசத்தினர். பாடலுக்கு கைதிகள் நடனமாடினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறை தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தனர். பாடகர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் கைதிகளோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
    • வீடியோ கால் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
    • கேரள மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 26 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகளான 5 வயது சிறுமி, கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

    மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த அஸ்பாக் ஆலம்(வயது28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்பாக் ஆலமிற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார்.

    அவர் மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளில் 13 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், கொலை குற்றச்சாட்டுக்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றச்சாட்டுகளுக்கு 5 ஆயுள் தண்டனைகள், 49 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ7.20லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த 110 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அஸ்பாக் ஆலமிற்கு தூக்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து அஸ்பாக் ஆலம் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களின் தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதன்படி அஸ்பாக் ஆலம் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 26 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். கடந்த 32 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பல குழந்தைகளை கொன்ற களியக்காவிளையை சேர்ந்த அழகேசன் என்பவர் 1979-ம்ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

    14 பேரை கொடூரமாக கொன்ற சந்திரன் என்பவர் 1991-ம் ஆண்டு கண்ணூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அதன்பிறகு பல வழக்குகளில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை. மாநிலத்தில் உள்ள 4 சிறைகளிலும் 21 மரண தண்டனை கைதிகள் தூக்கிற்காக காத்திருக்கிறார்கள்.

    திருவனந்தபுரம் பூஜாப்புரா சிறையில் 9 பேரும், திருச்சூர் விய்யூரில் 5 பேரும், கண்ணூரில் 4 பேரும், விய்யூர் உயர் பாதுகாப்பு சிறையில் 3 பேரும் உள்ளனர். நீதிமன்றங்களில் மேல்முறையீடு உள்ளிட்ட காரணங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    • மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
    • 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட சிறைச் சாலைகளில் தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிறைக் கைதிகளுக்கான சிறை நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்த நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூா் கிளை சிறைச்சாலையில் தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் சுசீலா தலைமையிலும், கும்பகோணம் கிளை சிறைச்சாலையில் திருவிடைமருதூா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்

    சிவபழனி தலைமையிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் தஞ்சாவூா் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் பாரதி தலைமையிலும், திருச்சி மத்திய சிறையில் தஞ்சாவூா் குற்றவியல் நீதித்துறை விரைவு நீதிமன்ற நடுவா் முருகேசன் தலைமையிலும் நடைபெற்றது.

    இவற்றில் மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

    இந்த நிகழ்வில், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா், இளநிலை நிா்வாக உதவியாளா் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட குண்டர் சட்டம் பாய்ந்த கைதிகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு சிறையில் வழங்கும் உணவுகள் தவிர கேன்டீன் மூலமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழவகைகளும் கொடுக்கின்றனர். இதனை கைதிகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

    இப்படி வழங்கப்படும் பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மத்திய சிறையில் உள்ள 7-வது பிளாக் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை தோண்டி எடுத்தனர். அதில் ஆப்பிள், மாதுளை, வெல்லம் உள்பட பல்வேறு பழங்களை போட்டு ஊற வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அதனை கைப்பற்றிய சிறை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் அந்த ஊறலை அங்கு போட்டு வைத்த கைதிகள் யார் ? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மதுரையில் கைதிகளுடன், போலீசார் கைப்பந்து விளையாடினர்.
    • கைதிகள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கைப்பந்து விளையாடும் கைதிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.

    • சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சிறை பஜார் 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இயற்கை உணவுகள் தரமான செக்கு எண்ணெய் வகைகள், படுக்கை விரிப்புகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புழல் மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட அனைத்து சிறைகளின் முன்பும் இந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறை துறை சார்பில் கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதை சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி தெரிவித்து உள்ளார். இதற்கான நடவடிக்கைகளில் சிறை துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். சிறை பஜார் 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை, சேலம், திருச்சி, கடலூர், மதுரை, வேலூர், பாளையங்கோட்டை, கோவை ஆகிய மத்திய சிறைகளிலும் சென்னையில் புழல் சிறை எண்.1 மற்றும் 2 மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் கிடைக்கும் லாபத்தில் கைதிகளுக்கு 20 சதவீதமும் அரசுக்கு 20 சதவீதமும், சிறை ஊழியர்கள் நலனுக்கு 20 சதவீதமும் பொருட்கள் தயாரிப்பு நிதிக்கு 40 சதவீதமும் பிரித்து வழங்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.
    • ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை:

    மதுரை மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக சிறை நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

    அவர்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களை விற்க சிறை வளாகத்தில் அங்காடி உருவாக்கப்பட்டு உள்ளது. மதுரை மத்திய ஜெயிலுக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய ஜெயிலிலும் கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து 1 லட்சம் புத்தகங்களை பெறுவது என்று ஜெயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.

    சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு புத்தகங்களை சேகரித்து வருகின்றனர். 'புத்தக திருவிழா முடிவதற்குள் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

    இந்தநிலையில் மதுரை கூடல்நகர், ரெயிலார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 92) என்பவர் மதுரை மத்திய ஜெயிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "தன்னிடம் உள்ள 300 புத்தகங்களை, ஜெயில் நூலகத்திற்கு இலவசமாக வழங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேலும் வயது முதிர்வு காரணமாக தன்னால் நேரில் வர முடியாது. அதனை நேரில் வந்து பெற்றுச்செல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மத்திய ஜெயிலில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்து 300 புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

    ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுபற்றி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, ஏராளமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கி, வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்து வந்தேன். எனக்கு புத்தகங்களே சொத்து, பொழுதுபோக்கு, வெளியில் யாரை பார்க்கச் சென்றாலும், என்னை பார்க்க வருவோருக்கும் புத்தகமே பரிசாக அளிப்பேன்.

    என்னிடம் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன. அவற்றை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் மதுரை சிறைச்சாலையில் நூலகம் அமைப்பது தெரியவந்தது. அதனால் என்னிடம் இருந்த 300 புத்தகங்களை வழங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • டெல்லியில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி கவர்னர் சக்சேனா சமீபத்தில் சிறைக்கைதிகளின் அடிப்படை மனிதத் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறைகளுக்கான 2 வார ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து டெல்லியில் உள்ள 16 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

    • கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவின் முதல் அலை தாக்க தொடங்கியபோது சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
    • 3 சிறைகளில் இருந்து, 5,525 கைதிகள் இடைக்கால ஜாமீன் மற்றும் அவசர பரோல் மூலம் விடுவிக்கப்பட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி ஆகிய 3 முக்கிய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவின் முதல் அலை தாக்க தொடங்கியபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

    அந்தவகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 3 சிறைகளில் இருந்தும், 5,525 கைதிகள் இடைக்கால ஜாமீன் மற்றும் அவசர பரோல் மூலம் விடுவிக்கப்பட்டனர். இதில் 19 சதவீதத்துக்கும் அதிகமான கைதிகள், அதாவது 1,063 கைதிகள் இன்னும் சிறைக்கு திரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட கேள்விக்கு மேற்கண்ட சிறை நிர்வாகம் அளித்த பதில் மூலம் இது தெரிய வந்துள்ளது. அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-வது அலையின்போது விடுவிக்கப்பட்ட கைதிகள் கோர்ட்டின் அடுத்த உத்தரவு வந்த பின்னரே சரணடைய முடியும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×