search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் படிக்க 300 புத்தகங்கள் வழங்கிய 92 வயது முதியவர்
    X

    ஜெயில் கைதிகள் படிப்பதற்காக பாலகிருஷ்ணன் புத்தகங்களை வழங்கினார்.

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் படிக்க 300 புத்தகங்கள் வழங்கிய 92 வயது முதியவர்

    • மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.
    • ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை:

    மதுரை மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக சிறை நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

    அவர்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களை விற்க சிறை வளாகத்தில் அங்காடி உருவாக்கப்பட்டு உள்ளது. மதுரை மத்திய ஜெயிலுக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய ஜெயிலிலும் கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து 1 லட்சம் புத்தகங்களை பெறுவது என்று ஜெயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.

    சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு புத்தகங்களை சேகரித்து வருகின்றனர். 'புத்தக திருவிழா முடிவதற்குள் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

    இந்தநிலையில் மதுரை கூடல்நகர், ரெயிலார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 92) என்பவர் மதுரை மத்திய ஜெயிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "தன்னிடம் உள்ள 300 புத்தகங்களை, ஜெயில் நூலகத்திற்கு இலவசமாக வழங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேலும் வயது முதிர்வு காரணமாக தன்னால் நேரில் வர முடியாது. அதனை நேரில் வந்து பெற்றுச்செல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மத்திய ஜெயிலில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்து 300 புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

    ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுபற்றி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, ஏராளமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கி, வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்து வந்தேன். எனக்கு புத்தகங்களே சொத்து, பொழுதுபோக்கு, வெளியில் யாரை பார்க்கச் சென்றாலும், என்னை பார்க்க வருவோருக்கும் புத்தகமே பரிசாக அளிப்பேன்.

    என்னிடம் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன. அவற்றை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் மதுரை சிறைச்சாலையில் நூலகம் அமைப்பது தெரியவந்தது. அதனால் என்னிடம் இருந்த 300 புத்தகங்களை வழங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×