search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyakkannu"

    அரக்கோணத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
    அரக்கோணம்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    நேற்று காஞ்சீபுரத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு அரக்கோணம் வழியாக திருத்தணி செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.

    அரக்கோணம் இந்திராகாந்தி சிலை அருகே உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டு திருத்தணிக்கு செல்வதற்காக அய்யாக்கண்ணு காரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த பா.ஜனதாவினர் திடீரென அய்யாக்கண்ணு இருந்த காரின் கதவை திறந்து தாக்க முயற்சித்தனர்.

    அப்போது அய்யாக்கண்ணுவின் நண்பர், காரின் கதவை மூடி அவரை அனுப்பி வைத்தார். எனினும், அவரது காருக்கு பின்னால் சங்க நிர்வாகிகள் வந்த வேனை மடக்கி கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    இதில் வேனில் இருந்த பெரியசாமி (வயது 75), காமராஜ் (74) ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அய்யாக்கண்ணு காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

    அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த பெரியசாமி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணம் நகர பா.ஜனதா முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    மேலும் அவருடன் வந்தவர்கள் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாக்குதல் சம்பவம் குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் பேசுவதற்குகூட உரிமையில்லை. நான் எதுவும் தவறான பிரசாரம் செய்யவில்லை.

    நதிகள் இணைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன்.

    நாங்கள் பிரசாரம் செய்து வந்த பழனி, வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் எங்களை தாக்கினர். இது ஜனநாயக நாடா? இல்லை சர்வாதிகார நாடா? என்று தெரியவில்லை.

    எங்களை தாக்க முயற்சித்து எங்கள் வேனின் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். #Tamilnews

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி சென்னை தலைமைச்செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
    கடலூர்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இவர் கடலூர் வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து கடந்த 1.3.2018 முதல் விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தி வருகிறோம். இதுவரை 29 மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு அளித்து இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகளில் இருந்து 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கேரளா வழியாக கடலில் கலக்கிறது. ஆகவே இந்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

    இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றாவிட்டால் வருகிற 10-ந்தேதி முதல் தலைமைச் செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, முதல்- அமைச்சர் எங்களை சந்தித்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    வேலூர் கலெக்டர் ஆபீசில் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்ற இந்து அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தின் நீட்சியாக நேற்று வேலூருக்கு வந்திருந்தார். பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவரை, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற இந்து அமைப்பினர் தாக்க முயன்றனர்.

    சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர், தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன் பட்டியில் மதமாற்றம் செய்ய தாக்குதல் நடத்துபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது தான், அய்யாக்கண்ணுவை ஒருமையில் பேசி தாக்க முற்பட்டனர். மேலும் கோ‌ஷம் எழுப்பினர்.

    கலெக்டர் அலுவலகத்தில் அனுமதியில்லாமல் கோ‌ஷம் எழுப்பிய புகாரில் சத்துவாச்சாரி போலீசார், சக்தி சேனா இந்து மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ராஜகோபால் (வயது 48) உள்பட 4 நிர்வாகிகளை கைது செய்தனர்.

    ஆனால் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்றது தொடர்பாக, சக்தி சேனா அமைப்பினர் மீது இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 4 பேரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  #Tamilnews
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணுவை இந்து அமைப்பினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணமாக இன்று வேலூருக்கு வந்தார். வேலூர் கோட்டை அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். பிறகு, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க சென்றார்.

    அப்போது, நிருபர்களுக்கு அய்யாக்கண்ணு பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர்வளத்துறை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலாற்றில் அணைகள் கட்ட வேண்டும். தென்பெண்ணையாற்றை பாலாற்றுடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்க இன்று வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த கமிட்டிக்கு காவிரி விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமற்ற கமிட்டி என்றால் எங்களுக்கு தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சரை அழைப்போம். முதல்- அமைச்சர் வரவில்லை என்றாலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    அய்யாக்கண்ணு மோடி மீது விமர்சனம் வைத்ததால், அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக பாடை கட்டி வந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற அமைப்பினர் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்தனர். மோடியை பற்றி விமர்சிக்க உனக்கு தகுதியில்லை. விவசாய சங்கத்திற்கு நீ தலைவனாக இருப்பதற்கும் தகுதியில்லை என்று ஒருமையில் பேசினர்.

    இதனால் அய்யாக்கண்ணுவுக்கும், இந்து அமைப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சித்தனர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, மோதலை தடுத்து அய்யாக்கண்ணுவை மீட்டனர். பின்னர், இது பற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே, திருச்செந்தூரில் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக் கண்ணுவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
    ×