search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தலைமைச்செயலகத்தில் காத்திருப்பு போராட்டம்- அய்யாக்கண்ணு
    X

    சென்னை தலைமைச்செயலகத்தில் காத்திருப்பு போராட்டம்- அய்யாக்கண்ணு

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி சென்னை தலைமைச்செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
    கடலூர்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இவர் கடலூர் வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து கடந்த 1.3.2018 முதல் விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தி வருகிறோம். இதுவரை 29 மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு அளித்து இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகளில் இருந்து 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கேரளா வழியாக கடலில் கலக்கிறது. ஆகவே இந்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

    இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றாவிட்டால் வருகிற 10-ந்தேதி முதல் தலைமைச் செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, முதல்- அமைச்சர் எங்களை சந்தித்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×