search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car glass broken"

    • கல் வீச்சில் தடா பெரியசாமியின் பேரன் அதிரந்தன் என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை கிராமம். இங்குள்ள நோவா நகரில் தனது மகன் பிரபாகரனுடன் ஒரே குடும்பமாக வசித்து வருபவர் தடா பெரியசாமி (வயது 61).

    இவர் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்து வருகிறார். இதற்கு முன்னதாக தடா பெரியசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். மேலும் ஒரு அறக்கட்டளை நிர்வாகியாகவும் உள்ளார்.

    இதற்கிடையே சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறான சில தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனும் தடா பெரியசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி நிர்வாகி ஒருவர் வெளியிட்டு இருந்த வீடியோவில், திருமாவளவன் குறித்து பேச தடா பெரியசாமிக்கு எந்தவித தகுதியும் கிடையாது. அதையும் மீறி அவர் பேசிய அவதூறு பேச்சுக்கு தகுந்த தண்டணையை விரைவில் அனுபவிப்பார் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை வெளியில் சென்ற தடா பெரியசாமி பெரம்பலூரில் பல்வேறு கட்சி பணிகளை மேற்கொண்டார். பின்னர் இரவில் வீடு திரும்பிய அவர் வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான இன்னோவா காரை நிறுத்தியிருந்தார். அருகிலேயே இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இரவு சுமார் 11 மணியளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் பெயர், விபரம் தெரியாத 7 பேர் வந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும், கிராமம் என்பதாலும் யாரும் அதனை முதலில் அறிந்திருக்கவில்லை.

    பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர் தடா பெரிசாமியின் கார் மீது பாறாங்கற்களை வீசினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கட்டைகளால் காரை சரமாரியாக அடித்து உடைத்தனர். அத்துடன் காரின் டயர்களை கத்தியால் குத்தி கிழித்தனர். இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.

    சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர கதவை திறந்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களை வெளியே வரவிடாமல் தடுக்கும் வகையில், வீட்டின் மீதும் சரமாரியாக கருங்கற்களை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இந்த கல் வீச்சில் தடா பெரியசாமியின் பேரன் அதிரந்தன் (4) என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடுத்த ஒருசில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தடா பெரியசாமி மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் தனது காரையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். 

    நிலக்கோட்டையில் ஏ.டி.எம். மையம் முன்பு கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த இடத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். கார்டை பெற்று பணம் எடுத்து தருவதாக கொள்ளையடித்து செல்வது கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    அழகாபுரியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தை தாலுகா அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். முன்னாள் ராணுவ வீரர் உள்பட பலரிடம் இதுபோன்ற கொள்ளை நடந்து உள்ளது. இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டபோதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை.

    கரட்டுப்பட்டி டாஸ்மாக் கடையில் உள்ள விற்பனை மேலாளர் சதீஷ்குமார் கடையில் விற்பனையான ரூ.3 லட்சம் பணத்தை வங்கியில் கட்டுவதற்காக காரில் வந்தார். அந்த பணத்தை கட்டிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் இருந்த ரூ.7 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து சதீஷ்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் முன்பு இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    கோடம்பாக்கம்-தி.நகரில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன்-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் தெற்கு போக் ரோட்டில் வசித்து வருபவர் இக்னேசியஸ். இவர் தனது வீட்டு முன்பு தனக்கு சொந்தமான காரை நிறுத்தி இருந்தார். கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல கோடம்பாக்கத்தில் கால்டாக்சி டிரைவர் சூரியபிரகாஷ், தனது காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு தூங்கினார். அவரது கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள் திருடப்பட்டன. இதுபற்றி கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திருப்பதியில் நிறுத்தியிருக்கும் பக்தர்களின் கார்களை உடைத்து பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    திருப்பதி:

    திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் திருட்டு, வழிப்பறி நடப்பதாகவும், பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் செல்போன்கள், கேமராக்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் செல்வதாகவும் போலீசாருக்குப் புகார்கள் வந்தன.

    திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மொகந்தி, திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.பாஸ்கர்ரெட்டி தலைமையில் போலீசார் திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் திருப்பதி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக ஊற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இருவரும், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தொண்டமநாதம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.சிவாவேலுபிள்ளை (வயது 40) என்றும், ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொருவர் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் யாதவள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனு என்கிற ருத்ர‌ஷசீனு (23) எனத் தெரிய வந்தது.

    இருவரும் கூட்டாக சேர்ந்து திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் செல்போன்களை திருடியதாக கூறினர். பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் விலை உயர்ந்த செல்போன்கள், கேமராக்கள், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடி வந்துள்ளனர். கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது இருவரும் கூட்டாக சேர்ந்து 40-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த 30 செல்போன்கள், 3 கேமராக்கள், 93 கிராம் எடையிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    விஷ்வ இந்து பரி‌ஷத் நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த 2 போலீஸ்காரர்களை போலீசார் கைது செய்தனர். #Arrested
    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் சிட்கோ நகர் 18-வது தெருவில் வசித்து வருபவர் பத்ரிநாராயணன். விஷ்வ இந்து பரி‌ஷத் வடதமிழ்நாடு செய்தி தொடர்பாளராக உள்ளார். கடந்த 17-ந்தேதி இரவு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பத்ரி நாராயணனின் சொகுசு காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டு தப்பினர்.

    இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கார் கண்ணாடியை உடைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். கார் கண்ணாடியை உடைத்தது தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் கிங்ஸ்லி ஜெயராஜ், அயனாவரத்தை சேர்ந்த ஊர்காவல் படை போலீஸ்காரர் அகஸ்டின் மற்றும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் போலீஸ்காரர் கிங்ஸ்லி ஜெயராஜின் சகோதரரின் வீடு பத்ரி நாராயணன் வீடு அருகே உள்ளது. பத்ரி நாராயணன் காரை வீட்டு வாசலில் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும், கிங்ஸ்லி ஜெயராஜின் சகோதரருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையறிந்த கிங்ஸ்லி ஜெயராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார் கண்ணாடியை உடைத்தது தெரிந்தது. #Arrested

    அண்ணாநகரில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MoneyRobbery
    அம்பத்தூர்:

    அண்ணாநகர் 3-வது அவென்யூவை சேர்ந்தவர் ரபிஅகமது. தொழிலதிபர். இவர் நேற்று மாலை மசூதிக்கு காரில் சென்றார்.

    சாலையோரம் காரை நிறுத்தி விட்டு மசூதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள், 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுபற்றி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MoneyRobbery

    வளசரவாக்கம், சாலிகிராம், விருகம்பாக்கம் பகுதிகளில் கார் கண்ணாடியை நூதனமாக உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கம், சாலிகிராம், விருகம்பாக்கம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கார் கண்ணாடிகளை நூதனமாக உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இதையடுத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலிகிராமத்தில் கார் கண்ணாடியை உடைத்து கெள்ளைச்சம்பவம் நடந்தது. அந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் சந்தேகத்திற்கிடமான வாலிபரை பிடித்து இன்ஸ்பெக்டர் வேலுமணி விசாரணை நடத்தினார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தேவராஜ் என்பதும், வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரிந்தது.

    அவர் நூதன முறையில் கார் கண்ணாடிகளை உடைத்து பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். கொள்ளையில் ஈடுபட்டது குறித்து தேவராஜ் போலீசாரிடம் கூறும்போது, “கல்உப்பை வாயில் மென்று காரின் கண்ணாடியில் துப்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து அந்த கண்ணாடியை நூதன முறையில் உடைத்து பணத்தை திருடிச்செல்வேன்” என்று கூறி உள்ளார்.

    அவர் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும், அவரது கூட்டாளிகள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடும் கும்பலை சேர்ந்த ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

    குறிப்பாக புதுவைக்கு சுற்றுலா வரும் வெளிமாநில கார்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு பொருட்களை திருடுவது நடந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் எம்.பி. கண்ணன் புதுவையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரது காரின் கண்ணாடியை உடைத்து அவர் வைத்திருந்த பணத்தை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மானேஜர் பிரகாஷ் (வயது 37) என்பவர் உறவினரை பார்க்க காரில் புதுவை வந்தார். அரசு மருத்துவமனை அருகே காரை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து காரை எடுக்க வந்தபோது காரின் அருகே ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். காரின் ஒரு பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வாலிபரை பிரகாஷ் பிடிக்க முயன்றபோது அவன் தப்பி ஓடிவிட்டான்.

    இதையடுத்து பிரகாஷ் திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையின்போது அந்த வாலிபர் காரின் கண்ணாடியை உண்டி வில்லால் உடைத்து காரில் வைத்திருந்த லேப்-டாப்பை திருட முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பெரியக்கடை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் திருச்சி ராஜாஜி நகரை சேர்ந்த பிரசாத் (26) என்பதும், இவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து புதுவையில் பல்வேறு இடங்களில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடியதும் புதுவையில் 8 இடங்களிலும், காரைக்காலில் 2 இடங்களிலும் இதுபோல் பொருட்களை திருடி உள்ளனர்.

    இதையடுத்து பிடிபட்ட பிரசாத் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற 4 பேரை பிடிக்க பெரியக்கடை போலீசார் திருச்சி விரைந்துள்ளனர்.
    அரக்கோணத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
    அரக்கோணம்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    நேற்று காஞ்சீபுரத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு அரக்கோணம் வழியாக திருத்தணி செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.

    அரக்கோணம் இந்திராகாந்தி சிலை அருகே உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டு திருத்தணிக்கு செல்வதற்காக அய்யாக்கண்ணு காரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த பா.ஜனதாவினர் திடீரென அய்யாக்கண்ணு இருந்த காரின் கதவை திறந்து தாக்க முயற்சித்தனர்.

    அப்போது அய்யாக்கண்ணுவின் நண்பர், காரின் கதவை மூடி அவரை அனுப்பி வைத்தார். எனினும், அவரது காருக்கு பின்னால் சங்க நிர்வாகிகள் வந்த வேனை மடக்கி கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    இதில் வேனில் இருந்த பெரியசாமி (வயது 75), காமராஜ் (74) ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அய்யாக்கண்ணு காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

    அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த பெரியசாமி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணம் நகர பா.ஜனதா முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    மேலும் அவருடன் வந்தவர்கள் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாக்குதல் சம்பவம் குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் பேசுவதற்குகூட உரிமையில்லை. நான் எதுவும் தவறான பிரசாரம் செய்யவில்லை.

    நதிகள் இணைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன்.

    நாங்கள் பிரசாரம் செய்து வந்த பழனி, வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் எங்களை தாக்கினர். இது ஜனநாயக நாடா? இல்லை சர்வாதிகார நாடா? என்று தெரியவில்லை.

    எங்களை தாக்க முயற்சித்து எங்கள் வேனின் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். #Tamilnews

    ×