search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilakkottai"

    நிலக்கோட்டை அருகே பஸ்சில் ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.95 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    நிலக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களிலும் சோதனை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஆத்தூர் அருகே மல்லையாபுரத்தை சேர்ந்த கோபால் (வயது53) என்பவர் மதுரைக்கு செல்லும் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். தனியார் லாரி அலுவலகத்தில் பணிபுரியும் இவரிடம் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ஆவணங்கள் இன்றி ரூ.95 ஆயிரத்து 500 பணம் இருந்தது தெரிய வந்தது.

    அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் அடமானம் வைத்த தனது மனைவியின் நகையை மீட்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்.

    ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்க வில்லை. துணை தாசில்தார் ருக்மணி பணத்தை பறிமுதல் செய்து ஆவணங்களை காட்டி பின்னர் பெற்றுச் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.

    நிலக்கோட்டையில் ஏ.டி.எம். மையம் முன்பு கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த இடத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். கார்டை பெற்று பணம் எடுத்து தருவதாக கொள்ளையடித்து செல்வது கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    அழகாபுரியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தை தாலுகா அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். முன்னாள் ராணுவ வீரர் உள்பட பலரிடம் இதுபோன்ற கொள்ளை நடந்து உள்ளது. இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டபோதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை.

    கரட்டுப்பட்டி டாஸ்மாக் கடையில் உள்ள விற்பனை மேலாளர் சதீஷ்குமார் கடையில் விற்பனையான ரூ.3 லட்சம் பணத்தை வங்கியில் கட்டுவதற்காக காரில் வந்தார். அந்த பணத்தை கட்டிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் இருந்த ரூ.7 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து சதீஷ்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் முன்பு இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    நிலக்கோட்டை அருகே 2 வாலிபர்கள் மாயமானதை தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் பாபர் மீரான் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

    பின்னர் மீண்டும் சென்னைக்கு செல்வதாக கூறிச் சென்ற மீரான் மாயமானார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது நிறுவனத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பணிக்கு வரவில்லை என கூறி விட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அவரை தேடி வருகின்றனர்.

    இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள இ.கோவில்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜபாண்டி (வயது 35). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் விளாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம், மேட்டுப்பட்டி, விளாம்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெற்பயிர்களை 2-ம் போகமாக சாகுபடி செய்தனர்.

    அப்படி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வைகை அணையிலிருந்து வராத காரணத்தால் தற்போது நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

    எனவே தமிழக அரசு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை பேரணை உதவி செயற்பொறியாளர் தளபதி கூறுகையில் அரசு தரப்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஓரிரு நாட்களில் விவசாய பயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

    நிலக்கோட்டை அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் திருப்பதி ராஜா (வயது 20). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சகோதரி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்பினார். செம்பட்டி வந்த சகோதரியை அழைப்பதற்காக நிலக்கோட்டையில் இருந்து பைக்கில் திருப்பதி ராஜா சென்றுள்ளார்.

    செங்கோட்டை பிரிவு பகுதியில் வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரியின் அடியில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த திருப்பதி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

    இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் செல்வத்திடம் விசாரித்து வருகிறார்.

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வறியோர் நிவாரண தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் (வயது 52). இதே பிரிவில் வருவாய் ஆய்வாளராக சின்னக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    நிலக்கோட்டை அருகே உள்ள மெட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி கேசம்மாள் (42). கடந்த ஜனவரி மாதம் பாம்பு கடித்து இறந்து விட்டார். அவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை பெறுவதற்காக கேசம்மாளின் சகோதரர் ஜோசப் செல்வராஜ் (52) தாசில்தார் சரவணனிடம் விண்ணப்பம் அளித்திருந்தார்.

    இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனில் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என தாசில்தாரும், ரமேசும் கூறியுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஜோசப் செல்வராஜ் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகளை ஜோசப் செல்வராஜ் தாசில்தாரிடம் வழங்கினார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன், ஆய்வாளர்கள் ரூபாகீதா ராணி, கீதா ஆகியோர் சரவணன் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.



    நிலக்கோட்டை பகுதியில் ஸ்மார்ட் கார்டு நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகாவில் 2 லட்சத்துக்கும் மேல்மக்கள் வசித்து வருகிறார்கள். சுமார் 85 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ரேசன் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் போலி ரேசன் கார்டுகளை ஒழிக்கும் பொருட்டு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது.

    இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருந்தாலும் ஒருசில பேருக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்க வில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் இ-சேவை மையத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர்.

    இ-சேவை மையத்திற்கு வந்தால் கடந்த 1½ மாதங்களாக இதுபோன்ற கார்டுகள் வழங்கப்பட்டது நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்குகிறது. இந்த சமயத்தில் முதல் பட்டதாரி, பிறப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு தேவைப்படுகிறது.

    தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் நிலக்கோட்டை பகுதியில் உள்ள மக்கள் எந்த வித அரசு உதவியும் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

    ×