என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கினார்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பிரசாரம் தொடங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம் என தெரிவித்தார்.

    • பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்றார்.
    • வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க. என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    தர்மபுரி:

    தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டுமென்றால் பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி பா.ஜ.க. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு.

    சமூக நீதி பேசும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை பா.ம.க.வினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பா.ம.க.வின் கொள்கைக்கு முற்றிலும் நேர்மறையான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க. மனமில்லாமல் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி ஏன் அமைத்தது என்பது அக்கட்சியினருக்கே தெரியும்.

    மாநில அரசுக்கு சர்வேதான் எடுக்க முடியுமே தவிர, சென்சஸ் எடுக்கமுடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உறுதி கொடுத்தாரா?.

    அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் மாறி மாறி வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக குற்றம் சொல்கின்றனர். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க.

    ஒருமுறையாவது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

    தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை தரமுடியாது என பாஜக கூறிவிட்டதா? மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது தெரிந்து நிர்மலா சீதாராமன் தப்பித்துவிட்டார் என தெரிவித்தார்.

    • மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • அப்போது, இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க.தான் என கூறினார்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பற்றி தி.மு.க. ஏன் கவலைப்பட வேண்டும்?

    பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் கள்ளக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். யாருடனும் கள்ளக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை.

    தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாராவது பதவிக்கு வர முடியுமா?

    இந்தியாவிலேயே ஜனநாயகத்துடன் இயங்கும் கட்சி அ.தி.மு.கதான்.

    அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை தி.மு.க. ஆட்சியில் உயர்ந்துவிட்டன.

    கொரோனா காலத்தில் கூட அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம் என தெரிவித்தார்.

    • எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி உரை.
    • வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    வாக்கு எண்ணக்கை ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்றும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு 'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

    அப்போது வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. உங்கள் மத்தியில் பேச வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் ஒரு சாதாரண தொண்டராகவே கழித்தேன்.

    உங்களின் கடினமான உழைப்பு, கட்சியை ஆழமான வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களை சென்றடைகிறதா? அது பெண்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

    நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். எங்களுடைய பூத், வலிமையான பூத் என்ற முழக்கத்திற்கு உங்களின் கடின உழைப்பே காரணம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
    • போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் சர்ச் அருகே 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் சுற்றி திரிந்தார். அப்போது அங்கு பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையை சேர்ந்த துணை மாநில வரி அலுவலர் குணசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் அருகில் இருந்த கடைக்காரர்கள், சுற்றி திரியும் பெண் அதிக பணம் வைத்திருப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.

    உடனே அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவர் சேலையில் சுற்றி வைத்திருந்த பொருள் என்னவென்று பார்த்த போது அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பணத்துக்கு உரிய ஆவணங்களை இல்லாததால் அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி மணிமேகலை (வயது 36) என்பதும் கடந்த 5 நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று பிச்சை எடுத்து வைத்திருந்த பணம் என தெரியவந்தது.

    பறிமுதல் செய்த பணத்தை உதவி ஆணையாளர் (கணக்கு) தங்கவேல் ராஜன் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.
    • தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணக்கையும் ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    • 9-ந்தேதி-சேலம், 10-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 11-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-பொள்ளாச்சியில் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    • 1-ந்தேதி-சேலம், 2-ந்தேதி-நாமக்கல், 3-ந்தேதி-பெரம்பலூர், 4-ந்தேதி-திருச்சி, 5-ந்தேதி-கோவையில் நடிகர் போஸ் வெங்கட் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    நாஞ்சில் சம்பத் சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    3-ந்தேதி திருநெல்வேலி, 4-ந்தேதி-விருதுநகர், 5-ந்தேதி-தென்காசி, 6-ந் தேதி-தூத்துக்குடி, 7-ந் தேதி-ராமநாதபுரம், 8-ந் தேதி-மதுரை, 9-ந்தேதி-சேலம், 10-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 11-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-பொள்ளாச்சி, 13-ந்தேதி-திருப்பூர், 14-ந் தேதி-கோவை, 15-ந்தேதி-நீலகிரி.

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர், நடிகர் கருணாஸ் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    2-ந்தேதி-சிவகங்கை, 3 மற்றும் 4-ந்தேதி-ராமநாதபுரம், 5-ந்தேதி-திருநெல்வேலி, 6-ந்தேதி-தென்காசி, 7-ந்தேதி-விருதுநகர், 11 மற்றும் 12-ந்தேதி-தேனி, 13-ந் தேதி-மதுரை, 14-ந்தேதி-திண்டுக்கல்.

    நடிகர் போஸ் வெங்கட் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    1-ந்தேதி-சேலம், 2-ந்தேதி-நாமக்கல், 3-ந்தேதி-பெரம்பலூர், 4-ந்தேதி-திருச்சி, 5-ந்தேதி-கோவை.

    நடிகர் வாசு விக்ரம் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம்:-

    3-ந்தேதி-திருவள்ளூர், 4-ந்தேதி-அரக்கோணம், 5-ந்தேதி-வேலூர், 6-ந் தேதி-கிருஷ்ணகிரி, 7-ந்தேதி-திருவண்ணாமலை, 8-ந்தேதி-ஆரணி, 9-ந்தேதி-காஞ்சிபுரம், 10-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், 11-ந்தேதி-தென்சென்னை, 12-ந்தேதி-மத்திய சென்னை.

    • சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.அரசு நடவடிக்கை எடுத்தது.
    • தி.மு.க.வின் சாதனை 33 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.50ஆயிரம் கோடிக்கு உயர்த்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே அவர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது:-

    எனது தேர்தல் பிரசாரத்தை ஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்குகிறேன். மோடி ஆட்சியில் 40 லட்சம் கோடி தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    பொருளாதாரத்தில் இந்தியா 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் ஒரு நாடு உயர்ந்தால் தன் மக்கள் உயரமுடியும். அது மோடியால் மட்டும் தான் முடியும். இதுதான் பா.ஜனதா அரசின் சாதனை.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் அவர்களது பொருளாதாரம் மட்டுமே உயர்த்து உள்ளது. டிஆர்.பாலு மற்றும் அவரது குடும்ப சொத்து மதிப்பு 350 மடங்கு உயர்த்து உள்ளது.

    சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவையே தி.மு.க. செய்த சாதனை. சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.அரசு நடவடிக்கை எடுத்தது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்து விட்டார்.

    இதே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர்களிடம் தி.மு.க. புகைப்படம் எடுத்து கொண்டது. இது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.சமூக நீதி என்பது தி.மு.க.வில் பேச்சளவில் தான் உள்ளது.

    இந்தியாவில் வங்கி கடனை வாங்கிவிட்டு பலர் ஓடிவிட்டனர். மோடி ஆட்சிக்கு வந்த உடன் எல்லோரையும் சுளுக்கு எடுக்க ஆரம்பித்தோம். யார் எல்லாம் கடன் வாங்கினார்கள்? யார் எல்லாம் திருப்பி செலுத்தவில்லை? என கணக்கெடுத்து வரா கடனில் இருந்து ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த 10ஆண்டில் மத்திய பா.ஜ.க. அரசு மூலம் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியாக வந்து உள்ளது. ஆனால் தி.மு.க.வின் சாதனை 33 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.50ஆயிரம் கோடிக்கு உயர்த்தி உள்ளது.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு 1 சதவீதம் கூட வாக்களிக்க உங்களுக்கு மனம் வராது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு ரூ.11ஆயிரத்து 930கோடி ஒதுக்கீடு செய்து இந்த பகுதி பொருளாதார வளர்ச்சிக்கு வழிசெய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர்.
    • அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகிய மூவரும் வர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர். ராகுல் செல்ல முடியாத இடங்களுக்கு பிரியங்காவும், அதேபோல் கார்கேவும் செல்வார்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் செல்லும் வகையில் பயண திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். தலைவர்கள் வருகைக்கான தேதி உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பீகாரில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணமான விளங்கியவர் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்.

    பாட்னா:

    பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் முதன்மையான அணிகளாக உள்ளன.

    இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணமான பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

    இதையடுத்து ராஷ்டிரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்காக ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.

    இந்நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் 26-ல் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்து செயல்பட்ட அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த முடியை எடுத்ததாக கூறுகிறார்கள்.

    ம.தி.மு.க. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தபோது அவர்களுக்கு விருதுநகர், ஈரோடு தொகுதியை நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். அவர்கள் கேட்காமலேயே அந்த தொகுதியை வழங்கினோம். தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். இது கவலை தரக்கூடிய செய்தியாகும். இதற்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தொழிலதிபராக இருக்கலாம். ஆனால் அவர் வணிக நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவா, வீழ்ச்சிக்காகவா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ரோடு-ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    டாரஸ் லாரிகளால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இங்கிருந்து வைரங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தை உரக்கிடங்கு மாவட்டமாக மாற்றி உள்ளனர். இதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

    தி.மு.க.வை சேர்ந்தவர்களின் வாகனங்கள் பறக்கும்படைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்.

    ஜாதி, மதத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குமரி மாவட்டத்தை பிளவுபடுத்த தி.மு.க., காங்கிரஸ் முயற்சி மேற்கொள்கிறது. கனிமவள கடத்தலின்போது லாரி மோதி 6 பேர் பலியானார்கள். இதற்கு இந்த அமைச்சரோ, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரோ இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கனிம வளங்களை மாநில அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×