என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும்.
    • பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர், பந்தலூர் பகுதியில் அவர் ஆதரவு திரட்டினார். இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த பாராளுமன்ற தேர்தல் அமையும். அத்துடன் வரலாற்றை மாற்றும் தேர்தலாகவும் இந்த தேர்தலானது இருக்க போகிறது.

    தற்போது நீலகிரி எம்.பியாக இருக்க கூடிய ஆ.ராசா இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக கூடலூர் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இருண்டகாலம் முடிந்து எப்போது நமக்கு பிரகாசமான காலம் வர போகிறது என ஏக்கத்தோடு காத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு விடிவு காலம் பிறக்க போகிறது.

    மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும். பிரதமர் மோடி ஆட்சியின் வளர்ச்சியை நீலகிரி மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு தோல்வி பயத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் அவருக்கு எதிராக அவரது பெயரை போன்றுள்ள 5 நபர்களை இறக்கியுள்ளனர்.

    எத்தனை பேர் வந்தாலும் மக்களிடம் அவருக்கான செல்வாக்கு உள்ளது. நிச்சயமாக அவர் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார்.
    • கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக வலம் வந்தவர். 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் அவரது துரதிருஷ்டம் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதனால் வடிவேலுவின் சிரிப்பும் அடங்கிப் போனது. சினிமா வாய்ப்புகள் அரிதான நிலையில் தனது 2-வது இன்னிங்சை மாமன்னன் படத்தின் மூலம் தொடங்கினார். அமைச்சர் உதயநிதியுடன் நடித்த அந்த படத்தில் மாமன்னன் பாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து அவரது 2-வது இன்னிங்ஸ் விறுவிறுப்பானது.

    இந்த நிலையில் இந்த தேர்தலில் அவரை பிரசாரத்துக்கு அழைத்தனர். ஆனால் ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார்.

    அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ய நடிகர்-நடிகைகள் அதிகம் இருப்பதால் தி.மு.க.வும் திரை நட்சத்திரங்களை அதிக அளவில் எதிர்பார்த்தது.

    இந்நிலையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இதையடுத்து வடிவேலுக்கு பதிலாக கருணாசை பயன்படுத்த தி.மு.க. முடிவு செய்தது. அதற்கு கருணாசும் ஒத்துக்கொண்டார். தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலில் 33-வது இடத்தில் கருணாஸ் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரை 10 நாட்கள் பிரசாரம் செய்யும்படி தி.மு.க. மேலிடம் அறிவித் துள்ளது.

    கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் 13 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இந்த பயண பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

    • தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
    • தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்த அவர் இன்று சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் இருந்து அவர் தருமபுரிக்கு புறப்பட்டு சென்றார். தே.மு.தி.க. சார்பில் அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
    • வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட த்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது.

    இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தபால் வாக்கு படிவத்தில் போலீசார் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி, வாக்குச்சாவடி எண், தொகுதி வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கி வருகின்றனர்.

    இதனை அவர்கள் சார்ந்துள்ள மாவட்டத்தின் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தேர்தல் அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டு அவர்கள் தபால் வாக்கினை பதிவு செய்வார்கள்.

    போலீசார்கள் தபால் வாக்கினை செலுத்திட தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?
    • விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பேசத் தொடங்கும்போது "வணக்கம்" என்று தமிழில் கூறியே பிரசாரம் செய்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

    தனது பேச்சின் இடையே திருக்குறளை கூறுவது, தனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பது என பிரதமர் மோடியின் தமிழ் பாசம் தேர்தல் களத்தில் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் தமிழக பாரதிய ஜனதா பொறுப்பாளர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், "தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லையே" என்றும் கூறி ஆதங்கப்பட்டார்.

    இதற்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். எங்கும் இந்தி, எதிலும் இந்தி என இந்தியை திணித்துவிட்டு பிரதமர் மோடி கண்ணீர் வடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

    நேற்று மாலைச் செய்தி:

    தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

    நேற்று காலைச் செய்தி:

    அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

    மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

    கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?

    ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

    கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

     பிரதமர் மோடி அவர்களே...

    கருப்புப் பணம் மீட்பு,

    மீனவர்கள் பாதுகாப்பு,

    2 கோடி வேலைவாய்ப்பு,

    ஊழல் ஒழிப்பு போல்

    காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,

    அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

    விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

    "எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!

    தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! என்று தெரிவித்துள்ளார்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேசிய அளவில் இருக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், கேரள மாநிலத்தில் அந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடப் போவதாகவும், ஆகவே அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்டு கோரிககை வைத்தது.

    ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்டு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தனும் வயநாடு தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தியை காங்கிரஸ் நிறுத்தியிருப்பதற்கு தனது கண்டன கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியின் ஆதரவுடன் ராகுல்காந்தியை வேட்பாளராக முன்னிறுத்துவது வெட்கக் கேடானது.

    அவர் இந்திய கூட்டணி வேட்பாளராக ஏன் முன்னிறுத்தப்படுகிறார்? இந்தியா என்ற முத்திரையை பயன்படுத்தி கேரளாவில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. கேரளாவில் பரதிய ஜனதா கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சீனிவாச வர்மா 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் உள்ளார்.
    • சீனிவாச வர்மா எம்.பி பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பூபதி ராஜு சீனிவாச வர்மா இவர் 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த தேர்தலில் நரசபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

    தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த சீனிவாச வர்மா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் சீனிவாச வர்மா உணர்ச்சிவசப்பட்டார்.

    கட்சி அலுவலகத்தில் இருந்த பா.ஜ.க. தாமரை சின்னத்தின் மீது கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். இதனைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க வாழ்க என கோஷம் எழுப்பினர்.

    பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடியே உணர்ச்சி வசப்பட்ட எம்.பி.யை அவரது ஆதரவாளர்கள் தூக்கி சமாதானம் செய்தனர்.

    சீனிவாச வர்மா 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் உள்ளார். தன்னுடைய 30 ஆண்டு கால உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    சீனிவாச வர்மா எம்.பி பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் பா.ஜ.க. தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.
    • ஆரணி பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடந்த 26-ந்தேதியன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 27-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கலுக்காக சென்றார். கூட்டணியில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருடன் சென்றனர். அங்கு சென்று புகைப்படம் எடுத்து அதை சசிகாந்த் செந்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் புகைப்படத்தில் அவருடன் பலரும் நிற்பது தெரிகிறது. இது தேர்தல் நடத்தை விதியை மீறிய சம்பவமாகும். ஆனால் அதைத் தடுக்காமல், தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டர் அனுமதித்துள்ளார். அதன்படி, அவர் ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. எனவே சசிகாந்த் செந்திலை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஆரணி பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடந்த 26-ந்தேதியன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, தேர்தல் முடிந்த பிறகு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இது மக்களை கவரும் நோக்கத்தில் செய்யப்பட்ட பிரசாரமாகும். தேர்தல் நடத்தை விதியின்படி புதிய திட்டங்களை அறிவிக்கக்கூடாது.

    எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நட்சத்திர பேச்சாளர் என்ற நிலையில் இருந்து அப்புறப்படுத்தி, இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.
    • வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

    மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலுடன் நடக்கிறது. இதைப்போல 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.

    இந்த நாட்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி காலை 7 மணி முதல் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ந்தேதி மாலை 6.30 மணி வரை இந்த கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதைப்போல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
    • அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

    அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்நிலையில் இன்று காலை சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்பு அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினார்.


    • தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
    • புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    சென்னை:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ந்தேதியே தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. என்றாலும், பங்குனி உத்திர நாளான 25-ந்தேதிதான் பெரும்பாலானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 27-ந்தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. தமிழகத்தில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு அளித்து இருந்தனர்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் தாக்கல் செய்திருந்தனர். புதுச்சேரியில் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, வேட்பாளர்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. இதனால், பல இடங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இறுதியில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல், புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

    அதன்பின்னர், வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள்? என்ற இறுதி விவரம் தெரியவரும். தொடர்ந்து சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும்.

    அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சிக்கான சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 152 சுயேச்சை சின்னங்களில் இருந்து சின்னம் ஒதுக்கப்படும்.

    • பிரசாரத்தை துவங்கி ஒட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஆய்வு செய்ய காவல் துறைக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுக்க சூடுபிடிக்க துவங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவங்கி ஒட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு மறைமுகமாக பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய காவல் துறைக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், வைரல் வீடியோ தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில், "கோவை ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்கு பதில், கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோவுக்கு பதில் அளிக்க முடிவு செய்துள்ளார்."

    "ஆரத்தி எடுப்பவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக வெகுமதி அளிப்பது நம் கலாச்சாரம். இந்த வழக்கத்தை நாங்கள் தேர்தல்களில் பின்பற்றுவது கிடையாது. மற்றவர்களை போன்று ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நாங்கள் நம்பவில்லை என ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம்."

    "இன்று பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளால் உண்மையான பணப் பரிமாற்றம் நடக்கும் போது கோவை ஆட்சியர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

    ×