என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி-கும்மி நடனம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கோவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வெள்ளக்கிணறு பகுதியில் அவருக்கு கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி-கும்மி நடனம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அண்ணாமலையும் வேனில் இருந்து இறங்கிபொதுமக்களுடன் சேர்ந்து வள்ளி கும்மி நடனம் ஆடினார். அப்போது அங்கு திரண்டு இருந்தவர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

    இதுபற்றி அண்ணாமலை கூறுகையில் வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளி கும்மிக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரிய கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும்போது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும். கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தேசிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் ஆகியோரும் தங்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்துக்கு வர உள்ளனர்.
    • அடுத்த வாரம் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரம் அடைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலை யில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

    தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தேசிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் ஆகியோரும் தங்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்துக்கு வர உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் இதுவரை கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கோவையில் நடந்த பிரமாண்ட ரோடு ஷோவிலும் பங்கேற்றார். மேலும் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வர இருக்கிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் 4 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 9-ந்தேதி, 10-ந்தேதி, 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய 4 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.

    வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அப்போது தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன், கள்ளக்குறிச்சி தொகுதி பா.ம.க. வேட்பாளர் தேவதாஸ், திருவண்ணாமலை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், ஆரணி தொகுதி பா,ம.க. வேட்பாளர் கணேஷ் குமார், சிதம்பரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினி, கடலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான் ஆகியோருக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.

    அன்று மாலை 6 மணிக்கு தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகரில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அப்போது மத்திய சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் செல்வம், வடசென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் வேணுகோபால், காஞ்சிபுரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் தொகுதி பா.ம.க வேட்பாளர் கே.பாலு ஆகியோருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்கிறார்.

    பின்னர் மறுநாள் 10-ந்தேதி காலை 11 மணிக்கு நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான முருகனுக்கு ஆதரவாக அங்கு ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அன்று மதியம் கோவையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    அதன் பிறகு பிரதமர் மோடி மீண்டும் 13-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்று காலை 11 மணிக்கு பெரம்பலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது கூட்டணி கட்சி வேட்பாளரான ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    பின்னர் 14-ந்தேதி விருதுநகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அப்போது பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஏற்கனவே 5 முறை வந்துள்ள நிலையில் இன்னும் 4 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய உள்ளதால் அடுத்த வாரம் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரம் அடைய உள்ளது.

    • காங்கிரஸ் நிர்வாகிகள் சமரசம் செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
    • மறுநாள் அதே பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்துக்கு வந்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ப. சிதம்பரம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ப.சிதம்பரம் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி அவர் காரைக்குடி அருகே மித்ரா வயல் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து திடீரென ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் கூறினர். அதோடு மித்ராவயலில் செயல்படும் டாஸ்மாக் கடையால் இப்பகுதி இளைஞர்கள் மதுவுக்கு அடிமை யாகும் சூழல் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.

    குறிப்பாக கூட்டத்தில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ப.சிதம்பரத்திடம் 'ஐயா எங்கள் பகுதியில் மதுக்கடைகள் இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மதுக்கடை இருப்பதால் என் மகனுக்கு யாரும் பெண் தர மறுக்கின்றனர். எனவே அதனை அகற்ற வேண்டும்'என கோரிக்கை வைத்ததோடு வாக்குவாதமும் செய்தார்.

    சிதம்பரத்திடம் மதுக்கடையை மூட வேண்டும் என பெண் வாக்குவாதம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே காங்கிரஸ் நிர்வாகிகள் சமரசம் செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் மறுநாள் அதே பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த பெண் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். மேலும் மதுகடை அகற்றுதல் கோரிக்கை தொடர்பாகவும், இதுகுறித்து ப.சிதம்பரத்திடம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன் என அந்த பெண், அ.தி.மு.க. வேட்பாளரிடம் கூறினார். அந்த பெண்ணின் இச்செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்தார்.
    • மதுரை பழங்காநத்தத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார்.

    தேனி:

    தமிழக பாராளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். இதே போல அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்தார். மேலும் கோவையில் ரோடு ஷோவிலும் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

    மீண்டும் வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அமித்ஷா பின்னர் அங்கிருந்து தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரிக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். இதற்காக கல்லூரி வளாகத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து பிற்பகல் 4 மணிக்கு பெரியகுளம் சாலையில் காரில் சென்று தேனி-பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கி திடலில் இருந்து மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பொதுமக்களை நேரில் சந்தித்து தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் அமித்ஷா பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார்.

    மதுரை பழங்காநத்தத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் தேனி வருகையை முன்னிட்டு வடப்புதுப்பட்டி, பங்களா மேடு, தேனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

    தற்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேனியில் பிரசாரம் மேற்கொள்ள வருகை தருவது கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.
    • எல்.முருகன் நடனம் ஆடியது படுகர் இன மக்களை பெரிதும் கவர்ந்தது.

    நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். நேற்று அவர் குன்னூர் அருவங்காடு, சேலாஸ், காந்திபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பகுதியில் வசிக்கும் படுகர் இன மக்கள் நடனமாடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் மத்திய மந்திரி எல்.முருகனும், படுகர் மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். எல்.முருகன் நடனம் ஆடியது படுகர் இன மக்களை பெரிதும் கவர்ந்தது.

    • காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
    • பெண் வியாபாரி ஒருவர் முதலமைச்சருக்கு ஆர்வமுடன் பூ கொடுத்தார்.

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை அருகே உள்ள சோ.காட்டுக்குளத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதில் பங்கேற்க நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு அருணை கல்லூரி வளாகத்தில் தங்கினார். இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் வந்தார்.

    கோவில் மாடவீதி, கல்லை கடை சந்திப்பு அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    நடைபாதை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகள் சேகரித்தார். பின்னர் மாடவீதியில் நடந்து சென்று, சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்குகள் கேட்டார்.

    ஜோதி பூ மார்க்கெட் சென்றார். வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்குகள் கேட்டார்.

    மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது அனைத்து வியாபாரிகள் சார்பில் மலர்மாலை, சால்வை அணிவித்து, மலர் தூவி வரவேற்றனர். நடந்து சென்ற முதலமைச்சர் மீது மலர் தூவினர்.

    அப்போது பெண் வியாபாரி ஒருவர் முதலமைச்சருக்கு ஆர்வமுடன் பூ கொடுத்தார். அதனை சிரித்தபடி முதலமைச்சர் வாங்கிக் கொண்டார். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு சென்று கற்பூரம் விற்பனை செய்யும் பெண்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு கேட்டார்.

    இதனை தொடர்ந்து ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதிக்கு நடந்து சென்றார். அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது முதலமைச்சருடன் ஏராளமானோர் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். பள்ளி மாணவிகள் அவருடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியில் உற்சாகமாக சென்றனர்.

    கடைசியாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள டீ கடையில் மு.க.ஸ்டாலின் இஞ்சி டீ குடித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தால் மாடவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பிரசாரத்தின்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.
    • பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, வெற்றியின் சின்னமாம் இலைக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சின்னம் கிடைக்காமல், கிடைத்த பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் நேற்று பரமக்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.க. தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

    மீனவர்கள் அதிகம் நிறைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் களம் காணும் ஓ.பி.எஸ்.சும் தன் பங்குக்கு கச்சத்தீவை பிரதமர் மோடியுடன் இணைந்து மீட்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்ற கருத்தையும் தொடர்ந்து பிரசாரத்தின்போது கூறிவருகிறார்.

    இந்தநிலையில் பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, வெற்றியின் சின்னமாம் இலைக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

    இதைக்கேட்டு அங்கு திரண்டிருந்தவர்கள் சிரித்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் பழக்க தோஷத்தில் சொல்லி விட்டேன் என்று மழுப்பலாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இப்பகுதியில் இருக்கும் நிரந்தர குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன் என்றார்.

    • தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.
    • கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான்.

    கடலூர்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர், பண்ருட்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.

    கடலூர் தொழிற்பேட்டை ரசாயனக் கழிவு பாதிப்பு குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த நான் போராட்டம் நடத்தினேன். தி.மு.க., அ.தி.மு.க. மாறிமாறி ஆட்சியில் இருந்தும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.

    தனது தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடும் தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பாருங்கள். முந்திரி விலை வீழ்ச்சிக்கு தற்போதைய தி.மு.க. எம்.பி. ரமேஷ்தான் காரணம்.

    என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிலத்தடி நீர் 800 அடிக்கும் கீழாக சென்று விட்டது. நிலக்கரி சுரங்கங்கள் கடலூர் மாவட்டத்தை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

    தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.

    கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான். ஆரணி பாராளுமன்ற உறுப்பினரான அவர் ஏன் இங்கு வந்து போட்டியிடுகிறார்? அவருக்கு இங்கு என்ன வேலை? அங்கு சீட் கொடுக்காததால் இங்கு வந்துள்ளார். அவர் போட்டியிடுவதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு பா.ம.க.வும், கூட்டணியும்தான் முக்கியம்.

    தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வாக இருந்த போது, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தங்கர்பச்சானை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர் மனதில் ஆழமான சமூக நீதிக் கருத்துகள் உள்ளன.

    நாம் துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் உயிர் கொடுத்துள்ளோம். பா.ம.க. ஆள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி. உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து பார்ப்பதற்காக இல்லை.

    இடஒதுக்கீடு, டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தோம். 2026-ல் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை அமைப்போம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆக போவதில்லை. உங்களின் எதிரி தி.மு.க.

    தி.மு.க.வை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ஜனதா சுமார் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
    • பிஆர்எஸ் அறிவித்த வேட்பாளரை, காங்கிரஸ் கட்சி அதே தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் வெளியேறி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவில் இணைந்தனர்.

    மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் வெளியேறி பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து வெளியேறிய பெரும்பாலான தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் வாய்ப்பு அளித்துள்ளன.

    மொத்தம் 17 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதில் பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் தலைவர் எட்டாலா ராஜேந்தரும் அடங்குவார்.

    2021-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியில் இவர் இணைந்தார். இதனால் பிஆர்எஸ் இவரை கட்சியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் மல்காஜ்கிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அதைத் தவிர பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து வெளியேறி கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில் பலர் பா. ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளனர்.

    ஜகீராபாத் பி.ஆர்.எஸ். எம்.பி. கட்சியிலிருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இணைந்த சில மணி நேரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பி.ஆர்.எஸ். எம்.பி. ராமுலு மகன் பாரத் நகர்குர்னூல் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமுலு தனது மகனுடன் கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாகட்சியில் இணைந்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில்தான் அரூரி ரமேஷ் வாரங்கல் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதே அடிப்படையில்தான் காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் தலைவர்களை வரவேற்று உள்ளது. செவால்லா எம்.பி. ரஞ்சித் ரெட்டி பிஆர்எஸ் சார்பில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    பிஆர்எஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தனம் நாகேந்தர் எம்எல்ஏ தற்போது செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிஆர்எஸ் மந்திரி பட்னம் மகேந்தர் ரெட்டியின் மனைவி சுனிதா மகேந்தர் ரெட்டி விகார்பத் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் மல்காஜ்கிரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்

    பிஆர்எஸ் கட்சி வாரங்கல் தொகுதியில் கடியம் காவியாவிற்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் அவர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்று அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தந்தை கடியம் ஸ்ரீஹரி பிஆர்எஸ் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

    சந்திரசேக ராவின் கட்சி முதலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தெலுங்கானா மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு முறை முதல்வராக இருந்தார்.

    தேசிய அளவிலான தலைவர் என்ற பார்வை ஏற்படுத்த விரும்பிய அவர், தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றினார். இந்த முயற்சி அவருக்கு கை கொடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அவரை படுதோல்வி ஆக்க செய்தது.

    மேலும் ஊழல் குற்றச்சாட்டு அவரது மகள் கே கவிதா டெல்லி மாநில மதுபான கொள்கை வழக்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ஆகியவை பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல் இது என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், தற்போது நடக்கவிருப்பது இந்திய நாட்டின் பிரதமருக்கான தேர்தல். பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிற பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல். அதனால் நம்மை தமிழகத்தில் வாட்டி வதைக்கும் சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள். கல்வி தெய்வமாம் சரஸ்வதி வீற்றிருக்கும் தாமரை சின்னத்தில் வாக்களித்து தம்மை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதியில் பரப்புரை செய்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா காலம் தவிர்த்து மீதமிருந்த 3 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியாக அளிக்கப்பட்ட 17 கோடி ரூபாயை வகுப்பறைகள், சமூகக் கூடங்கள், நியாயவிலைக் கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கணினி வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை கட்டிக்கொடுத்து ஒரு பைசா மீதம் வைக்காமல் மக்களுக்காக செலவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    தனது சொந்த நிதியாக 118 கோடி ரூபாய் இலவச உயர்கல்வி திட்டத்திற்காக செலவு செய்துள்ளேன். இதன்மூலம் ஏழை மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என கூறினார். தனது சாதனைகளை வேறு எந்த ஒரு அரசியல் தலைவரும், வேறு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியிடாத வகையில் தான் புத்தகமாக வெளியிட்டு பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறேன் என்றார்.

    பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து கை.களத்தூரில் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தர், நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த தரமான எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும். தம்மை எம்.பியாக தேர்ந்தெடுத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 1,500 குடும்பங்களுக்கு கட்டணமில்லா உயர்தர இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரிக்கவும், கை.களத்தூர் பஞ்சாயத்தை பேரூராட்சியாக மாற்றவும், தீயணைப்பு நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    • வேலூர், அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
    • அப்போது பேசிய அவர், தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் 'அவர்களை' தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைகிறார்கள். இன்று காலை, சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'ஒன்றிணைவோம் வா' என உங்களுக்காக பணியாற்றுவோம். ஆட்சியில் இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி 'நீங்கள் நலமா?' என உங்களிடம் கேட்போம்.

    பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்ததும் அவர்கள் தமிழ்நாட்டின் பக்கமே வர மாட்டார்கள்; நிதி கேட்டா தர மாட்டார்.

    பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?

    இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீது, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

    • பெரம்பலூரின் பூலாம்பாடி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
    • கல்லாற்றில் தடுப்பணை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பூலாம்பாடி கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரெயில்வே திட்டம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும். 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளித்தார்.

    கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், த.ம.மு .க வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் புரட்சி முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஐஜேகே மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அரும்பாவூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், தன்னை தேர்ந்தெடுத்தால் யாரும் முடிக்காத 50 ஆண்டு கால கனவு திட்டமான ரெயில்வே திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். பொதுமக்கள் நல்ல பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணாபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள். சுட்டெரிக்கும் சூரியனை மறந்துவிடுங்கள். கிருஷ்ணாபுரத்தில் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்.

    ×