என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • நாட்டில் நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம் எதிரிகள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அதை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
    • மோடி தலைமையின் கீழ் வலுவான அரசாங்கம் அமைந்த பிறகு, நமது படைகள் பயங்கரவாதிகளை அவர்களுடைய இடத்திலேயே வீழ்த்தின.

    பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம் எதிரிகள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அதை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், மோடி தலைமையின் கீழ் வலுவான அரசாங்கம் அமைந்த பிறகு, நமது படைகள் பயங்கரவாதிகளை அவர்களுடைய இடத்திலேயே வீழ்த்தின.

    70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் நிறைவேற்றல், ஒரே ரேங்க் ஒரே பென்சன், சட்டமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சட்டங்களை நிறைவேற்றும் தைரியத்தை வலுவான பா.ஜனதா அரசு பெற்றது.

    பலவீனமான காங்கிரஸ் அரசாங்கத்தால் கடந்த காலங்களில் எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்த முடியவில்லை. தற்போது எல்லை அருகே சாலைகள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

    ஊழல்வாதிகள் நாட்டை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தியதால், அவர்கள் தனக்கு எதிராக உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சக்தியை நீக்குவதாக சொல்கிறார்கள். இதற்கு உத்தரகாண்ட் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ஐந்து மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
    • நெல்லை பிரகடனம் என்ற பெயரில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    இதனையொட்டி பாளை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் பொதுக்கூட்ட மேடையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தென் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.

    சிவகங்கை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். நெல்லை பிரகடனம் என்ற பெயரில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.


    தேசத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக் கிறது. இந்தியா கூட்டணி எழுச்சியோடு வெற்றி வாகை சூட போகிறது. அதன் முன்னோட்டமாக தான் நாளை மாலை நெல்லையில் பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

    நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். ஹெலிகாப்டர் இறங்கும் ஜான்ஸ் கல்லூரி மைதானம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை வாகன பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது. ரோடு-ஷோவுக்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும் சாலையின் இரு புறங்களிலும் திரளான மக்கள் வந்து ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு வழங்குவார்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்தில் பேசும் ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் இந்தியா கூட்டணியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.

    தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம், சி.ஏ.ஜி. அறிக்கை உள்ளிட்ட புகார்கள் மற்றும் அந்த ஊழல் தொடர்பான விளக்கங்களை பற்றி மோடி முதலில் வாயை திறக்கட்டும்.

    ஒரு முறை எங்களை பார்த்து கையை நீட்டுகிறார் என்றால் 4 விரல் அவரைப் பார்த்து இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நெல்லை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்கபாலு, மேலிட பார்வை யாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.

    வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி நேற்று வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக நெல்லை வருகிறார். அவர் வருகிற 15-ந்தேதி ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வர உள்ளார். இதனையொட்டி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனையொட்டி இன்று வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் மேடை அமைப்பதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர்பட்டி தனியார் பள்ளியில் பிரதமர் மோடி வந்திறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்திலும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    பண்ருட்டி:

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்து செல்லபடுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக பண்ருட்டியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் பண்ருட்டி கடலூர் சாலையில் நரிமேடு அருகே பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான, தேர்தல் பறக்கும் படையினர் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், போலீசார் ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.62 ஆயிரத்து எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் புதுவை மணவெளியை சேர்ந்த கோபிநாத் (வயது 32) என்பதும், இந்த தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி எடுத்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி தாசில்தார் ஆனந்த்யிடம் ஒப்படைத்தனர்.

    • தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு.
    • கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.

    விருதுநகர்:

    இந்தியா கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குளம், செக்கானூரணி, கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தீவிர வாக்கு சேரித்தார். செக்காலூ ரணியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலையணிவித்து அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு. இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும். யார் வரக்கூடாது தீரமானிக்கும் தோதல். 100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்றும் பிரதமர் வேண்டுமா? அல்லது 100 நாள் வேலையை முடித்து வைக்கிற பிரதமர் வேண்டுமா? என்பதை பொதுமக்கள் யோசித்து பார்க்க வேண்டும். சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தும் பிரதமர் வேண்டுமா? இல்லை ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாயாக குறைக்கும் பிரமர் வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். பிரதமர் மோடி 100 நாள் வேலையை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொன்று வருகிறார். தேர்தல் மூலம் மோடிக்கு நீங்கள் வழியனுப்பு விழா நடத்த வேண்டும். அதற்காக வரும் 19ந் தேதி நீங்கள் கை சின்னத்துக்கு ஓட்டு போடணும். ராகுல் காந்தி பிரதமர் ஆனால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை செயல்படுத்துவார். இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்ச ரூபாய் ஆண்டுக்கு கிடைக்கும். 10 கோடி பெண்களுக்கு இந்த திட்டம் கொடுக்க போகிறார். இந்த திட்டத்தில் பெண்கள் திரளாக சேர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கப்பலூர் அருகே உச்சப்பட்டியில் மாணிக்கம் தாகூர் பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில், கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.

    டோல்கேட்டால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கப்பலூர் டோல்கேட் மூடப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
    • தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது.

    மதுரை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் அவர் இன்று மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் அவர் மதுரைக்கு வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பாக பணியாற்றி வரும் காம்ரேட் வெங்கடேசனுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

    • நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.
    • தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு சாயல்குடி பகுதியில் பூப்பாண்டியபுரம், பிள்ளையார்குளம், நோம்பகுளம், எஸ்.கீரந்தை, காணிக்கூர், கீழசெல்வனூர், பன்னந்தை மேல சிறு போது, இளஞ்செம்பூர் பூக்குளம், ஒருவானேந்தல், தேவர்குறிச்சி ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியாக உள்ளது. கிராம மக்கள் குடிப்பதற்கே போதுமான குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது. வைகை தண்ணீரை கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் தாலுகா விவசாயத்திற்கு திறந்துவிட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மழைநீர் கடலில் வீணாக கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு கிராமங்களிலேயே தொழில் செய்ய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கிராமங்களில் இரட்டை இலைக்கு அமோக வரவேற்பு உள்ளது. தாய்மார்களிடையேட இரட்ரை இலைக்கு அதிக மவுசு, இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள் என்று பேசினார்.

    அப்போது பெண்கள் குலவையிட்டு எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என கோஷமிட்டனர். அதிமுக வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முனியசாமியாண்டியன், கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், சாயல்குடி ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.அந்தோணிராஜ், தனிச்சியம் ராஜேந்திரன், சிக்கல் பிரவீன், தேமுதிக, மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.

    மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பீரோ லாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. கணக்கில் வராத மொத்தம் ரூ.3 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

    தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் கேட்டனர். தாமசிடம் மேற்கண்ட பணத்துக்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிகிறது. பின்னர் ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினோம். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தை அவர் பாராளுமன்ற தேர்தலில் செலவழிப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    நெல்லை:

    தமிழ்நாட்டிற்கு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசாரத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதா, காங்கிரசும் தங்களுக்கே உரித்தான வழியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் தென் மாவட்டங்களை நோக்கி முக்கிய தலைவர்களின் கண் பார்வை தற்போது விழுந்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு கட்சி மேலிட நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.

    பா.ஜனதாவை பொறுத்தவரை பிரதமர் மோடி நேற்று வரை 7-வது முறையாக தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கடந்த மாதம் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அம்பை அகஸ்தியர் பட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனால் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) மதுரைக்கு சிறப்பு விமானத்தில் வருகிறார். அங்கிருந்து சிவகங்கை தொகுதிக்கு செல்லும் அமித்ஷா, ரோடு- ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் புதுக்கோட்டையில் உள்ள கோட்டை பைரவர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் விமானத்தில் மீண்டும் மதுரை செல்கிறார். அங்கு மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரையில் இரவில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார்.

    பின்னர் காரில் குமரி மாவட்டம் தக்கலைக்கு செல்லும் அமித்ஷா அங்கு பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று கார் மூலமாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அமித்ஷா, மீண்டும் திருச்சி வந்து அங்கிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசிக்கு புறப்படும் அமித்ஷா, இலஞ்சியில் ராமசாமி பிள்ளை பள்ளி மைதானத்தில் வந்து இறங்குகிறார். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆசாத் நகர் முதல் தென்காசி புதிய பஸ் நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்படும் அமித்ஷா, இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லை வந்திறங்கும் ராகுல் காந்தி, பொதுக்கூட்ட மேடை வரை ரோடு ஷோவில் ஈடுபடுகிறார்.

    பின்னர் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார். பின்னர் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் பேசுகிறார்.

    அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் உதயநிதி நெல்லைக்கு வருகிறார். அவர் நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து நாங்குநேரி பஜார் தெருவில் வேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரித்து பேசுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டுகிறார். இரவில் நெல்லையில் தங்குகிறார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து கடையநல்லூர் மணிக்கூண்டு பெரிய பள்ளிவாசல் பகுதியில் பிரசாரம் செய்யும் அவர் மாலை 4 மணிக்கு சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார். பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக நாளை மாலை கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பும், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை யூரணியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் முன்பும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் சந்தி மறிச்சம்மன் கோவில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

    அடுத்தடுத்து தலைவர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்வதால் தென் மாவட்ட தொகுதிகளின் பிரசார களத்தில் அனல் பறக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார்.
    • பா.ஜ.க தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல. மக்கள் தரிசன யாத்திரை.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். இ.பி.எஸ். ரோடு ஷோ நடத்த தயாராக இருக்கிறாரா?. அவர் ரோடு ஷோ நடத்தட்டும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே?. அதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள்.

    நாங்கள் ரோடு ஷோவை வெறும் ரோடு ஷோவாக கருதவில்லை. அதனை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தான் கேட்கும் கேள்விகளுக்கு கியாரண்டி தருவாரா? என கேட்கிறார்.

    அதற்கு நான் சொல்கிறேன். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் 2024-க்கு பிறகு ஊழல் செய்தவர்கள் ஜெயிலில் இருப்பார்கள் என்று பிரதமர் மோடி கியாரண்டி தருகிறார்.

    8½ கோடி தமிழக மக்களையும் தி.மு.க என்ற தீயசக்தியில் இருந்து காப்பாற்றுவோம் என பிரதமர் கியாரண்டி தருகிறார். தமிழ்நாட்டை டாஸ்மாக்கில் இருந்து காப்பாற்றுவோம் என கியாரண்டி கொடுக்கிறார்.

    தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசும் சக்திகளை அடக்குவோம். குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என பிரதமர் கியாரண்டி தருகிறார்.

    பா.ஜ.க மேல்தட்டு கட்சி, வடமாநில கட்சி என தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அதேபோல் ஜி என்று சொன்னாலே கெட்டவர்கள் என்பது போலவும் திராவிட கட்சிகள் மாய பிம்பத்தை உருவாக்குகின்றனர். இந்த பிம்பங்கள் எல்லாம் உடைய போகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் போது, குழந்தைக்கு ரோலக்ஸ் என்று பெயர் சூட்டுகிறார். கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் போதைக்கடத்தல் கும்பல் தலைவனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் தான் ரோலக்ஸ். அந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாமா?.

    கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என திராவிட கட்சிகள் சொல்லி வருகின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந்தேதி கொங்கு மண்டலம் யாருடையது என்பது தெரிந்து விடும். அப்போது திராவிட கட்சிகளின் இந்த பிம்பம் உடைந்து போய்விடும். இதனை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.

    ஸ்டாலின் ஊழல் பல்கலைக்கழகம் என ஒன்று அமைந்தால், அதன் தவறுகளை திருத்தும் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார். எனக்கு அரசியலில் நண்பர்கள் கிடையாது. ஜனநாயகம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாத ஒரு தலைவர் யார் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான்.

    தமிழகத்தில் பணத்தையும், பரிசு பொருளையும் கொடுத்து ஜெயித்து விடலாம் என எதிர்கட்சிகள் நினைக்கின்றன. வருகின்ற தேர்தலில் மக்கள் அதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். பண அரசியல் என்னும் பேயை மக்கள் ஜூன் 4-ந் தேதி வேப்பிலையுடன் விரட்டி அடிப்பார்கள். இதனை இந்த தேர்தலில் நாம் பார்க்க போகிறோம்.

    மத்தியில் பாஜக ஆட்சியில் மந்திரி பதவியில் இடம்பெறுவது குறித்து எனது நோக்கம் அல்ல. 2026-ல் தமிழகத்தில் நிலைமை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

    மீண்டும் பாரதிய ஜனதா மத்தியிலே ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையே இருக்காது என்று கூறுவது சரியல்ல. அப்படி என்றால் 2014-க்கு பிறகு தேர்தல் நடைபெறவே இல்லையா. 2019-க்கு பிறகு தேர்தல் நடைபெறவே இல்லையா.

    இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எண்ணமும்கூட. மோடி அதை நிறைவேற்றும் பொழுது கருணாநிதியின் ஆசி விண்ணில் இருந்து மோடிக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

    இந்திய கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் தோல்வியை எப்போதோ ஒப்புக்கொண்டு விட்டார்கள். அவர்கள் எண்ணம் 400 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது என்பதுதான்.பாரதிய ஜனதா 300 தொகுதிகளுக்கு மேல் தாண்ட கூடாது என்று நினைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வீடு, வீடாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • 2019-ம் ஆண்டு வரை நடந்துள்ள பாராளுமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 82.1 சதவீத வாக்குகள் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 ஓட்டுகளில் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மட்டும் 2 லட்சத்து 21 ஆயிரத்து 309 பேர் உள்ளனர்.

    மொத்த வாக்காளர்களில் 21.61 சதவீதத்தினர் இளைஞர்கள். இதில் 20 முதல் 29 வயதுக்குள் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 388 பேரும், 19 வயதிற்குள் முதல் முறையாக 28 ஆயிரத்து 28 ஆயிரத்து 921 பேரும் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

    இதனால் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் யாரை வெற்றி பெற வைப்பது என்பதை முடிவு செய்யும் சக்தியாக இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர். இவர்களின் ஓட்டுகள் யாருக்கு? என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர்.

    மத்திய, மாநில அரசுகள் விஷயத்தில் இளைஞர்களிடம் புரிதல் இருந்தாலும், எந்த கட்சி மீதும் அபிமானம் இல்லை. இதனால் யாருக்கு வாக்களிப்பது என அவர்களுக்குள் பெரும் விவாதமே நடந்து வருகிறது. இளைஞர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள புரட்சி ஆயுதமாக ஓட்டு மாறியுள்ளது.

    இதில் இளைஞர்கள் பலரும் ஓட்டு போடாமல் இருக்கவும் நோட்டாவுக்கு வாக்களிக்கவும் திட்டமிடுகின்றனர். இதை தவிர்த்து வேட்பாளருக்கு வாக்களிக்க வைக்கும் முயற்சியில் புதுச்சேரி மாவட்ட தேர்தல் துறை தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

    பாண்லே பால் பாக்கெட்டுகள், செல்பி கார்னர், மல்லர் கம்பம் விளையாட்டு, தப்பாட்டம், பெற்றோர்களுக்கு கடிதம், சிலிண்டர் விநியோகத்துடன் நோட்டீஸ் என 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.

    அதேநேரத்தில் இளைஞர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது, ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் எப்.எம். ரேடியோக்களில் மாவட்ட தேர்தல் துறை தீவிர விளம்பரமும் செய்து வருகிறது.

    முதலில் ஓட்டு போடு, அப்புறம் ஓ போடு எனவும், அங்கே என்னடா? உங்க அப்பாவும், எங்க அப்பாவும் வரிசையில் நிற்கிறார்கள் என ஒரு மாணவர் கேட்க, மற்றொருவர் தேர்தல் பற்றி தெரியாமல் இருக்கலாமா, வாடா நாமும் ஓட்டுபோட வரிசையில் நிற்போம் எனவும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர வீடு, வீடாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு வரை நடந்துள்ள பாராளுமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 82.1 சதவீத வாக்குகள் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.

    இந்த முறை அதிகபட்ச வாக்கு சதவீதத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு தேர்தல் துறை தீவிர பணியாற்றி வருகிறது. குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என தீவிர முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.

    அதே வேளையில் இளைஞர்கள் ஓட்டை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் அவர்களை குறி வைத்து போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் அரசியல் கட்சியினருக்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் யாருக்கு ஓட்டு அளிப்பார்கள் என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர்.

    • பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரசாரம் செய்து வருகிறார்.
    • பா.ஜ.க. கூட்டணியிலும் மக்கள் நலன் சார்ந்த பல கட்சிகள் உள்ளன.

    செங்கம்:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரசாரம் செய்து வருகிறார். இவர் பிரசாரத்தில் பேசும் வசனங்கள் காமெடி கலாட்டா என களைகட்டி வருகிறது.

    செங்கம் பகுதியில் பிரசாரம் செய்த கூல் சுரேஷ் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்புகளை வாங்கிக்கொண்டு செருப்புகளை தைத்து பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்டார். அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பினார்.

    மேலும் அங்கு தர்பூசணி, ஐஸ்கிரீம், பழம் விற்பனையாளரிடம் சென்று அவற்றை விற்பது போல கூவி கூவி பொதுமக்களை அழைத்து வியாபாரம் செய்தார். மேலும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.

    பொறி வியாபாரி ஒருவரிடம் சென்று இதில் பொறி கடலை உள்ளிட்ட சத்தான பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. அதே போல தான் பா.ஜ.க. கூட்டணியிலும் மக்கள் நலன் சார்ந்த பல கட்சிகள் உள்ளன. அந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

    திறந்தவெளி வேனில் கூல் சுரேஷ் பிரசாரம் செய்த போது அங்கிருந்த டீக்கடையில் இருந்த பெண் ஒருவர் அவருக்கு டீ வழங்கினார். இந்த டீயில் அன்பு பண்பு பாசம் எல்லாவற்றையும் கலந்து தந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி என பேசிக்கொண்டிருந்த போதே அந்த வழியாக சென்ற டவுன் பஸ்சில் இளைஞர்கள் தொங்கியபடி சென்றனர்.

    இதனை பார்த்துக் கூல் சுரேஷ் டேய் தொங்காதிங்கடா.. தொங்காதிங்கடா.. உங்கள் வாழ்க்கை முக்கியம் தாய், தந்தை, தங்கை என உங்கள் வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

    ×