என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகளிலும் இதற்காக தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
- விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மற்ற பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்துக்கும் சென்னையில் பணிபுரியும் போலீசார் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 90 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் 19 ஆயிரம் போலீசார் தேர்தல் நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நாளில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் போலீசாரால் வாக்குப் பதிவு மையங்களுக்கு நேரில் சென்று ஓட்டு போட முடியாது என்பதால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தபால் ஓட்டுகளை போட வசதி செய்து கொடுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் 19 ஆயிரம் போலீசாரும் தபால் ஓட்டுகளை இன்று முதல் 3 நாட்கள் போடுவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகளிலும் இதற்காக தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வடசென்னை தொகுதி வாக்காளர்களாக இருக்கும் போலீசார் வண்ணாரப்பேட்டை பேசின் பால சாலையில் உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்துக்கு சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதியில் வசிக்கும் போலீசார் அடையாறு முத்துலட்சுமி சாலையில் உள்ள அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதியில் வாக்காளர்களாக இருக்கும் போலீசார் செனாய் நகர் புல்லா அவென்யூவில் உள்ள அலுவலகத்திலும் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வாக்காளர்களாக இருந்து கொண்டு சென்னையில் பணிபுரியும் போலீசாரும் தங்களது தொகுதி வேட்பாளர்களுக்காக ஓட்டு போடுவதற்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மற்ற பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்துக்கும் சென்னையில் பணிபுரியும் போலீசார் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரையில் போலீசார் தபால் ஓட்டுகளை போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றே போலீசார் 3 மையங்களிலும் திரண்டு தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
- சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.
தருமபுரி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் டீ போடுவது, புரோட்டா மற்றும் தோசை சுட்டு தருவது, ஆட்டோ ஓட்டுவது, விவசாய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பது என்று விதவிதமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரோபோக்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஒரு ரோபோ அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அம்மு என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.
இந்த ரோபோவுக்கு அருகில் யாராவது சென்றால் அந்த ரோபோவின் கையில் உள்ள 'லேப்டாப்பில்' எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களுடன் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்குகிறது. மேலும், மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா, தே.மு.தி.க. நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்த் ஆகியோர் பழைய பிரசார ஆடியோக்களையும் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது போலவும், குறிப்பிட்ட தூரம் மட்டும் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அந்த ரோபோ பிரசாரமும் செய்கிறது.
இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அந்த ரோபோவிடம் சென்று 'செல்பி' எடுத்து செல்கின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்வத்துடன் அதன் அருகில் சென்று துண்டு பிரசுரங்களை எடுத்து செல்கின்றனர்.
- திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி.
- எப்படியாவது முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள் 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரைக்கு ஆதரவாக தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி. இப்போதும் சுற்றுலாத் துறையிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள். அதற்கு விடமாட்டோம்.
அ.தி.மு.க.விடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வரவிடாதீர்கள். எப்படியாவது முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள் 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாலை 6.30 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
- எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆரணி, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆரணி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜீ.வி.கஜேந்திரனை ஆதரித்து ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையடுத்து மாலை 6.30 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
இதற்காக பிராமண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆரணி, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு அவரது மகனையும் அழைத்து செல்கிறார்.
- ’வளர்த்த கடமைக்குப் பிரசாரமாவது செய்யி’ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்” என்று பையனையும் கலாட்டா செய்தார்.
வேலூர்:
வேலூர் தொகுதியில் 'பலாப்பழம்' சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் பிரசாரத்தில் சினிமாவில் வருவது போது போல தன்னுடைய பாணியிலேயே வசனங்கள் பேசி வருகிறார்.
தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு அவரது மகனையும் அழைத்து செல்கிறார். இதோ, இவன்தான் நான் பெத்த பையன். சோத்தைத் தின்னுட்டு வீட்டுல கிடந்தான்.
'வளர்த்த கடமைக்குப் பிரசாரமாவது செய்யி'ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்" என்று பையனையும் கலாட்டா செய்தார்.
நேற்று வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்த அவர் எனது சின்னம் பலாப்பழம் உங்களுக்கு இனி நோ ப்ராப்ளம் என பஞ்ச் வசனம் பேசி ஆதரவு கேட்டார்.
- மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி வீசிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
- இருவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
சென்னை:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவுறுத்தலின் பேரில் அக்கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான அருண் நேருவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது, உண்மைக்கு புறம்பான சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான விஷயங்களை தன்னுடைய பிரசார உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி மீண்டும் பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தேவாலயங்கள், மசூதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று பேசியுள்ளார்.
மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி வீசிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். அவரது உரையில் மத வெறுப்பு பிரசாரமும் பிரதமர் மோடியின் மீதான அவதூறு பிரசாரமும் மிகவும் மேலோங்கி காணப்படுகிறது.
பா.ஜ.க. தான் பாபர் மசூதி கட்டிடத்தை இடித்தார்கள் என்று எங்கேயும் சட்ட பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. பா.ஜ.க.வின் மேடைகளிலோ அல்லது சங்பரிவாரின் மேடைகளிலோ தொல்.திருமாவளவன் கூறுவது போல் எங்கேயும் உரையாற்றியதற்கான சான்றுகள் இல்லை.
இது ஐ.பி.சி. சட்டப்பிரிவு 123(3A)யின் படி குற்றமாகும். இந்திய குடிமக்களிடம் மதரீதியான வித்தியாசங்களை பயன்படுத்தி மோதவிட்டு வெறுப்புணர்வோடு வாக்கு சேகரிக்கும் ஒரு யுக்தி ஆகும்.
எனவே இருவரையும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- நெல்லை மாநகர் முழுவதும் இன்று காலையில் தொடங்கி நாளை மறுநாள் காலை வரையிலும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாவட்டம் வாரியாக பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தேர்தல் நெருங்குவதையொட்டி தென்மாவட்டங்களில் இந்த வாரத்தில் தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சிகளின் நிர்வாகிகள் உற்சாகத்துடன் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களின் இந்த படையெடுப்பால் தென்மாவட்டங்களில் தேர்தல் களம் அனல்பறந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தென் மாவட்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் பிற்பகலில் நெல்லை வரும் ராகுல் காந்தி பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து திறந்த வாகனத்தில் செல்லும் ராகுல் காந்தி ரோடு-ஷோ செல்கிறார். அப்போது அவரை பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க அவர் செல்லும் வழியில் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் ஹெலிபேடு தளம், அவர் செல்லும் திருச்செந்தூர் சாலை மற்றும் பிரசாரம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை மாநகர் முழுவதும் இன்று காலையில் தொடங்கி நாளை மறுநாள் காலை வரையிலும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மக்களாட்சி, ஜனநாயகம் என்பது வார்த்தையாக மட்டுமே உள்ளது.
- தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
ஒரேநாடு, ஒரே தேர்தல், ஒரே கல்விக்கொள்கை, ஒரே ரேஷன் கார்டு என்பது இன்றைய நாட்டின் நிலையாக உள்ளது. இந்திய இறையாண்மை, நாட்டுப்பற்று என்று பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் பேசுவார்கள். ஆனால் கர்நாடகா என்று வந்துவிட்டால் கர்நாடக மக்களின் நலனை பற்றியே பேசுவார்கள்.
ஆனால் இங்குள்ள திராவிட கட்சிகள், பாராளுமன்ற தேர்தலில் இந்திய நலனை பற்றி பேசுவார்கள். இந்தியாவை காப்பாற்ற வாருங்கள் என்பார்கள். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்பார்கள். இவர்களுடன் கூட்டணி வைத்தவர்கள் தான் பறித்தார்கள். தமிழ்சமூக மக்கள் இந்த நாடகத்தை அறிய வேண்டும். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
மக்களாட்சி, ஜனநாயகம் என்பது வார்த்தையாக மட்டுமே உள்ளது. 10 ஆண்டு ஆட்சி நடத்திய பா.ஜனதா சாதனையை சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மகளிருக்கு ரூ.1,000 கொடுத்ததை தவிர வேறு எதையும் சொல்லி தி.மு.க. ஓட்டுக்கேட்க முடிகிறதா. சாதி, மதம், கடவுளை வைத்து பேசியவர்களை இந்த மக்கள் துரத்தியடிக்கும் காலம் வரும். மக்களுக்கு நீரும், சோறும் கொடுக்க எந்த ஒரு திட்டமும் இவர்களிடம் இல்லை.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்து தான் ஊழல், லஞ்சத்துக்கான விதை ஊன்றப்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் போட்டியிட 10 ஆண்டுகளுக்கு தடை விதித்தால் இவர்கள் பணம் கொடுப்பார்களா?. மாற்று அரசியலுக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
- திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது.
புவனகிரி:
திருமாவளவன் பிரசாரத்தில் வாலிபர்கள் மோதலில் ஈடுப்பட்டனர்.
சிதம்பரம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மருதூர், நத்தமேடு, ஆலம்பாடி, குமுடமூலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருமாவளவன் பிரசார வண்டியை தடுத்து நிறுத்தி எங்கள் ஊருக்கு மீண்டும் வர வேண்டுமென வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு திருமாவளவன் மீண்டும் நான் வருவேன் என்று தெரிவித்தார்.
ஆனாலும் வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மோதலில் ஈடுப்பட்டவர்களை கலைத்தனர். இந்த மோதலுக்கு போதிய போலீசார் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- வருகிற 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் வேன் பிரசாரத்தில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி, மாலையில் மத்திய சென்னை, வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் பேசுகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தலைநகர் சென்னையில் பிரசாரம் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே கட்சி நிர்வாகிகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கடந்த மாதத்தில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி சென்றும் மாலையில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும் பேசி வருகிறார்.
கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து பிரசாரம் செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்கிறார். 12-ந்தேதி வரை வெளியூர் பிரசாரத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கட்கிழமை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
15-ந்தேதி திருவள்ளூர் வடசென்னை, 16-ந்தே காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் (கர சங்கால் மைதானம்), 17-ந்தேதி தென்சென்னை, மத்திய சென்னை தொகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
இதே போல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்தே பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி ஒவ் வொரு தொகுதி வாரியாக சென்று பேசி வருகிறார். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 29-ந்தேதி மதுராந்தகம் ஹைவே அருகே நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு வெளியூர்களுக்கு சென்று பேசி வருகிறார்.
வருகிற 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் வேன் பிரசாரத்தில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி, மாலையில் மத்திய சென்னை, வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் பேசுகிறார். அதன் பிறகு அன்றிரவு 7 மணியளவில் தென் சென்னை தொகுதிக்கான சைதை சின்னமலை வேளச்சேரி ரோட்டில் பேசுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தலைநகர் சென்னையில் பிரசாரம் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே கட்சி நிர்வாகிகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.
இதே போல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
- விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த விளம்பர பொருட்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இல்லாமல் வெளியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவு தடை விதிக்கிறது. ஆகவே, அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.
அப்போதுதான் தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முடியும். தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்த முடியும். பேனரில் உள்ள கருத்துகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால், அதற்கான பொறுப்பை சுமத்த முடியும்.
அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிடலாம். ஆனால் பிற வேட்பாளருக்கு எதிராக விளம்பரம் வெளியிட தடை உள்ளது.
விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு செலவில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
- பிரதமர் மோடி தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார் என்றார்.
தேனி:
தேனி லட்சுமிபுரம் பகுதியில் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும்.
மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது. பாராளுமன்றத்தில் விவாதம் இருக்காது. மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்காது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சமூக நீதியை குழிதோண்டி புதைத்து விடும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார்.
திராவிட மாடலால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. வளர்ச்சியை மோடி மஸ்தான் வேலையால் தடுக்கமுடியாது. வேண்டாம் மோடி என்று தெற்கிலிருந்து ஒலிக்கும் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.
தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என இந்தியில் பேசி மோடி மஸ்தான் வித்தை காட்டுகிறார் பிரதமர் மோடி.
10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி சாதனைகளாக எதையும் சொல்ல முடியாமல் உள்ளார் என தெரிவித்தார்.






