search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் மாவட்டங்களை அடுத்தடுத்து முற்றுகையிடும் தலைவர்கள்- தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது
    X

    தென் மாவட்டங்களை அடுத்தடுத்து முற்றுகையிடும் தலைவர்கள்- தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    நெல்லை:

    தமிழ்நாட்டிற்கு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசாரத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதா, காங்கிரசும் தங்களுக்கே உரித்தான வழியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் தென் மாவட்டங்களை நோக்கி முக்கிய தலைவர்களின் கண் பார்வை தற்போது விழுந்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு கட்சி மேலிட நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.

    பா.ஜனதாவை பொறுத்தவரை பிரதமர் மோடி நேற்று வரை 7-வது முறையாக தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கடந்த மாதம் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அம்பை அகஸ்தியர் பட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனால் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) மதுரைக்கு சிறப்பு விமானத்தில் வருகிறார். அங்கிருந்து சிவகங்கை தொகுதிக்கு செல்லும் அமித்ஷா, ரோடு- ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் புதுக்கோட்டையில் உள்ள கோட்டை பைரவர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் விமானத்தில் மீண்டும் மதுரை செல்கிறார். அங்கு மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரையில் இரவில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார்.

    பின்னர் காரில் குமரி மாவட்டம் தக்கலைக்கு செல்லும் அமித்ஷா அங்கு பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று கார் மூலமாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அமித்ஷா, மீண்டும் திருச்சி வந்து அங்கிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசிக்கு புறப்படும் அமித்ஷா, இலஞ்சியில் ராமசாமி பிள்ளை பள்ளி மைதானத்தில் வந்து இறங்குகிறார். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆசாத் நகர் முதல் தென்காசி புதிய பஸ் நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்படும் அமித்ஷா, இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லை வந்திறங்கும் ராகுல் காந்தி, பொதுக்கூட்ட மேடை வரை ரோடு ஷோவில் ஈடுபடுகிறார்.

    பின்னர் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார். பின்னர் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் பேசுகிறார்.

    அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் உதயநிதி நெல்லைக்கு வருகிறார். அவர் நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து நாங்குநேரி பஜார் தெருவில் வேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரித்து பேசுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டுகிறார். இரவில் நெல்லையில் தங்குகிறார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து கடையநல்லூர் மணிக்கூண்டு பெரிய பள்ளிவாசல் பகுதியில் பிரசாரம் செய்யும் அவர் மாலை 4 மணிக்கு சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார். பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக நாளை மாலை கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பும், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை யூரணியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் முன்பும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் சந்தி மறிச்சம்மன் கோவில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

    அடுத்தடுத்து தலைவர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்வதால் தென் மாவட்ட தொகுதிகளின் பிரசார களத்தில் அனல் பறக்கிறது.

    Next Story
    ×