என் மலர்tooltip icon

    உலகம்

    • எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு
    • 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது.

    1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு நாடுகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. அப்போது ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம், சிரியாவிலிருந்து கோலன் ஹைட்ஸ் மற்றும் எகிப்திடமிருந்து காசா பகுதி மற்றும் சினாய் தீபகற்பம் உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில் , "சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதை சட்டவிரோதம் என்றும், அப்பகுதியை விட்டு அந்நாடு வெளியேற வேண்டும்" என்று எகிப்து கோரியிருந்தது.

    எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது. இதன் முடிவில் இந்த தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது.

    இதனையடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு சிரியா நன்றி தெரிவித்தது.

    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 13 பேரை கொன்ற மங்கல்.
    • பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனை இதுவாகும்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகரில் கொலை குற்றவாளிக்கு அங்குள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடந்த 10 மாதங்களுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 13 பேரை கொன்ற மங்கல் என்பவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.

    இதையடுத்து மங்கலுக்கு பொதுவெளியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் மூலம் கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றி உள்ளனர்.

    மரண தண்டனையை நிறைவேற்றும்போது யாரும் வீடியோ கேமரா வசதி செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பலர் மரண தண்டனையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனை இதுவாகும்.

    • சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கெர்சன் டி மெலோ மச்சாடோ என்ற 19 வயது வாலிபர் சென்றார்.

    அவர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் வேலி மீது ஏறினார். பின்னர் அங்கிருந்த மரம் வழியாக கூண்டுக்குள் இறங்க முயற்சித்தார். இதை பார்த்த சிங்கம் மரத்தை நோக்கி சென்று அந்த வாலிபரை தாக்கி இழுத்து சென்றது. சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நீண்ட காலமாக சிங்கத்தை அடக்கும் நபராக மாற விரும்பி உள்ளார்.

    ஆப்பிரிக்காவுக்கு சென்று சிங்கங்களை பராமரிக்கும் பணியில் சேர வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்காக ஒரு முறை விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்ய முயன்றார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்தார்.

    • ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் எங்களுக்கு பொருந்தாது.
    • முதலில் தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கு சாதகமான அம்சங்கள் இருந்தன.

    மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்து பேசினார். இதில் அனுமதி ஒப்பந்தத்தில் மேற்கொள் ளப்பட்ட திருத்தங்கள் குறித்து புதினுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதுதொடர்பாக புதினின் மூத்த ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறும்போது, அமெரிக்க குழுவுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தன.

    ஆனால் அதில் இன்னும் பணிகள் உள்ளன. இதுவரை நாங்கள் ஒரு சமரசத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் எங்களுக்கு பொருந்தாது" என்றார்.

    திருத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ரஷியா நிராகரித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முதலில் தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கு சாதகமான அம்சங்கள் இருந்தன. இதற்கு உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்காவும், அதிபர் டிரம்ப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து வருகின்றன.
    • ரஷிய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது.

    ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக டிரம்ப் 28 அம்சங்களை கொண்ட அமைதி ஒப்பந்தத்தை வெளியிட்டார்.

    இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமைதி ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று உக்ரைனும், அந்நாட்டுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தின. இதையடுத்து அமைதி ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த முதலீட்டு மன்ற நிகழ்ச்சியில் புதின் பங்கேற்று பேசியதாவது:-

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஐரோப்பிய அரசாங்கங்கள் ரஷியாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்காவும், அதிபர் டிரம்ப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து வருகின்றன.

    நாங்கள் ஐரோப்பாவுடன் போருக்குச் செல்லத் திட்டமிடவில்லை. ஆனால் ஐரோப்பா விரும்பினால், போரை தொடங்கினால் நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம். அவர்கள் போரின் பக்கம் இருக்கிறார்கள். ஐரோப்பிய தலைவர்கள் அமைதியான அணுகுமுறையைக் கை விட்டு உக்ரைனில் தொடர்ந்து விரோதப் போக்கை ஆதரித்து வருகிறார்கள்.

    ரஷிய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு கடற்கொள்ளையாகும். இதற்கு பதிலடியாக உக்ரைன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும். இந்த தாக்குதலை தடுக்க கடலில் இருந்து உக்ரைனை துண்டிக்க வேண்டும் என்றார். 

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அமெரிக்காவில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள், 79 வயதான டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை இந்த வீடியோ காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். 



    • பெரிய சவால் நிறைந்த பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
    • இந்த பணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

    குறைந்த வேலை;

    கைநிறைய சம்பளம்...

    நம்மில் பலரது கனவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இதுவெல்லாம் கனவில் மட்டுமே நடக்கும்.

    இப்படித்தான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் அப்படி ஒரு வேலை இருக்கிறது. ஆ... அப்படியா... எங்கே?

    நம்மை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைக்கும் அந்த வேலை பற்றி பார்ப்போம்.

    அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள கெர்ரி கவுண்டியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவுதான் 'கிரேட் பிளாஸ்கெட்' தீவு. 1953-ம் ஆண்டு முதல் இங்கு மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும், அந்த தீவு சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இந்த தீவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தீவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும்.

    இயற்கையான சூழலில், அமைதியை தேடுபவர்களுக்கும், இயற்கை அழகை ரசிப்பவர்களுக்கும் சொர்க்கமாக இந்த இடம் உள்ளது. மின்சார வசதி இல்லாமல் கற்கால வாழ்க்கையை இங்கு அனுபவிக்கலாம். சுற்றுலா வருபவர்கள் தாங்கள் ஏற்படுத்தும் குப்பைகளை திரும்பி செல்லும்போது அவர்களுடனேயே எடுத்து செல்லவேண்டும் என்றால் பாருங்களேன்.

    அப்படி சுற்றுலா செல்லக்கூடிய பயணிகளை வரவேற்கவும், அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கவும், தங்குவதற்கான ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்து உபசரிக்கவும் 2 பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கொடுக்கப்படுகிறது.

    இந்த தீவில் குடியிருப்புகள் வைத்திருக்கும் குடும்பத்தினரும், தனியார் நிறுவனங்களும் சேர்ந்துதான் இந்த வேலையை இவர்களுக்கு வழங்குகிறார்கள். சம்பளத்துடன் தங்குவதற்கும், உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இந்த பணியில் சேருபவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதுபற்றிய விவரங்களை கொடுப்பவர்களும், வாங்குபவர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாத வகையில் இன்றுவரை பின்பற்றி வருகின்றனர். இந்த 6 மாதங்களில் சுமார் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அப்படி வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்த 2 பேர்தான் செய்துகொடுக்கவேண்டும்.

    பெரிய சவால் நிறைந்த பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அது கணவன்-மனைவியாகவோ, நண்பர்களாகவோ இருக்கலாம்.

    அதன்படி, இந்த ஆண்டில் காமில்-ஜேம்ஸ் தம்பதியினர் பணியாற்றியுள்ளனர்.

    இந்த பணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஜனவரியில் இதற்கான விண்ணப்பம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த தீவு பற்றிய வீடியோவும், இந்த பணிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கு பலரும் பல்வேறு விதமான கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.

    சிலர் எனக்கு சம்பளம்கூட தேவையில்லை, அங்கேயே தங்கி பணிபுரிய வாய்ப்பு மட்டும் கொடுங்கள் போதும் என்றும், இது வரமா? சாபமா? என்றும், இப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வேறு எங்கும் கிடைக்காது என்றும் பதிவு செய்துள்ளனர்.

    • அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன.
    • எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது

    உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

    உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து 'X' தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே மஸ்க் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

    ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன. போர் அச்சுறுத்தல் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன, எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

    எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளராகவும் உள்ள எலான் மஸ்க் இதற்கு பதிலளிக்கையில், "போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

    எனினும், தனது இந்தக் கருத்து குறித்து எலான் மஸ்க் குறிப்பிட்டோ அல்லது விரிவாகவோ எதுவும் கூறவில்லை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க் பெற்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரது இந்தக் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

    • அமெரிக்காவிற்குள் 400 டன் கோகைன் கடத்த உதவியதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
    • அமெரிக்க சிறைச்சாலைத் துறையும் ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது

    அமெரிக்காவிற்குள் 400 டன் கோகைன் கடத்த உதவியதற்காக கடந்த வருடன் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ்க்கு டொனால்டு டிரம்ப் தனது அதிபர் பதவியை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கி உள்ளார்.

    இதன்மூலம், அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள சிறையில் இருந்து ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சுதந்திர மனிதராகிவிட்டதாக அவரது மனைவி சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

    இதற்கிடையில், அமெரிக்க சிறைச்சாலைத் துறையும் நேற்று, ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

    ஹோண்டுராஸில் நடக்க உள்ள தேர்தலில் டிரம்ப், ஜுவான் ஆர்லாண்டோவின் கட்சியை ஆதரிக்கிறார். எனவே இந்த மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக டிரம்ப் கடுமையாக எதிர்வினை ஆற்றி வரும் நிலையில் ஆர்லாண்டோவுக்கு மன்னிப்பு வழங்கி உள்ளது பேசுபொருளாகி உள்ளது. 

    • அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தனது கைதுக்கும் தற்போதைய நிலைக்கும் காரணமான ராணுவத் தளபதி அஸீம் முனீரை குறிப்பிட்டார்.

    பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார்.

    எதிர்க்கட்சிளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், ராணுவத் தளபதி அசிம் முனீர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்திகள் பரவிய நிலையில், நேற்று அன்று அவரைச் சந்தித்த பின் உஸ்மா கானும் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அவர் கூறியதாவது, "கடவுளின் அருளால் அவர் நலமாக இருக்கிறார். ஆனால், தனக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுவதால் அவர் கோபமாக இருக்கிறார். நாள் முழுவதும் அவர் தனது அறையிலேயே அடைத்து வைக்கப்படுகிறார். குறுகிய காலத்திற்குக் கூட வெளியே வரவோ, யாருடனும் பேசவோ அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    மேலும், தனது கைதுக்கும் தற்போதைய நிலைக்கும் காரணமான ராணுவத் தளபதி அசிம் முனீரை பாதுகாத்து அதிக அதிகாரம் வழங்க நாட்டின் அரசியலமைப்பை மறுசீரமைக்க முயற்சிகள் நடப்பதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியதாக உஸ்மா கானும் தெரிவித்தார்.

     முன்னதாக இம்ரான் கானின் கட்சியினர் அவரின் நிலைமை குறித்து விளக்கம் கேட்டு ராவல்பிண்டியில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் நேற்றும் இன்றும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம்.
    • நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இருநாள் அரசுமுறை பயணமாக இந்த வாரம் (டிசம்பர் 4-5) இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

    புதினின் இந்தியப் பயணம் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான உறவு குறித்தும் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,

    "ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான உறவு என்பது வெறும் ராஜாங்கரீதியானது மட்டுமல்ல. இந்த இருதரப்பு உறவு, பரஸ்பர புரிதலின் ஆழமான வரலாற்று பின்னணியில் அமைந்தது. இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம். அதேநேரத்தில், இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய தொடர்புகளில் இந்தியாவின் நட்புரீதியான நிலைபாடுகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 

    இருநாடுகளும் அவரவர்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம், அவை பெரும்பாலான துறைகளில் உண்மையில் ஒத்துப்போகின்றன. பாதுகாப்புத் துறையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நினைவில் கொள்வோம். இது வெறும் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல. உயர் தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் ஆகும். சந்தை மதிப்பில், இந்தியாவிற்கு எண்ணெய் சப்ளை செய்யும் முக்கிய விநியோகஸ்தராக ரஷ்யா இருக்கிறது.

    இந்த வர்த்தகம் இந்தியாவிற்கு பெரும் நன்மை பயக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இது இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. மூன்றாம் நாடுகளால் பாதிக்கப்படாத வகையில் நமது வர்த்தக தொடர்புகளை கட்டமைக்கவேண்டும். நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம். புதினின் வருகையின்போது இதுகுறித்து ஆலோசிக்கப்படும். இந்தியாவில் இருந்து நிறைய பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புகிறோம். அதற்கான ஒரு நிகழ்வாக இது அமையும்" என தெரிவித்தார்.  

    • வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது.

    கராகஸ்:

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து கடந்த செப்டம்பா் முதல் வெனிசுலா அருகே கரீபியன் பகுதியில் அமெரிக்கா கடற்படையை பெரும் அளவில் குவித்து வருகிறது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மதுரோவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்து உள்ளார்.

    தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரோ தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

    நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இறையாண்மை, சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை விரும்புகிறோம். அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ நாங்கள் விரும்பவில்லை. வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது. எனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மோதலுக்குத் தயாராகும்போது வெனிசுலா வெளிப்புற கட்டளைகளுக்கு அடிபணியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×