என் மலர்tooltip icon

    உலகம்

    • ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
    • தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

    ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்டவிதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டவிதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அப்போதிருந்தே உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்கின், எக்ஸ் வலைத்தளம் அந்த புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

    இந்த நிலையில் விதிகளுக்கு இணங்க மறுத்த எக்ஸ் வலைத்தளம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,259 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் ஐரோப்பிய ஆணையம் அறிவித்து உள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு குறைபாடான ஏமாற்றும் வடிவமைப்புகள் இருப்பதாகவும், ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

    • 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
    • அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மத்திய உக்ரைனில் ரஷிய டிரோன் தாக்குதலில் 12 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

    வியாழக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.

    அதே நேரம் ரஷிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    அவ்வாறு தாக்குதல் நடத்த வந்த 85 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா கூறியுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலிலும், ரஷிய அதிபர் புதின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சூழலிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அசிம் முனீரை நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார்.
    • இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது.

    பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும் ராணுவ தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டது.

    இந்தநிலையில் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம் முனீரை நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார்.

    இதுதொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 5 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் தலைவராக, ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமனம் செய்ய பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரையை அதிபர் ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்துள்ளார்.

    புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு படை அலுவலகத்திற்குப் பொறுப்பேற்கும் முனீர் ராணுவத் தளபதியாகவும் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவி என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப் படுத்த வழிவகுக்கும்.

    இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரு நபரின் கீழ் வரும்.

    • இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.

    • காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
    • உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலை நாட்டுகிறோம்.

    ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார்.

    இதில் காங்கோ, ருவாண்டா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ஒப்புக்கொண்டன.

    இதையடுத்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இந்த அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து காங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    இது ஆப்பிரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள், உலகிற்கு ஒரு சிறந்த நாள். இன்று, பலர் தோல்வியடைந்த இடத்தில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலை நாட்டுகிறோம்.

    இதுவரை யாரும் கண்டிராத அளவில் போர்களை நாங்கள் தீர்த்து வருகிறோம். இதுவரை 8 போர்களை தீர்த்துவிட்டேன். மேலும் இன்னொரு போரை தீர்க்க முயற்சி நடக்கிறது. அது ரஷியா- உக்ரைன் போர். அதனை நிறுத்த நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம்.

    கனிமங்களை வெட்டி எடுக்க மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களில் சிலவற்றை இரு நாடுகளுக்கும் அனுப்புவதில் நாங்கள் ஈடுபடுவோம். அனைவரும் நிறைய பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை லாரன்ட் சிமன்ஸ் சமர்ப்பித்தார்.
    • மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது.

    பிரஸ்சல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சிறுவன் லாரன்ட் சிமன்ஸ் (வயது 15). குட்டி ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படும் லாரன்ட் தனது 11 வயதிலேயே இளங்கலை இயற்பியல் பட்டத்தை முடித்தார். அடுத்த ஆண்டே அதில் முதுகலை பட்டத்தையும் பயின்றார். இந்தநிலையில் முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். அதாவது, மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது. இதன்மூலம் உலகிலேயே மிக இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்கா, சீனாவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சலுகை வழங்கி அவருக்கு வேலை அளிக்க முன் வந்தன. ஆனால் அதனை மறுத்த அவர் சூப்பர் மனிதர்களை உருவாக்குவது, மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதே தனது கனவு என தெரிவித்துள்ளார்.

    • 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
    • தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.

    சமீப காலமாக வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் லாட்டரியில் வெற்றி பெறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றொரு இந்தியருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

    அபுதாபியில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 61.37 கோடி) வென்றுள்ளார்.

    அவர் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், இறுதியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.

    இந்தப் பரிசுத் தொகையை தனியாக வைத்திருக்கப் போவதில்லை என்றும், தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.

    அதே டிராவில், மேலும் 10 பேர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 திர்ஹாம்கள் (ரூ. 2.45 லட்சம்) கிடைத்தன. அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.

    இந்தச் குலுக்கலில் முந்தைய தொடரின் வெற்றியாளர், சரவணன் என்ற மற்றொரு இந்தியர் ஆவார்.  

    • சீனாவில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது.

    பீஜிங்:

    சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியன் மக்கள் உணர்ந்தனர்.

    சீனாவின் கிர்கிஸ்தான்-ஜின்ஜியாங் எல்லைக்கு அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு அருகில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • டாக்காவில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி கலிதா ஜியா அனுமதிக்கப்பட்டார்.
    • கலிதா ஜியாவுக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

    டாக்கா:

    அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், கலிதா ஜியாவை மேல் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்ல உள்ளோம் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

    கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.
    • இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.

    இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார்.

    பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.

    இதற்கிடையே தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான் கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.

    அதில், எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்று அவர் தெரிவித்தார்.

    இந்த சூழலில் இம்ரான் கான் சகோதரி அலீமா கானும் 'ஸ்கை நியூஸ்' சேனலுக்கு அளித்த பேட்டியில், "அசீம் முனீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். அதனால்தான் அவர் இஸ்லாத்தை நம்பாதவர்களுடன் சண்டையிட விரும்புகிறார்.

    இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.

    ஆனால் முனீர் போன்ற ஒருவர் இருக்கும்போது, இந்தியாவுடன் போர் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தியாவுடன் போருக்காக ஏங்குகிறார்" என்று அலீமா தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்காரவாத தாக்குதலுக்கு பிறகு மே மாத தொடக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட 3 நாட்களில் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு சீனா கைவிட்டது.
    • சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துக்கொண்டு வருகிறது.

    மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், சீனா மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது.

    1980-ம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். இதனையடுத்து, ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

    சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் சீனாவின் மக்கள்தொகை சரிவடைய தொடங்கி இருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

    இதனால் ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு சீனா கைவிட்டது. 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு வரிச்சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் கடந்த ஆண்டு அறிவித்தது.

    ஆனாலும் சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துக்கொண்டு தான் உள்ளது. இந்நிலையில், சீனாவில் சரிந்துவரும் மக்கள்தொகையை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, ஆணுறைகள்,

    கருத்தடை மருந்துகளின் பயன்பாடுகளை குறைக்க கூடுதல் வரிகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், குழந்தைகள், முதியோர் பராமரிப்பு சேவைகள், திருமணம் தொடர்பான வணிகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரிகளையும் சீனா நீக்கியுள்ளது.

    • இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
    • இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.

    இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.

    இந்தநிலையில் தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான்கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.

    மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜி.யும் பொறுப்பாவார்கள்.

    நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமான மற்றவைகளாக உள்ளன.

    ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    மேலும், மின்சாரம் அல்லது சூரிய ஒளி, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ உதவி மற்றும் கைதிகளுக்கு பொதுவாகக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    ×