என் மலர்
உலகம்
- 60 நாட்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கப்படுகிறது.
- பிலிப்பைன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பீஜிங்:
தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்து உள்ளது.
இதற்கு பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக கூறி சீனா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின்படி, சீனக் கடலோரக் காவல்படையினர் எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் நிர்வாகத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் வெளி நாட்டவர்களைத் தடுத்து வைக்க முடியும். 60 நாட்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் சீனாவின் பிராந்திய கடல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டுக் கப்பல்கள் தடுத்து வைக்கப்படலாம் என்று விதிகளில் குறிப்பிட்டு உள்ளது.
இதற்கு பிலிப்பைன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன கடலோர காவல் படையின் நடவடிக்கைகள் காட்டு மிராண்டித்தனமானது, மனிதாபிமானமற்றது என பிலிப்பைன்ஸ் விமர்சித்துள்ளது.
- அவர்களில் பலர் நிறுவனத்தில் கடந்த 27 வருடமாக வேலை செய்து வந்தனர்.
- இந்திய தூதரகதின் மூலம் இறந்தவர்களின் குடுமபத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும்.
குவைத்தில் 45 இந்தியர்கள் உட்பட 49 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த அடுக்குமாடி கட்டட தீவிபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 45 இந்தியர்களில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் அடங்குவர். இவர்களின் உடல்கள் தாயகம் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்கிக்கொண்ட குடுமபத்தினர் கதறி அழும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை உலுக்கியது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு அந்த கட்டிடத்தில் தங்களது ஊழியர்களை தங்கவைத்த NBTC கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிறுவனரும் கேரளவைச் சேர்ந்தவருமான கே.ஜி.ஆபிரகாம் பேசுகையில், எங்களை மன்னித்து விடுங்கள், தீவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துரதிஷ்ட வசமானது.
உயிரிழந்தவர்களில் பலரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும், அவர்களில் பலர் எங்கள் நிறுவனத்தில் கடந்த 27 வருடமாக வேலை செய்து வந்தனர். அவர்களின் இழப்பை எண்ணி நான் எனது வீட்டில் கதறி அழுதேன். அவர்களாலேயே இந்த நிறுவனம் உருவானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை NBTC நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.

இந்திய தூதரகதின் மூலம் இறந்தவர்க்ளின் குடுமபத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும். 4 வருட சம்பள பணம் இன்சுரன்ஸ் தொகையாக அவர்களிடம் வழங்கப்படும். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தவிர்த்து கேரள அரசு உயிரிழந்த அம்மாநிலத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நஷ்டஈடு அறிவிதுள்ளது. இதற்கிடையில் சார்ட் சர்கியூட் காரணமாவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- துப்பாக்கி சூடு நடத்திய நபர், அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் பதுங்கி இருந்தார்.
- துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள சிறுவர் நீர் பூங்காவில் பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர், அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் பதுங்கி இருந்தார்.
அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் என்பது தெரியவந்தது.
வாஷிங்டன்:
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் நூர் மஹால் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்விர் கவுர் (வயது 29). இவர் தனது கணவருடன் அமெரிக்கா வின் நியூஜெர்சி மாகாணத்தில் கார்டரெட் பகுதியில் ரூஸ்வெல்ட் அவென்யூ என்ற இடத்தில் வசித்து வந்தார். ஜஸ்விர் கவுருடன் அவரது உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20) என்பவரும் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் ஜஸ்விர் கவுர் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த ஜஸ்விர் கவுர், ககன்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டார். இதில் இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பெண்களையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்விர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப் கவுருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பஞ்சாப்பின் நகோதர் நகரை சேர்ந்தவர். அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இ.வி.எம் வாக்கு இயந்திரம் குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியள்ளார்.
- தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும்.
அதிரடியான கருத்துக்களுக்கு சொந்தக்காரரான உலக பணக்காரர் எலான் மஸ்க், இ.வி.எம் வாக்கு இயந்திரத்தைக் குறித்து தெரிவித்துள்ள கருத்து உலக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க் தொழிநுட்பங்கள் குறித்த தனது கருத்தை பொதுவெளியில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.
முன்னதாக ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறிக்கும் என்று எச்சரித்த மஸ்க் தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருவதை ஒட்டி இ.வி.எம் வாக்கு இயந்திரம் குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் அருகில் உள்ள புயர்ட்டோ ரிக்கோ தீவில் நடந்த தேர்தலில் இ.வி.எம் ஹேக் செய்யபட்டிருக்கலாம் என்ற விவாதம் எழுந்ததை அடுத்து இந்த கருத்தை மஸ்க் தெரிவித்துள்ளதாக பார்க்கமுடிகிறது.

இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தலில் பயன்படுத்தப்படும் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியுள்ளது.
- வான் போக்குவரத்து அதிகாரிகளை பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.
- ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று ஸ்வீடன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சம்பவம் அந்நாட்டு வான் போக்குவரத்து அதிகாரிகளை திடீர் பதற்றம் மற்றும் பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.
கடந்த வெள்ளிக் கிழமை அரங்கேறிய இந்த சம்பவத்தின் போது ரஷிய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் கிழக்கில் உள்ள பால்டிக் தீவான கோட்லாந்தின் வான்பரப்பில் பறந்து சென்றுள்ளன. இதை அறிந்த ஸ்வீடன் ஆயுதப்படை சார்பில், ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், ரஷிய விமானிகள் ஸ்வீடனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்வீடன் சார்பில் இரண்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. பிறகு ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன. ஸ்வீடன் வான்வெளியில் ரஷியா நீண்ட நேரம் அத்துமீறியதாக ஸ்வீடன் ராணுவம் குற்றம்சாட்டியது.
"ரஷியாவின் செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவை பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது," என ஸ்வீடன் விமான படை தளபதி ஜோனஸ் விக்மேன் தெரிவித்தார்.
- டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
- இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டை இந்த வருடம் இத்தாலி தலைமையேற்று நடத்தியது. கடந்த ஜூன் 13 முதல் 15 வரை நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.
இந்தியாவின் மேற்கு கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக எமிரேட்ஸுக்கு சென்று அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும். இந்நிலையில்தான் தற்போது ஜி7 நாடுகள் கூட்டத்தில் எமிரேட்ஸில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஜி 7 நாடுகள் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது அமையும் என்பதே ஆகும். எது எப்படியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் இந்தியாவில் பொருளாதார உறவுகள் மேம்படும் என்பது உறுதி.
- விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல்.
- இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹவாய் தீவில் உள்ள ஹோன்லுலுவில் இருந்து லிஹூவிற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அதிபயங்கர விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2786 விமானமான போயிங் 737 மேக்ஸ் 8 போதிய வெளிச்சமின்மை காரணமாக தரையிறங்குவதை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவு காரணமாக கடல் பகுதியின் மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் நொடிகளில் பலநூறு அடிகள் கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அலறினர். எனினும், விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தி அதனை சட்டென மேலே உயர்த்தினர்.
இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
- இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ்.
மனிதர்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்ததே. வினோதமான விஷயங்களை செய்பவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் பெண் ஒருவர் கடந்த 20 வருடங்களாக சிமெண்ட், செங்கல், கல், மண் ஆகியவற்றை தின்பண்டமாக தினமும் சாப்பிட்டு வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
இவைகளை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பாட்ரிஸ், வீட்டில் உள்ள சுவர்களை உடைத்து அதில் உள்ள செங்கல் சிமெண்ட் உதிரிகளையும் சாப்பிட்டு வருகிறாராம். அவரது கணவர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்ரிஸால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ். சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிடத்தூண்டும் இந்த குறைபாட்டுக்கு பிக்கா என்பது மருத்துவப்பெயர். தனது 18 வது வயதில் பிக்கா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாட்ரிஸ் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகிறார்.

தமிழில் சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் வரும் ஒரு காமெடி சீனில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிடும் ஒருவரிடம் வடிவேலு மாட்டிக்கொளவார். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் அவர் லைட் பல்புகளை சாப்பிடுவதாக சொல்வது காமெடியாக நாம் எடுத்துக்கொண்ட நிலையில் உண்மையிலேயே அதுபோன்ற நபர்கள் உலகத்தில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
- இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும்.
- உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும்
பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.
ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பாக்டீரியடா ஜூன் 2 நிலவரப்படி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. கடந்த வருடம் இதனால் 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த பாக்டீரியா முதல் முதலில் கண்டறியப்பட்டது.

இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும். பின் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு இறுதியில் மரணத்துக்கு வழிவகுக்கும். இந்த உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும் என்று டோக்கியோ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நோய்த்தொற்றுகள் பிரிவு மருத்துவர் கென் கிகுச்சி தெரிவிக்கிறார்.
அதிகாலையில் முதலில் கால் வீக்கம் ஏற்பட்டு மதியத்துக்குள் மூட்டு வரை பரவும் அளவுக்கு பாதிப்பின் வீரியம் வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள பாக்டீரியா பரவல் வரும் நாட்களில் வேகம் எடுத்து பாதிப்பு எண்ணிக்கை 25,00 உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏன்னெனில் இந்த பாக்டீரியா மலத்தின் மூலம் அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
- 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
- கடந்த 30 ஆண்டில் முதல்முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வென்றது.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தல் வாக்கெடுப்பில் சிறில் ரமபோசா 283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளைப் பெற்றார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு பொது வெளியில் தோன்றாமல் இருந்தார்.
- பின்னர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன். வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கேட் மிடில்டனை பொது வெளியில் காண முடியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுந்த நிலையில், கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியானது.
புற்றுநோய் குணமாக கேட் மிடில்டன் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியுலகில் தோன்றாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்றுதான் பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்றார்.
மன்னர் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு லண்டனில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். இதன்மூலம் சுமார் ஆறு மாதத்திற்கு பிறகு பொது வெளியில் கேட் மிடில்டன் காணப்பட்டார்.
கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட அதேவேளையில் மன்னர் சார்லஸ்க்கும் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால், சிசிக்சை மேற்கொண்டு சில வாரங்களிலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கேட் மிடில்டன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடைந்ததாக தெரிவித்தார்.






