என் மலர்
உலகம்
- இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.
- பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.
இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.
இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.
நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.
இதனிடையே புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் மறுகட்டமைப்புக்கு ரூ.4041 கோடி (450 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இலங்கை அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று கொழும்பில் அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி. டிட்வா புயலுக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மீண்டெழ உதவுவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியையும் தெரிவித்தேன்.
ஆபரேஷன் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இந்தியா இலங்கையின் கீழ்கண்ட மறுகட்டமைப்புக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பை வழங்க உறுதியளித்துள்ளது" என்று தெரிவித்தார்.
- அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
- ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க் கைகொடுத்தார்.
சுனிதா வில்லியம்ஸ்
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.

அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக்கொண்டது.

2006 ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார். விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். அவரது சாதனையை பாடப்புத்தகங்கள் பேசின.
2024-25 பயணம்:
கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் நாசாவின் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.

அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 286 நாட்கள் (9 மாதங்கள்) விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
டிராகன்
ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உடைய டிராகன் ப்ரீடம் விண்கலம் மூலம் இந்த ஆண்டு இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
அன்றைய தினம் அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

அதன் பின் 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் அவர்கள் இருந்தனர். இதன்பின் அமெரிக்க அதிபர் மாளிகையில் டிரம்ப் அவர்களை அழைத்துப் பாராட்டினார்.

அனுபவம்
தனது விண்வெளி அனுபவம் பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்த சுனிதா, "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.
கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்" என்று தெரிவித்தார்.

விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.
விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார்.
சுனிதா வில்லியம்ஸ் இந்த பயணத்தின்போது ஜனவரி 2025-ல் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். விண்வெளியில் அதிக நேரம் 'விண்நடை' மேற்கொண்ட வீராங்கனை என்ற பெக்கி விட்சனின் சாதனையை சுனிதா முறியடித்தார்.
அவர் மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்தார்.
- அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும்.
- வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து சென்று வேலை செய்ய H-1B மற்றும் H-4 விசா பெற டிரம்ப் நிர்வாகம் மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள வலைதள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இது அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும். விசா முறைகேடுகளை தடுக்கவும் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஷியல் மீடியா வெட்டிங்
விண்ணப்பதாரர் கடந்த 5 ஆண்டுகளில் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் தரவுகளை அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என்பதையும், பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பதையும் இதன் மூலம் உறுதி செய்வார்கள்.
இந்த செயல்முறையால் விசா நடைமுறைகளுக்கு வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ள ஊழியர்கள், விசா கிடைக்காததால் மீண்டும் தங்களது வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
- 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
- கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர்.
நைஜீரியாவில் பயங்கரவத்திகளால் கடத்தப்பட்ட சுமார் 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள புனித மேரி கத்தோலிக்கப் பள்ளியில் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். மீதமுள்ளவர்களை மீட்க ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
இதனைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் 100 மாணவர்கள் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது எஞ்சியிருந்த 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக நைஜர் மாகாண போலீஸ் செய்தித் தொடர்பாளர் வாசியு அபியோடன் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாகவே இந்த விடுதலை சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் நிலை குறித்த இதுவரை தகவல் வெளியாகவில்லை.
விடுவிக்கப்பட்ட மாணவர்கள் நைஜர் மாகாணத் தலைநகரான மின்னாவுக்கு அழைத்து வரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தச் செயலில் ஈடுபட்டதாக 26 வயதான கோகுலானந்தன் மோகன் கைது செய்யப்பட்டார்.
- குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் போலி வெடிகுண்டு வைத்து பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞரை அந்நாட்டுப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரின் அப்பர் புக்கிட் திமா பகுதியில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்தில் நேற்று காலை பிரார்த்தனைக்காக வந்தவர்கள், வெடிகுண்டு போன்று காட்சியளித்த சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்றை கண்டனர்.
கருப்பு மற்றும் மஞ்சள் நிற டேப் சுற்றப்பட்டு, கார்ட்போர்டு அட்டையை சுருட்டி சிவப்பு நிற வயர்கள் இணைக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சோதனையில், அதற்குள் கற்கள் நிரப்பப்பட்டிருப்பதும், அது போலி வெடிகுண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்தச் செயலில் ஈடுபட்டதாக 26 வயதான கோகுலானந்தன் மோகன் என்ற இந்திய வம்சாவளி இளைஞரைச் சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் கொல்லப்பட்டார்.
உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷியாவின் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார்.
இந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் உக்ரைனின் சதி உள்ளதா என்ற கோணத்தில் ரஷியா விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது.
- லைஜோ பகுதியானது சீனாவின் தங்க இருப்பு மற்றும் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ளது.
பீஜிங்:
உலகின் மதிப்புமிக்க உலோகங்களுள் ஒன்று தங்கம். மின்னல் வேகத்தில் இதன் விலை ஏறினாலும் மக்களிடம் இதற்கான மவுசு குறையவில்லை. இந்த தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. அதேசமயம் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 3-வது இடம் வகிக்கிறது.
இந்தநிலையில் மேலும் பல தங்க படிமங்களை கண்டுபிடிக்க சீனா ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி தற்போது ஷான்டாங் மாகாணம் லைஜோ நகரின் கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமத்தை சீனா கண்டறிந்துள்ளது. இதன் மொத்த தங்க இருப்பு சுமார் 39 லட்சம் கிலோ என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது அந்த நாட்டின் மொத்த தங்க கையிருப்பில் 26 சதவீதம் ஆகும். எனவே லைஜோ பகுதியானது சீனாவின் தங்க இருப்பு மற்றும் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ளது.
- பராகுவே-பிரேசிலை இணைக்கும் பாலம் 2022-ல் கட்டி முடிக்கப்பட்டது.
- இரு நாடுகளின் உறவில் நிலவிய சிக்கலால் இப்பாலம் திறக்கப்படவில்லை.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடுகளான பராகுவே மற்றும் பிரேசிலை இணைக்கும் விதமாக 2022-ம் ஆண்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இரு நாடுகளின் உறவில் நிலவிய சிக்கல் காரணமாக இந்தப் பாலம் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கலந்த்கொண்டு இந்தப் பாலத்தை தற்போது திறந்து வைத்தார்.
பரானா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஃபோஸ் டு லுகா மற்றும் பிரெசிடென்ட் பிரான்கோ நகரங்களை இணைக்கிறது.
பழைய பாலத்தின் நெரிசலில் இருந்து கனரக வாகனங்களை விடுவிக்க இந்தப் பாலம் உறுதுணையாக இருக்கும். மேலும், தென் அமெரிக்காவின் அட்லாண்டிக்-பசிபிக் வர்த்தகப் பாதைக்கு உதவுகிறது.
- வெனிசுலாவைச் சுற்றி அமெரிக்கா கடலில் தனது படைகளைக் குவித்துள்ளது.
- ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதையடுத்து போதை பொருள் கடத்துவதாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வெனிசுலாவைச் சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்து உள்ளது.
இதற்கிடையே, வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர். அதன்பின், அந்தக் கப்பலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இந்த எண்ணெய் கப்பல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் சட்டவிரோதமாக செயல்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்தது. கப்பல் கைப்பற்றப்பட்ட தற்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படையால் மீண்டும் ஒரு எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
ஒரே வாரத்தில் பறிமுதல் செய்யப்படும் இது இரண்டாவது எண்ணெய் கப்பல் என்பதுடன், இரண்டு வாரங்களுக்குள் இது மூன்றாவது சம்பவம் என தெரிய வந்துள்ளது.
- மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.
- தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.
2025-ஆம் ஆண்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மக்கள் தொகை வீழ்ச்சி உருவெடுத்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி கவலைப்பட்ட உலக நாடுகள், இப்போது போதிய குழந்தைகள் பிறக்காதது குறித்து அச்சமடைந்துள்ளது.
இதனால் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல சலுகைகளை அறிவித்தும் பெரிய பயன் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றன.
உலகின் 60%-க்கும் அதிகமான நாடுகளில் பிறப்பு விகிதமானது, மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.

ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக கருத்தரிப்பு விகிதம் 2.4-ஐத் தாண்டவில்லை.
1950-களில் 4.7-ஆக இருந்த உலக சராசரி, இப்போது பாதியாகக் குறைந்துள்ளது.
2025இல், உலக கருத்தரிப்பு விகிதம் முந்தைய ஆண்டை விட 0.37% குறைந்து 2.40 ஆக உள்ளது. ஐ.நா. மக்கள்தொகை அறிக்கை இதை அசாதாரண குறைவு என்று விவரிக்கிறது.
இந்தக் குறைவு, 2050-க்குள் உலக மக்கள்தொகையை 2.1-க்கு கொண்டுவரும் என்று ஐ.நா. கணிக்கிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் 2.1 ஐ கீழ் உள்ளன. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2.0 ஆக, நகர்ப்புறங்களில் 1.7 ஆகக் குறைந்துள்ளது.
சிக்கலில் சீனா:
சீனாவின் நிலைமை 2025-இல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து சுருங்கி வருகிறது. சீனாவின் கருத்தரிப்பு விகிதம் 2025-ல் 1.01-ஆக உள்ளது.
அண்மைக் காலம் வரை உலக மக்கள் தொகையில் முதலிடத்திலிருந்த சீனாவை இந்தியா கடந்த 2023 முந்தியது.
தற்போது உலகின் மக்கள் தொகையில் 145 கோடி மக்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதற்கு சீனா ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை மட்டுமே என சட்டம் போட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதே காரணம்.
கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றி ருந்தால் சலுகைகள் மறுக்கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆனால் அதுவே இப்போது அந்நாட்டுக்கு வினையாக வந்து முடிந்துள்ளது.
2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது. 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.

இருப்பினும் பல சீனர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்போது அந்த ஒரு குழந்தை கூட வேண்டாம் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டனர்.
இதனால் சீனா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் கொள்கைகளை வகுத்து அமல்படுத்தி வருகிறது.
அதன் படி சீனாவில் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரிச்லுகைகள் மற்றும் நேரடிப் பண உதவி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்தது.
இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து பிறப்பு தொடர்பான மருத்துவ செலவுகளையும் அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 13 சதவீத VAT வரி விதிக்கப்படும் என்றும் அண்மையில் சீனா அறிவித்தது.
இவ்வளவு செய்தும், சீன இளைஞர்கள் அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பளு காரணமாகத் திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றைத் தவிர்த்து வருகின்றனர்.
அடுத்ததாக ரஷியா..
உக்ரைன் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால், ரஷியாவின் பிறப்பு விகிதம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
அதிபர் புதின் 'பெரிய குடும்பங்களே ரஷியாவின் எதிர்காலம்' என்று கூறி வருகிறார். சோவியத் காலத்து விருதான 'மதர் ஹீரோயின்' விருதை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு பெரும் தொகையும் கௌரவமும் வழங்கப்படுகிறது. தம்பதிகள் வீட்டில் ஒன்றாக இருப்பதற்கென்றே சிறப்பு விடுமுறைகளையும் ரஷிய நிறுவனங்கள் அறிவித்தன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி பெண்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.81,000) கணிசமான ஊக்கத்தொகையை ரஷிய அரசு வழங்குகிறது. இது பின்னர் பள்ளியில் பயிலும் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
மேலும், கருக்கலைப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தை வேண்டாம் என்ற கருத்தைப் பரப்புவதற்குத் தடை விதிக்க மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜப்பான்:
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் தனி அமைச்சகமே வைத்துள்ளது. அங்கு, 'குழந்தை மற்றும் குடும்ப முகமை' அமைச்சகத்தின் மூலம் டேட்டிங் செயலிகளை அரசாங்கமே நடத்தி இளைஞர்களைத் திருமணத்திற்கு ஊக்குவித்து வருகிறது.
அதிக வேலை நேரம், வேலைப்பளு காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் தாம்பத்தியத்தின் மீதான ஆர்வத்தை இழந்து வருகின்றனர். தேவைப்பட்டால் வாடகை கணவன் என்ற அளவுக்கு ஜப்பானில் நிலைமை மோசமாகி விட்டது.

தென் கொரியா:
தற்போதைய நிலவரப்படி, 0.7-க்கும் கீழ் என்ற அளவில் உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடாக தென் கொரியா உருவெடுத்துள்ளது.
2025-இல், ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி அளிக்கும் திட்டங்களை அந்நாடு அறிவித்துள்ளது.
ஆனால் ஏன்?
வீடு வாங்குவது மற்றும் குழந்தைகளை வளர்ப்பது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாக மாறியது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவதால், திருமண வயது தள்ளிப் போவது, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பாலியல் உறவில் ஆர்வமின்மை, கருவுறுதல் பிரச்சனை ஆகியவை இந்த உலகளாவிய பிறப்பு சதேவீத வீழ்ச்சிக்கு காரணங்களாக சுட்டப்படுகின்றன.
சுதந்திரமான வாழ்க்கை முறையை விரும்பும் இந்த தலைமுறையினரிடையே 'இருவருக்கும் வருமானம் - குழந்தை வேண்டாம்' என்ற கலாச்சாரம் உலகெங்கும் பரவி வருகிறது.

2025-ஆம் ஆண்டு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ரஷியா, சீனா, தென் கொரியாவை போல் பணத்தை அள்ளிக் கொடுத்தால் மட்டும் பிறப்பு விகிதத்தை உயர்த்திவிட முடியாது என்பதாகும்.
வேலை-வாழ்க்கைச் சமநிலை, பாலின சமத்துவம் மற்றும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கினால் மட்டுமே இந்த மக்கள் தொகைச் சரிவை உலக நாடுகள் தடுக்க முடியும்.
சரி இந்தியாவுக்கு வருவோம்!
இதற்கிடையே இந்திய அளவில் ஒரு புள்ளிவிரமமும் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.
அதாவது, இந்தியாவில் 49 மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2021 குடிமைப் பதிவுத் தரவுகளின்படி இந்த உண்மை இந்த ஆண்டு தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலைமை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. இந்த பிறப்பு விகித குறைவு, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. அதேசமயம் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கிறது.

குறிப்பாக இந்த 49 மாவட்டங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன, அப்படிப் பார்த்தால், இந்த எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கி வருவதாகத் தெரிகிறது.

இதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்களிலும், பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது. மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகளை வரையறுக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இதனால் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என தென் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- இம்ரான்கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு.
- நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகும்படி இம்ரான்கான் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகும்படி இம்ரான்கான் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இம்ரான்கானின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் சோஹைல் அப்ரிடிக்கு போராட் டத்திற்குத் தயாராகும்படி நான் ஒரு செய்தியை அனுப்பியுள்ளேன். முழு தேசமும் அதன் உரிமை களுக்காக எழுந்து நிற்க வேண்டும். இந்தத் தீர்ப்பு எந்த ஆதாரமும் இல்லாமல், சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நீதிபதியால் அவசரமாக வழங்கப்பட்டது. இவ்வழக்கில் எனது சட்டக் குழுவின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை" என்று தெரிவித்து உள்ளார்.
- சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
- தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அக்கும்பல் மதுபான விடுதி முன்பு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
பின்னர் அக்கும்பல் தப்பி சென்றபோது சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே 12 மர்ம நபர்கள் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 6-ந்தேதி தலை நகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






