என் மலர்tooltip icon

    உலகம்

    • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
    • இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து சொந்த ஊருக்கு திரும்புவார்.

    வாஷிங்டன்:

    மருத்துவத் துறையில் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை பரிசோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சீறுநீரகம் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.

    இந்த நிலையில் 3-வது நபராக அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

    இந்த ஆபரேசனை பன்றியின் சிறுநீரகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அலபாமா பல்கலைக்கழக டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர்.

    அதன்பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


    இதற்கிடையே பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட டோவானா லூனி உடல்நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில பரிசோதனைகளுக்காக அவர் தற்காலிகமாக மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து அவரது சொந்த ஊருக்கு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம் அல்லது இதயம் பொருத்தப்பட்ட 4 பேரும் இரண்டு மாதங்களுக்குள் உயிரிழந்தனர். ஆனால் லூனியின் உடல்நிலையில் வேறு பாதிப்பு இல்லை எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • பல்வேறு ஹாலிவுட் தொடர்களில் நடித்துள்ளார்.
    • ஏராளமான கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

    பிரபல ஹாலிவுட் நடிகை டயேன் டெலனோ புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். நார்தன் எக்ஸ்போஷர், பாப்புலர் மற்றும் தி விக்கர் மேன் போன்ற தொடர்களில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், 67 வயதான டயேன் தனது இல்லத்தில் உயிரிழந்ததாக டெட்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

    1990 முதல் 1995 வரையிலான காலக்கட்டத்தில் ஆறு சீசன்கள் வரை வெளியான நார்தன் க்ஸ்போஷர் தொடரில் டெலானோ பார்பரா செமான்ஸ்கி என்ற கதாபாத்திரத்தில நடித்தார். இது இவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது. இதுதவிர இவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

    1957, ஜனவரி 29ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் பிறந்த டெலானோ தனது ஆறு வயது முதலே நடித்து வந்தவர் ஆவார். தனது திரைப்பயணத்தில் இவர் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்பட கதாபாத்திரங்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார். 

    • துபாய் ‘ஷேக்‌’குகளின் பகட்டான வாழ்வும் மற்றவர்களை வாயை பிளக்கவே செய்யும்.
    • காரில் மறுபக்கமாக இருந்த 2 பேர் தங்களுடைய உடலை வெளியே நீட்டி டீ கோப்பைகளை உயர்த்தி காட்டியவாறு செல்கிறார்கள்.

    துபாய் நகரம் செல்வ செழிப்புமிக்கது. இந்த நாட்டின் ஆடம்பரம் வளர்ந்த நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கிறது. உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா இதற்கு சான்று. அங்கு வசிக்கும் துபாய் 'ஷேக்'குகளின் பகட்டான வாழ்வும் மற்றவர்களை வாயை பிளக்கவே செய்யும்.

    தற்போது துபாயில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை நிற அங்கி மற்றும் தலைப்பாகை என பாரம்பரிய உடையணிந்த 2 ஆண்கள் சாலையோர டீக்கடையில் உட்கார்ந்தபடி டீ குடிக்கிறார்கள். அப்போது சொகுசு கார் ஒன்று ஒருபக்கமாக சாய்ந்தபடி அவர்கள் அருகே ஓடி சாகசத்தில் ஈடுபட்டு செல்கிறது. அப்போது அதே காரில் மறுபக்கமாக இருந்த 2 பேர் தங்களுடைய உடலை வெளியே நீட்டி டீ கோப்பைகளை உயர்த்தி காட்டியவாறு செல்கிறார்கள்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி 7½ கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 20 லட்சம் 'லைக்'குகளை குவித்து காட்டுத்தீப்போல பரவி வருகிறது.



    • அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும்.
    • ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை.

    அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் பதவியேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வரி விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்தியா சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இதனால் அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    "அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், அவர்களுக்கு அதே அளவு வரி விதிக்கிறோம். அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கிறோம். அனைத்து விதங்களிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கின்றனர், ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை," என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய டிரம்ப், "பரஸ்பரம் என்ற சொல் மிக முக்கியமானது. இந்தியா எங்களுக்கு 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால், நாங்களும் அதுபோல் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றோமா? அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் அவர்கள் 100 மற்றும் 200 வசூலிக்கின்றனர்."

    "இந்தியா, பிரேசில் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அவர்கள் எங்களுக்கு கட்டணம் விதிக்கின்றனர், அது பரவாயில்லை, ஆனால் நாங்களும் அவர்களுக்கு அதே கட்டணத்தை வசூலிக்க போகிறோம்," என்று தெரிவித்தார்.

    • படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
    • தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர்.

    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் மைடொபி மாகாணத்தில் பெமி என்ற ஆறு பாய்கிறது.

    இந்நிலையில், மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி ஆற்றில் படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

    ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். ஆனால், மேலும் சிலரின் நிலை இதுவரை தெரியாததால் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
    • குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முனைப்பில் ரஷிய படைகள் ஈடுபட்டு இருந்தன.

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. இந்நிலையில், போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் இருதரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

    உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டமிட்டு உள்ளது என அமெரிக்கா குற்றச்சாட்டாக கூறியிருந்தது. அது உண்மை என அடுத்தடுத்து தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த போரில் ரஷிய படை வீரர்களை, அதன் கூட்டணி நாடான வடகொரியாவின் வீரர்களே தவறான புரிதலால் சுட்டு கொன்ற அவலம் நடந்துள்ளது.


     குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முனைப்பில் ரஷிய படைகள் ஈடுபட்டு இருந்தன. ஆனால், அதனால் எதிரி படைகளை எளிதில் வெற்றி கொள்ள முடியவில்லை.

    இந்நிலையில், ரஷிய படையினரின் உத்தரவுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத சூழலில் வடகொரியா வீரர்கள் இருந்துள்ளனர். இதனால், ரஷிய வீரர்களை தவறுதலாக எதிரிகள் என அவர்கள் நினைத்துள்ளனர். அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரஷிய வீரர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ரஷியாவுக்கு இந்த ஒரு விசயம் மட்டுமே முக்கிய சவால் என்றில்லாமல், உக்ரைனுக்கு வடகொரிய வீரர்களை அழைத்து வந்ததில் பல சவால்களை சந்தித்து வருகிறது. அதில், உத்தரவுகளை வீரர்கள் சரியாக புரிந்து கொள்ளாத இந்த விசயமும் அடங்கும்.

    • பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
    • சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    போர்ட்டு விலா:

    ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு வானுவாட்டு இந்த தீவில் உள்ள மொத்த மக்கள் தொகை சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

    இந்நிலையில், வானுவாட்டு தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் போர்ட்டு விலாவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.


    இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 14 பெர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது

    • கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் இருக்கும்
    • இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும்

    உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அறியப்படும் A23a சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது.

    லண்டனில் உள்ள கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் சுமார் ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை பனிப்பாறை, 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்தது.

    அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2020 இல் இந்த பனிப்பாறை வடக்கு நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    தெற்குப் பெருங்கடலுக்குள் அண்டார்டிக் சர்க்கம்போலார் என்ற நீரோட்டத்தை பின்தொடர்ந்து இந்த பனிப்பாறை நகரும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நீரோட்டம் பனிப்பாறையை ஜார்ஜியாவின் தெற்குப் பகுதியை ஒட்டி உள்ள துணை அண்டார்டிக் தீவை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அங்கு வெப்பமான நீருடன் சந்திக்கும் A23a பனிப்பாறை இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியது
    • தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது குற்றம்சாட்டினர்

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று குடியிருப்பு கட்டடம் ஒன்றின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.

    மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் வாயிலில் எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டனர் என்று ரஷிய பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

     

    ரஷ்ய டெலிகிராம் சேனல்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், இடிபாடுகளால் சூழ்ந்த கட்டிடத்தின் உடைந்த நுழைவாயில் மற்றும் பனிப் படலத்தின் மீது கிடந்த இரத்தக் கறை படிந்த இரண்டு உடல்கள் கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது இந்த கொலை அரங்கேறி உள்ளது.

     

    இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரைன் தான் காரணம் என்று கீவ் உளவுத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

    உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பான SBU இந்த கொலைக்கு பின்னால் இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது. ஜெனரல் ஒரு போர்க் குற்றவாளி என்றும் எனவே அவர் தான் இலக்கு என்றும் உக்ரைன் கருதுவதாக கூறப்படுகிறது.

    • தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ பயனர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    • துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த சாக்லெட் சிக்கன் மசாலா விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    உணவு பிரியர்களை கவர்வதற்காகவே சமூக வலைதளங்களில் நாள்தோறும் புது வகையான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இவற்றில் சில வீடியோக்கள் வரவேற்பை பெறுகிறது. ஆனால் சில வீடியோக்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது.

    அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ பயனர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதில், ஒருவர் தனது கையில் சாக்லெட்டை காட்டுகிறார். அந்த சாக்லெட்டுக்குள் சில கிரீம்களை ஊற்றும் அவர் அதற்கு மேல் சிக்கன் டிக்கா மசாலாவை வைக்கிறார். பின்னர் அதற்கு மேல் மீண்டும் சாக்லெட்டை வைத்து ப்ரீஸ் செய்தவுடன் பிரித்து பார்த்தால் சாக்லெட்டுக்கு நடுவில் சிக்கன் டிக்கா மசாலா இருக்கிறது.

    துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த சாக்லெட் சிக்கன் மசாலா விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பஞ்சாப்பை சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த சிக்கன் டிக்கா மசாலா விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இந்த காம்பினேஷன் வாந்தி வரவைக்கிறது என விமர்சித்துள்ளனர்.



    • புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
    • வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இருக்கிறது என்பது பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஒரு புலி தனது துணையை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

    ரஷியாவில் சிஹோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் கடந்த 2012-ம் ஆண்டு வனத்துறையால் மீட்கப்பட்டது. அதில் ஆண் புலிக்கு போரீஸ் என்றும், பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும் பெயரிட்டு வளர்த்தனர். இந்த 2 புலிகளும் தனித்தனியாக தங்களது எல்லைகளை பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக அவற்றை பிரித்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் சைதிரியா வனப்பகுதியில் போரீஸ் புலியை விட்டனர்.

    ஆனால் அந்த புலி தனது இருப்பிடத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தது. அதே நேரம் துணையை பிரிந்த ஸ்வேத்லயா வேறு எங்கும் பயணம் செய்யாமல் விட்ட இடத்திலேயே தொடர்ந்து சுற்றியது. இந்த புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் போரீஸ் புலி 3 ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வேத்லயா இருக்கும் வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. கடந்த 6 மாதங்களாக 2 புலிகளும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்கின்றன. இவற்றின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. 



    • துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×