என் மலர்
உலகம்
- பொருளாதார மந்தநிலையில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
- அடுத்தாண்டு நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் நம்பிக்கை
நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்பாராதவிதமாக 2024 மூன்றாம் காலாண்டில் 1% சரிவை கண்டுள்ளது.
பொருளாதார மந்தநிலையில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் கடன் நெருக்கடியும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட பொருளாதார சரிவைத் தவிர்த்து, நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் 1991க்கு பிறகு மிகவும் மோசமான பெருமந்தத்தை தற்போது சந்தித்துள்ளது.
அடுத்த காலாண்டில் நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக நியூசிலாந்து நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் அந்நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆரம்பத்தில் உள்ளூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடித்து வந்தார்.
- ஆன்-லைனில் பிரபலமாவதற்கு அவரது நகைச்சுவை அம்சம் முக்கிய காரணமாக உள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து 68 வயது முதியவர் ஒருவர் ரூ. 44 லட்சம் சம்பாதித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
எடி ரிச் என்ற அந்த முதியவர் 1995-ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டு கொண்டதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிக்க தொடங்கினார். பின்னர் கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்து ஆன்-லைனில் பிரபலமாகி லட்சக்கணக்கில் பணம் ஈட்டினார். இவருக்கு அவரது மகன் கிறிஸ் உதவி செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 44 லட்சம் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆரம்பத்தில் உள்ளூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடித்து வந்த அவர், தற்போது ஆன்-லைனில் பிரபலமாவதற்கு அவரது நகைச்சுவை அம்சம் முக்கிய காரணமாக உள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் மக்களை சிரிக்க வைப்பதை பெருமையாக கருதுகிறார். அவர் கூறுகையில், நான் மக்களை கவனித்து கொள்ள விரும்புகிறேன். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு திருப்பித்தர விரும்புகிறேன் என்றார்.
- நீளமான அந்த கயிற்றின் மறுமுனையை சிங்கம் தனது வாயில் கவ்வி பிடித்துள்ளது.
- வீடியோ 1.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வைரலாகி வருகிறது.
காட்டிற்கு ராஜா என அழைக்கப்படும் சிங்கத்தின் வலிமை தனித்துவமானது. வேட்டையாடும் போதும், எதிரி விலங்குடன் சண்டையிடும் போதும் சிங்கத்தின் பலத்திற்கு ஈடு கிடையாது. உலகின் பல நாடுகளிலும் சிங்கங்கள் வன விலங்கு பூங்காக்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், மிருககாட்சி சாலை ஒன்றில் பாடிபில்டர் ஒருவர் கயிறு இழுக்கும் போட்டியில் சிங்கத்துடன் மல்லுகட்டிய காட்சிகள் உள்ளது. அதில், பாடிபில்டர் ஒரு தடிமனான கயிற்றை இழுக்கிறார். நீளமான அந்த கயிற்றின் மறுமுனையை சிங்கம் தனது வாயில் கவ்வி பிடித்துள்ளது.
பாடிபில்டர் கயிறை இழுத்து சிங்கத்தை ஜெயிக்க போராடுகிறார். ஆனால் சிங்கம் தனது வாயில் கவ்வியிருந்த கயிற்றை விடவில்லை. அதோடு சிங்கம் ஒரு அடி கூட நகரவில்லை. அதே நேரம் சிங்கத்தை ஜெயிப்பதற்காக போராடும் பாடிபில்டர் கயிற்றை இழுத்தவாறே முன்னும் பின்னும் செல்லும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ 1.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வைரலாகி வருகிறது.
- இந்த வீடியோ வைரலான நிலையில் விவாதத்தை ஏற்படுத்தியது.
- சில பயனர்கள் தாங்களும் இது போன்று முயற்சித்ததாக பதிவிட்டிருந்தனர்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக இளம்பெண்கள் பலரும் தாய்ப்பால் தானம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் ஒருவர் படகில் தனது குழுவினருக்கு விருந்து வைத்த போது தாய்ப்பாலை பரிமாறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் சாராஸ் டே என்ற பெயரில் பிரபலமானவராக திகழும் சாரா ஸ்டீவன்சன் என்பவர் தனது குழுவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு விருந்து வைத்துள்ளார். படகில் நடந்த இந்த விருந்தின் போது சாரா தனது குழுவினருக்கு தனது தாய்ப்பாலையே விருந்து பரிமாறிய காட்சிகள் அதில் உள்ளது.
சாரா தனது தாய்ப்பாலை பம்ப் செய்து ஒரு கிளாசில் எடுத்து குழுவில் ஒருவருக்கு வழங்குகிறார். அதனை குடிக்கும் பெண், கடவுளே என கூறிவிட்டு சிரிக்கிறார். தொடர்ந்து மற்றவர்களுக்கும் சாரா தாய்ப்பால் பரிமாறிய காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் இந்த செயலை விமர்சித்து பதிவிட்டனர். சில பயனர்கள் தாங்களும் இது போன்று முயற்சித்ததாக பதிவிட்டிருந்தனர். ஒரு பயனர், நான் 3 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் என் தாய்ப்பாலை குடிக்க முயற்சித்ததில்லை என பதிவிட்டுள்ளார்.
- விக்னேசின் உடல் சொந்த ஊருக்கு வர 1 வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
- கொள்ளையர்கள் அங்கிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 31). பட்டதாரியான இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தார்.
நேற்று அதிகாலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை கும்பல் புகுந்த நடத்திய தாக்குதலில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செல்போனில் விக்னேஷ் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விக்னேஷ் உடலை பத்திரமாக நெல்லைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் வந்து கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.
மேலும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் சுதா மூர்த்தி உள்ளிட்டோரும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் அவரது உடலை நெல்லைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேசின் உடல் சொந்த ஊருக்கு வர 1 வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே ஜமைக்கா சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வரும் நிலையில், அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த காட்சியில், சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண்மணி பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு திடீரென 3 பேர் கும்பல் துப்பாக்கியுடன் புகுந்துள்ளது.
முகமூடி அணிந்தபடி வந்த அந்த கும்பலை பார்த்ததும், கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும், அந்த பெண்மணியும் தரையில் குனிந்தபடி நிற்கின்றனர். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.
அப்போது கடை ஊழியர்களில் ஒருவரை காலிலும், மற்றொருவரை இடுப்பிலும் சுடுகின்றனர். விக்னேசையும் அந்த கும்பல் சுட்டுவிட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. தற்போது அந்த கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டின் அதிர்ச்சியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- சிடோ புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
- நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட சிடோ புயலில் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'சிடோ' என பெயரிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயலின் தாக்கத்தால், மலாவியில் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் அங்கு ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், அண்டை நாடான மொசாம்பிக்கையும் 'சிடோ' புயல் தாக்கியது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
- ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
- மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
டோக்கியோ:
ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.
தனியார் நிறுவனத்தின் ராக்கெட் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஸ்பேஸ் ஒன் நிறுவனம் உருவாக்கியுள்ள கெய்ரோஸ்-2 ராக்கெட், மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா மலைப்பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவப்பட்டது.
அந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் சிறிது நேரத்தில் கைவிடப்பட்டது.
ராக்கெட்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் பாதுகாப்பு கருதி அந்த ராக்கெட்டை வெடிக்கச் செய்தோம் என ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 13-ம் தேதி ஏவப்பட்ட ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கெய்ரோஸ்-1 ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளில் தானாகவே வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.
- பள்ளிக்கூட நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
அபுஜா:
நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பள்ளிக்கூடத்தில் நேற்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் நிகழ்ச்சியைக் காணவும், பரிசுப்பொருட்களை வாங்கவும் பள்ளிக்கூடத்தில் கூட்டம் குவிந்தது. எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- 5 ஆண்டுக்கு பின் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளின் 23-வது சுற்று பேச்சு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது.
- சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீயை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.
பீஜிங்:
இந்தியா, சீனா இடையே உள்ள 3,488 கி.மீ. எல்லைப்பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பது குறித்து விரிவாக விவாதிக்க, சிறப்பு பிரதிநிதிகள் பேச்சு நடத்தும் நடைமுறை கடந்த 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கடந்த காலங்களில் இந்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை 22 முறை நடத்தப்பட்டுள்ளது. கடைசி கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் நடந்தது.
அதைத்தொடர்ந்து 5 ஆண்டுக்கு பின், சிறப்பு பிரதிநிதிகளின் 23-வது சுற்று பேச்சு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீயைச் சந்தித்துப் பேசியது.
அப்போது, எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, கிழக்கு லடாக்கில் 2020-ல் நடந்த மோதலுக்கு பின் உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்தபோது எட்டப்பட்ட பொதுவான புரிதல்களைச் செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.
- விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கினர்.
- இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்:
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் , வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தெரிவித்துள்ளது.
அடுத்தாண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
- டியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.
- இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும்.
உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
டிவிட்டரின் பெயரை எக்ஸ்[X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். வீடியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேங் இடுகைகள் தேவையில்லாதது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவுகளில் அது தொடர்புடைய ஹேஸ்டேக் களை இடுவதும், அது டிரண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது, மேலும் இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும். இந்நிலையில் எலான் மஸ்க் அது தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

எக்ஸ் இல் ஹேஸ்டேக் போடலாமா வேண்டாமா என்ற பயனர் ஒருவரின் கேள்விக்கு கோர்ட் சாட்பாட் அளித்த பதிலை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இனி சிஸ்டத்துக்கு ஹேஸ்டேக்குகள் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் அவை பார்க்க அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தளத்தில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறிந்துகொல்வதற்கு வேறு ஏதும் வழியை எக்ஸ் தளம் உருவாகியிருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே மஸ்க் இவ்வாறு கூறியுள்ளார் என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
- காதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசியுள்ளார்
புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில், புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA- அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.
தடுப்பூசிகளின் ஒரு வகையான mRNA [messenger RNA] தடுப்பூசி, உடலில் உள்ள mRNA molecule ஐ பிரதி எடுத்து அதிலிருந்து நோயெதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலானது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும்.






