என் மலர்
உலகம்
- வீடியோ இணையத்தில் வெளியாகி 3 நாட்களில் 10½ கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.
- பென்குயினின் நாகரிகம் மற்றும் பொறுமை குணத்தை பாராட்டி பலர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
தென்துருவமான அண்டார்டிகாவின் அட்சியோ தீவுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சுற்றுலா சென்றது. அப்போது அந்த குழுவில் காதலர்களாக பழகி வரும் சியாரா மற்றும் கெவின் ஜோடி, கட்டி அணைத்தப்படி பனி பிரதேசத்தின் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தனர். அங்கே பென்குயின் ஒன்று அந்த வழியாக கடந்து செல்ல முயன்றது.
அப்போது காதலர்களின் நெருக்கத்தை தொந்தரவு செய்ய தயங்கி அமைதியாக காத்திருந்தது. இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த புகைப்பட கலைஞர், பென்குயின் குறித்து அந்த ஜோடியிடம் கூறினார். உடனடியாக அந்த காதல் ஜோடி விலகி நிற்க, இதனை தொடர்ந்து அவர்கள் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த பெங்குயின் காதல் ஜோடியை கடந்து சென்றது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 3 நாட்களில் 10½ கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. பென்குயினின் நாகரிகம் மற்றும் பொறுமை குணத்தை பாராட்டி பலர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
- கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்தது.
- கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்ததில் 10 பேரும் பலியாகினர்.
பிரேசிலா:
பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். சாலொ பாலோ மாகாணத்தில் அமைந்துள்ளது சுற்றுலா நகரமான கிராமடோ.
இந்நிலையில், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்தது.
கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்த விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். அதேவேளை வீட்டில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களை அவர் சந்தித்து உரையாடினார்.
- பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து குவைத் பிரதமர் வழியனுப்பி வைத்தார்.
குவைத்:
பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.
அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்ற அவர்கள் பிரதமருக்கு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.
தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இதன்பின்னர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
இந்நிலையில், குவைத் நாட்டுக்கான 2 நாள் அரசுமுறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை காண விமான நிலையத்திற்கு வந்த குவைத் பிரதமர், பின்னர் அவரை வழியனுப்பி வைத்தார்.
இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொண்டார். யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களையும் அவர் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார்.
- விருது இதற்கு முன்பாக பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், சார்லஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.
பிறகு, குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம் இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது இதற்கு முன்பாக பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், சார்லஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வைத்து நடைபெறுகிறது.
- he View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக இருந்தார்
உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார்.
தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது. இருவரும் மே 2023 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.

இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்த உள்ளனர். திருமணமானது ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வைத்து நடைபெறுகிறது.
இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்கின்றனர். வரும் டிசம்பர் 28 [சனிக்கிழமை] இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
$600 மில்லியன் (₹5,000 கோடி) செலவில் ஆடம்பரமான திருமணத்தை பெசோஸ் ஏற்பாடு செய்துள்ளார் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மகனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.5000 கோடி செலவில் திருமணம் செய்து வைத்தார்.

The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.
ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.
- இலக்கியத்துக்கான நோபல் பரிசை 53 வயதான தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் பெற்றார்.
- டெய்லர் ஸ்விஃப்ட்டின் மிட்நைட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது
விருதுகள் & கௌரவங்கள்
முடிவுக்கு வரும் 2024 ஆம் ஆண்டு பல்வேறு சாதனைகளும், சமூகத்திற்கான பங்களிப்புகளும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உலக அளவில் பலரது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் முக்கிய விருதுகள் கௌரவங்கள், அவற்றை பெற்றவர்களை மீண்டும் நினைவு கூறலாம்.
நோபல் பரிசுகள்:
இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளில் மனிதகுலத்திற்கு பங்களிப்பு செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த வருடத்தின் நோபல் பரிசுகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன.
இலக்கியம்
இலக்கியத்துக்கான நோபல் பரிசை 53 வயதான தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் பெற்றார். தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார். புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான ' தி வெஜிடேரியன்' [The Vegetarian] என்ற நாவல் மூலம் உலக அரங்கிற்குத் தெரியவந்தார்.
இந்த நாவலுக்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டில் 'மேன் புக்கர்' சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. ஆணாதிக்கம், துயரம், வன்முறை உள்ளிட்டவற்றைச் சுற்றி ஹான் காங் எழுத்துக்கள் உள்ளன.

1992 முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஹான் காங் அதுமுதல் எண்ணற்ற படைப்புக்களை சமூகத்துக்கு வழங்கியுள்ளார். மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும்.
அமைதி
இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு, ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்கள் நடத்தும் நிஹான் ஹிடான்கியோ அமைப்புக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இந்த இரண்டு தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர்.
அணுகுண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய மரபணு பாதிப்புகள் இன்றுவரை அந்நகரின் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களின் உயிர்பிழைத்தவர்களின் சிலர் இணைந்து 1956 ஆம் ஆண்டில் தொடங்கிய நிஹான் ஹிடான்கியோ உலகம் முழுவதிலும் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அறிவியல் துறைகள்
இந்த வருடத்தின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. நாடுகளின் செழுமைகளுக்கு இடையிலான வேறுபாடு குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இந்த வருடத்தின் வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் விருது வழங்கப்படுகிறது.
கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் விருது வழங்கப்படுகிறது.
மனித மூளையைப் போல இயங்க கணினிக்கு கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு 2024-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமி விருதுகள்:
இசைத் துறையில் சிறந்த சாதனைகளுக்காக ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனபடி பிப்ரவரி 4, 2024 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Crypto அரங்கில் நடைபெற்ற 66வது வருடாந்திர கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆண்டின் சிறந்த ஆல்பமாக டெய்லர் ஸ்விஃப்ட்டின் மிட்நைட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமி விருது அளிக்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த பாடல் கிராமி விருதை பார்பி படத்தில் இடம்பெற்ற what was i made பாடலை உருவாக்கிய Billie Eilish O'Connell & Finneas O'Connell ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ரெகார்ட் ஆப் தி இயர் விருது மைலி சைரஸின் 'மலர்கள்' க்கு வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த பதிவு சிறந்த புதிமுக இசைக் கலைஞர் விருதை விக்டோரியா மோனெட் பெற்றார்.
புலிட்சர்:
புலிட்சர் பரிசுகள் 1917 முதல் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன, இது பத்திரிகை மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது .
ஆண்டுதோறும் செய்தித்தாள், பத்திரிகை மற்றும் ஆன்லைன் பத்திரிகை உட்பட 23 வகைகளில் சிறந்த சாதனைகள் இதன்மூலம் அங்கீகரிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான புலிட்சர் விருது பொது சேவைக்காக ProPublica நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த தலையங்கதிற்காக வாஷிங்டன் போஸ்ட்டின் டேவிட் இ. ஹாஃப்மேன்விருது பெற்றார்.

உள்நாட்டுப் போர் காலத்தில் பாஸ்டனில் கறுப்பினத் தொழிலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆழமான ஆய்வு செய்து அன்னே பிலிப்ஸ் எழுதிய நைட் வாட்ச் நாவல்-க்கு சிறந்த புனைகதை நாவலாக தேர்வானது.
கிங்: எ லைஃப் என்ற தலைப்பில் ஜொனாதன் ஈக் எழுதிய வாழ்க்கை சரிதை விருது பெற்றது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வாழ்க்கை வரலாறு இது.
- ஏராளமான மாற்றங்களை எலான் மஸ்க் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
- நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ் குற்றம் சாட்டினார்.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளம் உள்ளது. டுவிட்டராக இருந்த நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதன் பெயரை "எக்ஸ்" என மாற்றினார். இதோடு நிறுவனத்தில் ஏராளமானோரை பணி நீக்கம், நிர்வாக ரீதியில் ஏராளமான மாற்றங்களை எலான் மஸ்க் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
அதன்படி எலான் மஸ்க்-இன் நடவடிக்கைகளுக்கு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில், 'எக்ஸ்' தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ் குற்றம் சாட்டினார்.

பிரேசில் தடை:
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இதோடு, பிரேசிலில் 'எக்ஸ்' தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள 'எக்ஸ்' அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும் பிரேசிலில் 'எக்ஸ்' சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் 'எக்ஸ்' தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் 'எக்ஸ்' தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

எலான் மஸ்க் திட்டவட்டம்:
ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்தை முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் உத்தரவிட்டார்.
இதுதவிர, கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற தளங்களில் 'எக்ஸ்' செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வி.பி.என்.(VPN) மூலம் 'எக்ஸ்' செயலியை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தடை உத்தரவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று விமர்சித்தார். பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பேசுபொருளானது.

அபராத சிக்கல்:
மேலும் இந்த தடையை நீக்க வேண்டுமானால், எக்ஸ் நிறுவனம் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பிரேசில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அந்த அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது. இதைத் தொடர்ந்து தவறாக அனுப்பப்பட்ட தொகையை மீண்டும் எலான் மஸ்க்குக்கே அனுப்பி வைக்கும்படி பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ் எக்ஸ் தளம் பிரேசில் நாட்டில் மீண்டும் செயல்பட தொடங்குவதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்ததாக கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தார். மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் எக்ஸ் சேவைகளை பிரேசில் நாட்டில் மீண்டும் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.
- 5 பேர் கொண்ட ஆணையத்தை யூனுஸ் தலைமையிலான அரசு அமைத்தது.
- கைதிகள் பரிப்புமாற்றம் குறித்த புலனாய்வுத் தகவல்களை கண்டறிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
வங்கதேசத்தில் ஷேக் ஹனீசா ஆட்சிக்காலத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட பலர் காணாமல் போயினர். அவர்களுக்கு அடுத்து என்ன ஆனது என்ற தகவல்கள் இன்று வரை தெரியவரவில்லை.
கடந்த ஆகஸ்டில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்த பின் சிறையில் இருந்து விடுதலையான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
ஷேக் ஹசீனா ஆட்சியில் வலிந்து காணாமல் ஆகாதவர்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட ஆணையத்தை யூனுஸ் தலைமையிலான அரசு அமைத்தது.
இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது எதிர் கருத்து உடையவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு இருப்பதை அந்த குழு கண்டறிந்துள்ளதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான பிஎஸ்எஸ் நேற்று [சனிக்கிழமை] தெரிவித்துள்ளது.
ஆணையத்தின் அறிக்கைப்படி, காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் இந்திய சிறைகளில் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த கைதிகள் பரிப்புமாற்றம் குறித்த புலனாய்வுத் தகவல்களை கண்டறிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
இந்தியாவில் இன்னும் சிறையில் இருக்கும் வங்கதேச குடிமக்களை அடையாளம் காண வங்கதேச வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களை ஆணையம் வலியுறுத்தி உள்ளது. மேலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு மேல் இருக்கும் என்று ஆணையம் மதிப்பிட்டுள்ளது..
- உணவு மற்றும் பானங்களில் நொறுக்கப்பட்ட தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் கலந்து கொடுத்தார்
- தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் DJக்கள் அந்த 51 பேரில் அடங்குவர்.
பிரான்சில் தெற்குப் பகுதியில் அமைதியான நகரங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமப்புறங்களில் ஒன்று மசான் கிராமம்.
ஆனால் இங்கு கண்டதை 10 ஆண்டுகளாக ஒரு பயங்கர ரகசியமும் ஒளிந்திருந்தது. பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வழக்கு அது. டொமினிக் பெலிகாட் என்ற கணவன் கடந்த 10 ஆண்டுகால காலத்தில் சுமார் 51 ஆண்களை வைத்து தனது மனைவி கிசெல் -லை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த வழக்கு அது.
தற்போது 72 வயதாகும் டொமினிக் பெலிகாட் 72 வயதாகும் தனது முன்னாள் மனைவி கிசெல் -க்கு ஏறக்குறைய 2011 முதல் 2020 வரை 10 ஆண்டுகளாக, அவர் அறியாமலேயே டொமினிக் உணவு மற்றும் பானங்களில் நொறுக்கப்பட்ட தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து இந்த பாலியல் சித்திரவதைகளில் ஈடுபடுத்தியுள்ளார்.

கிசெல் பெலிகாட்
போதைப்பொருள் கடுமையான நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தியதால் தனக்கு நேர்வது இன்னதென அறியாமலேயே கிசெல் இருந்துள்ளார்.
இப்போது தடைசெய்யப்பட்ட வலைத்தளமான Coco.fr மூலம் கிராமத்தின் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள சுமார் 51 ஆண்களை அலுத்துவந்து இந்த சமயங்களில் கிசெல் - ஐ பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் டொமினிக் பெண்களின் பாவாடையின் கீழ் புகைப்படம் எடுப்பதை சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் பிடித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

அப்போது அவரது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை போலீசார் ஆராய்ந்தபோது கிசெல்-க்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது.
கிசெல் மீதான சித்திரவதை மற்றும் பலாத்கார வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர். டொமினிக் படம்பிடித்த இந்தப் பதிவுகள், விசாரணையின் மையச் சான்றாக மாறியது.
இதனையடுத்து கிச்செல் வழக்கு பிரான்ஸ் சட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறியது. போதைப்பொருட்கள் தனது வாழ்க்கையில் துண்டு துண்டான நினைவுகளையும் 10 வருட கால வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கிசெல் உண்மையை அறிந்துகொண்ட கிசெல் கூறுகிறார்.
டொமினிக் - கிசெல் தம்பதிக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். வழக்குக்கு மத்தியில் இந்த வருடம் டொமினிக்கை கிசெல் விவாகரத்து செய்தார்.

கிச்செல் - ஐ பலாத்காரம் செய்தவர்களில் 27 முதல் 74 வயது ஆண்கள் அடங்குவர். அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வந்த ஆண்கள், தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் DJக்கள் அந்த 51 பேரில் அடங்குவர்.
அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தபோதிலும், வீடியோ ஆதாரங்கள் மூலம் அவர்களில் 50 பேரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளி டொமினிக் பெலிகாட் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதற்காகவும், தனது சொந்த மகள் மற்றும் மருமகள்களின் அந்தரங்கமாக படங்களை எடுத்ததற்காகவும் சேர்த்து அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

- காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
- ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் -இல் ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று டெல் அவிவ் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே ஏவுகணை விழுந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கத் தவறியதால் அது கீழே விழுந்துள்ளது என்றும் இதில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏமனின் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பலமுறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
பதிலுக்கு, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது.
செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பல்கள், டிரோன்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அவ்வப்போது ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள், ஆயுத கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகளை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 107,573 பேர் காயமடைந்துள்ளனர்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன நகரமாக காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 107,573 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நிலையில் வடக்கு தற்போது காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசா நகரில் உள்ள மற்றொரு பள்ளிக்கூடம் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக வடக்கு காசாவில் ஜபாலியா அல்-நஸ்லாவில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
- அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.






