என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.

    இந்தியாவுக்கு அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவை ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கொடுத்துள்ளார்.

    அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலவேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜெய் ஷா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • திருப்பதி சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து.
    • தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு சிறப்பு பேருந்து.

    திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

    அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    http://tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    • Naal 2 என்ற மராத்திய படத்துக்காக 4 வயது குழந்தை Treesha தேசிய விருது வென்றார்.
    • உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள் என்று கமல் பாராட்டு

    செப்டம்பர் 23 ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் Naal 2 என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை Treesha-க்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன்; அந்த சாதனையை முறியடித்ததற்காக Treesha Thosar-க்கு, என் மனம் நிறைந்த பாராட்டுகள்; நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள்: உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல்மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வெள்ளபாண்டி, வண்ணை சுப்பிரமணியன், மூத்த தலைவர் லெனின் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பொதுச்செயலாளர் சையது அலி, தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஜோதிபுரம் தங்கராஜ், முத்துராமலிங்கம், சிந்தாமதார், வட்டாரத் தலைவர் கணேசன், சுந்தர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜான் மோசஸ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.
    • ஏழுமலையான் கோவில் நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆந்திரா மாநில அரசு சார்பில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன் ஆகியோர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர்.

    அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    உலகம் முழுவதும் இந்துக்கள் இருக்கும் இடங்களில் ஏழுமலையான் கோவில்களைக் கட்டி அவரது சக்தியை அனைத்து திசைகளிலும் பரப்புவது அனைவரின் பொறுப்பு.

    ஏழுமலையானுக்கு பலமுறை பட்டு வஸ்திரங்களை காணிக்கை செய்யும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அளித்துள்ளார். சிறுவயதில் இருந்து ஏழுமலையானை வணங்கி வளர்ந்தவன்

    எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும், அவர் மீது தனது பாரத்தை சுமத்தி முன்னேறினேன். ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நிதியுடன் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.

    மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராம மக்கள் இறைவனை வழிபடும் வகையில் அனைத்து கிராமங்களிலும் ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டும்.

    அவை நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும். உலகில் இந்துக்கள் எங்கிருந்தாலும், அங்கு ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இதற்காக, திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் சில குழுக்களை அமைத்து, அவ்வப்போது அங்குள்ள மக்களிடம் பேசி, உலகம் முழுதும் ஏழுமலையான் கோவில்கள் நிறுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை ரூ 2,038 கோடியைப் பெற்றுள்ளது. நாங்கள் ரூ. 837 கோடியை செலவிட்டுள்ளோம். இன்னும் ரூ. 1,700 கோடி உள்ளது. அதில் ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரியை வெளியிட்டார்.

    பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
    • டேப்லெட் கிரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    S-சீரிஸ் டேப்லெட் மாடல்களை அப்டேட் செய்த நிலையில், சாம்சங் தற்போது பட்ஜெட் பிரிவு வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில், என்ட்ரி லெவல் டேப்லெட் கேலக்ஸி டேப் A11-ஐ அறிமுகம் செய்துள்ளது.

    இந்த மாடல் கேலக்ஸி A9 மாடலை போன்று அதே விலையில் தொடங்குகிறது. இந்த மாடல் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி டேப் A11 மாடலில் 2.2GHz ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5,100mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 8.7 இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் கிரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

    பட்ஜெட் பிரிவில் லெனோவா மற்றும் ரெட்மி என போட்டி நிறுவன பிரான்டுகளை விட கேலக்ஸி டேப் A11 விலையில் சலுகையை கொண்டுள்ளது. அதன்படி இந்த டேப்லெட் வைபை மாடலின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.12,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன், செல்லுலார் ஆப்ஷன்களின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.20,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மெமரியை கூடுதலாக நீட்டித்துக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.

    • விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது புகார்
    • தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார்

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

    இந்நிலையில், விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட காணொளியை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம்
    • ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக் கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாசமுள்ள பாட்டுக்காரா!

    நினைவு நாளில் அல்ல

    உன்னை

    நினைக்காத நாளில்லை

    நீ பாடும்போது

    உடனிருந்த நாட்கள்

    வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்

    'பொன்மாலைப் பொழுது'

    உன் குரலின்

    அழகியல் வசீகரம்

    'சங்கீத ஜாதிமுல்லை'

    கண்ணீரின் திருவிழா

    'காதல் ரோஜாவே'

    கவிதைக் கதறல்

    'வண்ணம்கொண்ட

    வெண்ணிலவே'

    காதலின் அத்வைதம்

    'பனிவிழும் மலர்வனம்'

    சிருங்காரச் சிற்பம்

    'காதலே என் காதலே'

    தோல்வியின் கொண்டாட்டம்

    ஒவ்வொரு பாட்டிலும்

    உனக்குள்ளிருந்த நடிகனைக்

    கரைத்துக் குழைத்துப்

    பூசியிருப்பாய்

    உன் வரவால்

    திரைப்பாடல் பூச்சூடிநின்றது

    உன் மறைவால்

    வெள்ளாடை சூடி நிற்கிறது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது.
    • லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற வயர்லெஸ் கீபோர்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒளியை மட்டுமே சக்தியாகப் பயன்படுத்தும் ஒரு வயர்லெஸ் கீபோர்டு ஆகும். இந்த சாதனம் லாஜிடெக்கின் "லாஜி லைட்-சார்ஜ்" தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளியிலிருந்தும் கூட ரீசார்ஜ் செய்ய முடியும்.

    முழுமையாக சார்ஜ் செய்தவுடன், கீபோர்ட்டை நான்கு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்த கீபோர்டில் உள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை சார்ஜ் செய்ய வேண்டிய தேவையை நீக்குகிறது.

    இந்த கீபோர்டு முழு அளவிலான அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு மடிக்கணினியின் டைப்பிங் அனுபவத்தை வழங்கும். மேலும் இதில் சிசர்-ஸ்விட்ச் கீ வழங்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை பல சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஈஸி-சுவிட்ச் கீ பயன்படுத்தி மூன்று சாதனங்களுக்கு மத்தியில் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கிறது.



    லாஜிடெக் நிறுவனம் இந்த கீபோர்டின் வணிக மயமாக்கப்பட்ட சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற வெர்ஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. இந்த வெர்ஷன் 23 ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது.

    லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. யுனிவர்சல் மற்றும் மேகோஸ் மாடல்களின் விலை 99.99 டாலர்கள் ஆகும். இதன் வணிக மயமாக்கப்பட்ட வெர்ஷனின் விலை 109.99 டாலர்கள் ஆகும்.

    • மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.
    • விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன.

    பிச்சைக்காரர்கள் போல் ஒட்டுப் போட்ட சட்டை மாதிரி செல்வப்பெருந்தகை கட்சி மாறி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய விமர்சனத்திற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள்.

    டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்?

    என்னை 'பிச்சைக்காரன் - ஒட்டு போட்ட சட்டை' என்று அழைக்கும் போது, என்னை மட்டுமல்ல, எளிமையான நிலைமையில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள். நான் கிழிந்த துணி அணிந்திருந்தாலும், அந்த துணியில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன.

    விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.

    எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
    • டாக்டர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்திற்கு முழுநேர பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீப காலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய மருத்துவர் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டில் பாமக-வினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் மருத்துவர் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.

    மருத்துவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமக-வின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் மருத்துவர் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.

    எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் மருத்துவர் அய்யா வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு மருத்துவர் அய்யாவை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலி பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அருள் எம்.எல்.ஏ. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக புகார்
    • சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஐசிசி ஏற்றுக்கொண்டது.

    ஆசிய கோப்பை தொடரில் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்

    சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதி, அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ஐசிசியிடம் புகார் அளித்தது.

    இந்நிலையில், சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி, முறையான விசாரணை தொடங்க உத்தரவிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தெரிவித்த கருத்துகள் குறித்து ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விளக்கம் கேட்டுள்ளார்.

    ×