என் மலர்
தலைப்புச்செய்திகள்
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-22 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை காலை 7.40 மணி வரை பிறகு துவிதியை பின்னிரவு 3.48 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 2.08 மணி வரை பிறகு பரணி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி. ருத்தர பசுபதியார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-பரிசு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-வரவு
துலாம்- உயர்வு
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- லாபம்
மகரம்-பயணம்
கும்பம்-நற்செயல்
மீனம்-புகழ்
- டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN (இரகசிய எண்) மூலம் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக PIN பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்படுகிறது.
பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்
இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இந்த புதிய முறை இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
- காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.
- வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.
போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம்.
குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம்.

இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.
காசாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் 90% பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர். காசாவின் 80% பகுதி இராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன் பயிரிடப்பட்ட நிலங்களில், தற்போது 232 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யக்கூடியதாக உள்ளது. அதாவது, வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

வளமான மண் இல்லாதது உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. போருக்கு முன்பு காசா தனது மொத்த ஏற்றுமதியில் 32% ஸ்ட்ராபெர்ரிகள், 28% தக்காளி மற்றும் 15% வெள்ளரிகளை ஏற்றுமதி செய்து வந்தது.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் 83% பாசனக் கிணறுகளை அடைத்துள்ளன. வெடிபொருட்கள் மற்றும் இரசாயனங்கள் காரணமாக காசாவின் மண்ணில் ரசாயன அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த போரினால் ஏற்பட்ட சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா முன்னதாக தெரிவித்திருந்தது.
ஐநாவின் சுயாதீன விசாரணை கமிஷன் காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து எகிப்தில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
- தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்ராவிடக்கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.
இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் இதுதொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பாஜக தலைவரும், பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ், "சட்டப்படி முற்றிலும் தவறு என்றாலும், இந்த வயதிலும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அதன்படி வாழ்ந்த உங்கள் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்," என்று அந்த வழக்கறிஞரை பாராட்டி பதிவிட்டிருந்தார். இதன்பின் அந்த பதிவை பாஸ்கர் ராவ் நீக்கியும் உள்ளார்.
இந்நிலையில் பாஸ்கர் ராவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் தலைவர் மன்சூர் கான், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
- ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்று ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறினார் .
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவரில் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் மீட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
குளத்தை சுத்தம் செய்யும் பணியின் போது, குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பையை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்ததாகவும், அதைத் திறந்தபோது சுமார் 500 வாக்காளர் அடையாள அட்டைகளைக் கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை 15வது வார்டை சேர்ந்தவர்களின் அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் என அதிகாரிகள் ஆய்வின்பின் உறுதிப்படுத்தி உள்ளனர்.
வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பே அட்டைகள் காணாமல் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட அனைத்து அட்டைகளும் உள்ளூர் நிர்வாகத்தின் வசம் உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே வாக்காளர் அடையாள அட்டைகள் அடங்கிய பைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவம் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்று ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறினார் .
நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள் குளத்தில் எப்படி விழுந்தன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் சத்தர்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ககன் யாதவ் எச்சரித்தார்.
- அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
- ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
ஒடிசாவில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் ஜஜ்பூர் மாவட்டத்தில் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தைச் சேர்ந்த சௌதாமினி என்ற 57 வயது பெண் அப்பகுதியில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது. ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால் ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- 15 பேர் குழுவாக மார்கோனஹள்ளி அணைக்கு அருகில் நேற்று சுற்றுலா சென்றனர்.
- அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டது
கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் 15 பேர் குழுவாக மார்கோனஹள்ளி அணைக்கு அருகில் நேற்று சுற்றுலா சென்றனர்.
இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டது. இதனால் ஏழு பேரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நவாஸ் என்ற ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட நவாஸைத் தவிர, வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்று துமகூரு காவல் கண்காணிப்பாளர் அசோக் தெரிவித்துள்ளார்.
அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.
- உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் "பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம், காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பல தசாப்தங்களாக போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் இதை மறுத்து பேசிய இந்தியாவுக்கான நிரந்தர ஐநா பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
அவர் பேசியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டிற்கு எதிராக பொய்களைப் பரப்பும் பாகிஸ்தானிடமிருந்து தவறான அறிக்கைகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
1971 ஆம் ஆண்டு வங்கதேச போரில் ஆபரேஷன் சர்ச்லைட்டின் போது 400,000 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிட்ட அதே நாடு இதுதான்.
தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.
உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் சாதனை எந்த விதத்திலும் குறைபாடற்ற முன்மாதிரியான ஒன்றாகும்" என்று தெரிவித்தார்.
- தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.
- இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியாகினர்.
ராஜஸ்தானில் இன்று இரவு எல்.பி.ஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் மற்றொரு லாரி மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
டுடு பகுதியில் ஜெய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த உடனே சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.
தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.
சம்பவம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைரவா, லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி நடைபெறுவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
- மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.
ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு இறுதியாக அதிகாரப்பூர்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது.
கெஜ்ரிவால், கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின், தனது கட்சி எம்.பி.யான அசோக் மிட்டலின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.
தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு பங்களா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.
இதனையடுத்து, செப்டம்பர் 25 அன்று, 10 நாட்களுக்குள் தகுந்த பங்களாவை ஒதுக்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள டைப்-7 பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவில் இதற்கு முன்னர், பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான இக்பால் சிங் லால்புரா வசித்து வந்தார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- 2001 பத்மஸ்ரீ விருது, 2019 இல் பத்ம பூஷண் விருது, 2025-க்கான தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
- ஆகஸ்ட் 2024 இல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலோச்சி வரும் மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கலைத்துறைக்கு அவர் செய்த சேவைகளுக்காக , 2001 பத்மஸ்ரீ விருது, 2019 இல் பத்ம பூஷண் விருது, 2025-க்கான தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
அதேநேரம் இந்திய பிராந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியையும் மோகன்லால் வகிக்கிறார். அவருக்கு இந்த கௌரவம் மே 2009 இல் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2024 இல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியை சந்தித்து மோகன்லால் பாராட்டு பெற்றார். 7 தளபதிகள் முன்னிலையில் மோகன்லாலுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உபேந்திர திவேதி கௌரவித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால்,"ராணுவத் தளபதியிடம் இருந்து பாராட்டு பெறுவது ஒரு பெரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை.
இது ஒரு நல்ல சந்திப்பு. தாதாசாகேப் பால்கே விருது இதற்கு ஒரு காரணம். நான் 16 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன்.புதிய தலைமுறையை ராணுவத்திற்குள் கொண்டு வர முயற்சிப்பேன்" என்று கூறினார்.
- தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
- பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார்.
அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
சண்டிகர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் கூறுகையில், "பூரன் குமாரின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை நடந்த சமயத்தில், பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் நாட்டிற்குப் பயணம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






