என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தனிப்பட்ட தரவை பாதுகாக்கும் தொழில்நுட்ப அம்சமாகும்.

    வாட்சப் செயலுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி என்பதால் பலரும் அரட்டை செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அரட்டை செயலியில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்று இணையத்தில் கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த அளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "எங்கள் முழு வணிகமும் நாங்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம் மற்றும் அவர்களின் தரவை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் வரப்போகிறது. அனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. மேலும் உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம்.

    எல்லா இடங்களிலும் எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அதற்கு அடுத்த பதிவில், "எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இப்போது சோதனையில் உள்ளது. நாங்கள் அதை நவம்பரில் வெளியிடப் போகிறோம்" என்று தெரிவித்தார்.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இல்லாதது மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரட்டை செயலி செயல்படுகிறது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

    • கோல்ட்ரிப் மருந்தில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது தமிழ்நாடு.
    • சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கோல்ட்ரிப் மருந்தில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது தமிழ்நாடு.

    * மத்திய பிரதேசமும் மத்திய அரசும் நச்சுத்தன்மை இல்லை என்று விட்டு விட்டார்கள்.

    * சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    * கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின் நிரந்தரமாக மூட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.
    • தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை.

    இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறவில்லை.

    இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை.

    காயம் காரணமாக சில தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து காயத்தில் இருந்த மீண்ட அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனாலும் இந்திய அணிக்கான தேர்வில் அவர் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் அணியில் இடம்பெறாதது என் கையில் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள். தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை. தேர்வு செய்வது தேர்வு குழு, பயிற்சியாளர், கேப்டனின் வேலை.

    நான் அங்கு இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அல்லது இன்னும் சிறிது நேரம் தேவை என்று அவர்கள் உணர்ந்தால், அது அவர்களின் கைகளில் உள்ளது.

    இவ்வாறு முகமது ஷமி கூறினார்.

    கிட்டதட்ட முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • செல்வராகவன் இயக்கத்தில், கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.
    • இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.

    தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்ற அடையாளத்துடன் அறிமுகம் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.

    'சூரரைப் போற்று' மற்றும் வாத்தி படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் தற்போது ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதை பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, செல்வராகவன் இயக்கத்தில், கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்று படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தன.



    இந்த நிலையில், 'மெண்டல் மனதில்' படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'மெண்டல் மனதில்' படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற செல்வராகவன் சார் இயக்கத்தில்... இந்த குறிப்பிட்ட படத்திற்காக காத்திருங்கள். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 



    • பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
    • உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

    சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது.

    பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையால் வரும் வருமானத்தை போல உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.

    2022 ஆம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து 1,618 கோடி வருவாய் ஈட்டியது. அதுவே 2023 ஆம் ஆண்டில் ரூ.1,958.4 கோடி வருவாயாக அதிகரித்தது.

    இந்நிலையில், உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

    அதன்படி பெங்களூரில் உள்ள M5 ECity பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் இருக்கையிலேயே டைனிங் டேபிள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் உணவு வாங்க வெளியே வராமல் அமரும் இடத்திலே உணவு கிடைக்கும் என்று பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக நாம் கேட்கும் உணவுகளை உடனே சமைத்துத் தரும் 'லைவ் கிச்சன்' அமைப்பையும் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் டைனிங் டேபிளில் LED விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இருட்டில் அமர்ந்து சாப்பிடாமல் வெளிச்சத்தில் சாப்பிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தொழில் மாநாடுகள் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சான்று.

    * தொழில்துறை வளர்ந்தால் அந்த மாநிலமும் தொடர்ந்து வளர்கிறது என அர்த்தம்.

    * அமைதியான மாநிலங்களை தேடியே தொழில்துறையினர் தொழில் தொடங்க வருவர்.

    * தி.மு.க. ஆட்சியில் ஏராளமான தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ளோம்.

    * தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    * 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

    * 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    * 2 ஆயிரமாக இருந்த புத்தொழில் நிறுவனங்கள் 12 ஆயிரமாக உயர்ந்துள்ளன.

    * சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலங்களைத்தான் தொழில் நிறுவனங்கள் தேடி வரும்.

    * தமிழ்நாட்டில் முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 33 சதவீதம் புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்கின்றன.

    * தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    * உலகில் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார்.
    • 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர்.

    சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இதற்கிடையே தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார். அதன்படி 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர். ஜாங் முதலில் 3 தவளைகளை விழுங்கினார். அடுத்த நாள் 5 தவளைகளை விழுங்கினார். அதன்பின் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதனையில் தவளைகளை விழுங்கியதால் ஜாங்க்குக்கு செரிமான பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுண்ணி தொற்றுகள் மற்றும் ரத்தக் கோளாறுகள் ஆகிய நோய்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்
    • டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், 'டியூட்' படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

    • பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
    • புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர்.

    சோழவந்தான்:

    புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுகளாகியும் இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

    மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, டி.என்.ஏ. பரிசோதனை, 5 பேரிடம் குரல் மாதிரி சோதனை உள்ளிட்ட அறிவியல் ரீதியான முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் மற்றொரு வேங்கைவயல் சம்பவமாக சோழவந்தானிலும் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி மிகுந்த சேதமடைந்து இடியும் தருவாயில் இருந்தது. இதையடுத்து ஜல்ஜீவன் மிஷன் 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பழைய தொட்டியின் அருகிலேயே புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

    பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர். அதன் பேரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதிய நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    இந்த புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர். இந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். நேற்று இந்த குடிநீரை குடித்த சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.

    இதற்கிடையே குடிநீர் தொட்டி பராமரிப்பு மற்றும் அதனை சுத்தம் செய்வதற்காக மருது பாண்டி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வழக்கம் போல் நேற்று தொட்டியை சுத்தம் செய்ய சென்ற போது அதில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு ஏராளமானோர் திரண்டனர். மேலும் அவர்கள் குடிநீரில் மனித கழிவை கலந்த மர்மநபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஊராட்சி உதவி இயக்குநர் அரவிந்தன், தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தாா் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீர் ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. மேலும் அதிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    கிராம மக்கள் தேவைக்காக தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் வேன் மூலம் குடிநீர் சப்ளை செய்தார். மனித கழிவு கலந்தது குறித்து கச்சகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஹரிஷ்குமார், வட்டார சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டியில் ஏறி ஆய்வு செய்தனர்.

    மேலும் துர்நாற்றம் வீசிய குடிநீரை பருகியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் அம்மச்சியாபுரம் கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சோழவந்தான் போலீசார் கீழ்த்தரமான இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா? அல்லது சிறுவர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில், எங்கள் காலனி பகுதியைச் சுற்றி ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அதைதான் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதிக்கு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையில் இவ்வாறு மலம் கலந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    மேலும், சுத்தம் செய்வது மட்டுமல்ல, இதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவிக்கையில், 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் வரவில்லை என கூறி, சில சிறுவர்கள் தொட்டியின் மேல் ஏறியதாக தகவல் உள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த சம்பவம் எங்களுக்குத் தெரிய வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி 5.10.2025 அன்று திறக்கப்பட்டது. அப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.

    காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் செய்த தவறான செயல் என தெரிகிறது. சிறுவன் வேடிக்கையாகச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். இருப்பினும், குற்றவாளி மீது போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பிற்காக பூட்டி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    புதிதாக திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பது மீண்டும் வேங்கைவயல் சம்பவத்தை நினைவூட்டுவதாகவும், இந்த பிரச்சனைக்கு காலம் தாழ்த்தாமல் உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை அனைத்து தரப்பினர் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

    • பெண்களிடம் உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? என கேட்டறிந்தார்.
    • துணை முதலமைச்சருடன் கை குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பேசினார். பின்னர் தனியார் விடுதியில் நேற்று தங்கினார்.

    இன்று அதிகாலை ஆர்.எம்.காலனி, நேருஜிநகர், திருச்சி ரோடு, பழனி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வும் நடைபயிற்சி சென்றார். அப்போது சாலையில் சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அவருக்கு வணக்கம் தெரிவித்ததுடன் உதயநிதி ஸ்டாலினுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.



    அப்போது அங்கு இருந்த பெண்களிடம் உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? என கேட்டறிந்தார். மேலும் பள்ளி மாணவர்களிடமும் எந்த வகுப்பு படிக்கிறீர்கள்? என கேட்டறிந்து கவனமுடன் படிப்பில் அக்கறை செலுத்துமாறு அறிவுரை கூறினார். மேலும் அதிகாலையில் பணிக்கு சென்ற தூய்மை பணியாளர்களையும் வரவழைத்து அவர்களின் பெயர் விபரங்களை கேட்டறிந்து நலம் விசாரித்தார். துணை முதலமைச்சருடன் கை குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    • 11.9 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.8 இன்ச் மல்டி மீடியா இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
    • புதிய ஆடி Q3 மாடலில் 25.7 கிலோவாட் பேட்டரியுடன் கூடிய பிளக் இன் ஹைபிரிட் வசதியுடன் வருகிறது.

    ஆடி நிறுவனம், மூன்றாம் தலைமுறை Q3 காரை சர்வதேச அளவில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் புதிய Q3 மாடல் அசத்தலான அப்டேட்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    இந்த காரில், 147 பிஎச்பி பவர் வெளிப்படுத்தம் திறன் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 261 பிஎச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 147 பிஎச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    மேலும், இதில் 11.9 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.8 இன்ச் மல்டி மீடியா இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. புதிய ஆடி Q3 மாடலில் 25.7 கிலோவாட் பேட்டரியுடன் கூடிய பிளக் இன் ஹைபிரிட் வசதியுடன் வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காசாவின் உலர்ந்த வானத்தில் பெய்யும் தமிழ்நாட்டு மழையாகும்
    • மத்திய கிழக்கை நோக்கி எங்கள் வெள்ளைப் புறா

    காசா மீது இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். காசா இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

    காசா இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காசாவில் நிகழும்

    இனப்படுகொலைகளுக்கு எதிராகத்

    தமிழ்நாடு சட்டமன்றத்தில்

    தீர்மானம் நிறைவேற்றப்படும்

    என்பது ஒரு நற்செய்தியாகும்;

    நம்பிக்கை தருவதாகும்

    காசாவின்

    உலர்ந்த வானத்தில் பெய்யும்

    தமிழ்நாட்டு மழையாகும்

    முதலமைச்சர்

    மு.க.ஸ்டாலின் அவர்களின்

    மனிதாபிமானத்தை

    மனம் உள்ளவர்களெல்லாம்

    பாராட்டுவார்கள்

    காசா ஒரு சிறு பகுதிதான்

    41 கி.மீ நீளமும்

    10 கி. மீ அகலமும் கொண்ட

    ஓர் ஒட்டு நிலம்தான்

    ஆனால்,

    தண்ணீர் இல்லாத

    அந்தப் பாலை நிலத்தில்

    ரத்த ஊற்று பீறிடுகிறது

    உலகத்தின் கண்களில் விழுந்த

    கந்தகத் தூளாக

    அது உறுத்திக்கொண்டே இருக்கிறது

    முதலில் அந்த மக்கள்

    உயிரோடு இருக்க வேண்டும்

    இந்தத் தீர்மானம்

    சர்வதேசச் சமூகத்தின் மீது

    தமிழ்நாடு சட்டமன்றம் காட்டும்

    அன்பென்றும் அக்கறையென்றும்

    போற்றப்படும்

    தீப்பிடித்த வீட்டில்

    ஆளுக்கொரு குடம் தண்ணீர்

    அள்ளி இறைப்பதுபோல

    அனைத்துக் கட்சிகளும்

    இந்தத் தீர்மானத்தை

    ஆதரிக்கும் என்று நம்புகிறோம்

    இது

    உலக சமாதானத்துக்கு

    எங்கள் பங்கு

    மத்திய கிழக்கை நோக்கி

    எங்கள் வெள்ளைப் புறா

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×