என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
    • இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார்.

    ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார். அவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அவர் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணையவுள்ளார்.

    பிபிஎல் (2011-12) சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு பங்களித்தார். அவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
    • விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. 41 பேரை அடித்து கொன்றார்கள், மிதித்து கொன்றார்கள். தள்ளுமுள்ளுவை சாக்காக வைத்து விஜயை காலி செய்து விட்டால் என்ன செய்வது?

    விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார். இந்த விவகாரத்தில் ஆளும் தி.மு.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது என்றார்.

    நயினார் நாகேந்திரனின் பேச்சு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் நயினார் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    • ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
    • கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 6-ம் தேதி ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    அப்போது கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

    இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தற்போது இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான A1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.

    சென்னையில் ரவுடி நாகேந்திரன் மரணத்தையடுத்து கூடுதலாக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரன் வீடு அமைந்துள்ள வியாசர்பாடி முல்லை நகர் அருகே 250க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • ஜி.டி. நாயுடுவாக என் அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார்.
    • மிகப்பெரிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறார்.

    கோவை மாவட்டம் அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 10.10 கி.மீ. நீளம் கொண்ட 4 வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    நான் இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறேன். நான் ஷூட்டிங்கிற்காக இங்கு வந்து இருக்கிறேன். படத்தின் பெயர் ஜி.டி. நாயுடு. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த மாதிரி, ஜி.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறோம்.

    இதில் ஜி.டி. நாயுடுவாக என் அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணா இயக்குகிறார். வர்கீஸ் தயாரிக்கிறார். நான் ராமையா பிள்ளை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

    இப்போது கோயம்புத்தூரில் ஜி.டி. நாயுடு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் இதே நேரத்தில், ஒரு மிகப்பெரிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறார். அதற்காக கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.

    எங்கள் படக்குழுவின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜி.டி. நாயுடு அவர்களின் குடும்பத்தாருக்கும் எங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும்.

    இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.

    இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் (விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்), இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் நமது தொழில்கள் மற்றும் நுகர்வோர் பயனடைவார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குள், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வணிகக் குழு உங்களுடன் வருவதால், நீங்கள் இந்தியாவிற்கு வருகை தருவது, இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையில் புதிய வீரியத்தின் அடையாளமாகும்.

    இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மிகப்பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளன

    இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளில் பரஸ்பர நம்பிக்கை நமது உறவுகளின் அடித்தளத்தில் உள்ளது. உலகளாவிய ஸ்திரமின்மையின் தற்போதைய சகாப்தத்தில், இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.

    இன்றைய கூட்டத்தில், இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் உக்ரைன் மோதல் குறித்து விவாதித்தோம். உக்ரைன் மோதல் மற்றும் காசா பிரச்சினைகளில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறினார்.

    • இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 'பைசன்' 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான போஸ்டர் மற்றும் பாடல்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று 6 மணிக்கு 'காளமாடன் கானம்' பாடல் வெளியாக உள்ளதாக இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 



    • சுமார் 10.10 கி.மீ. நீளம் கொண்ட 4 வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • மேம்பாலத்தில் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    கோவையில் ரூ.1,791 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 10.10 கி.மீ. நீளம் கொண்ட 4 வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

    தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை-நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அதனை மிஞ்சும் வகையில் கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரைவழிப்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகிறது. இந்த பாலம் திறக்கப்பட்டதும் 10 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கலாம்.

    குறிப்பாக விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணாசிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய சந்திப்புகளில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே கடந்த 2020-ம் ஆண்டு இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அதில் ஒரு ரெயில்வே கிராசிங்கும் வருகிறது. மேம்பாலத்திற்காக மொத்தம் சுமார் 4.90 ஏக்கர் நிலம் ரூ.228 கோடி மதிப்பில் கையகப்படுத்தப்பட்டது. இந்த மேம்பால கட்டுமானம் முன்னேற்பாடு பணி, அதாவது ப்ரீகாஸ்ட் முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த மேம்பாலம் மூலம் நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும். இந்த மேம்பாலத்தில் கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை என 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தில் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் அ.தி.மு.க. கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறந்தது. தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலில் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். பிறகு மக்கள் ஒன்றிணைவார்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒரே அணியில் திரளப் போகிறார்கள்.

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார். இந்த விவகாரத்தில் ஆளும் தி.மு.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கேங்மேன், ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த "விடியாத அரசு" 2026 தேர்தலில் மக்களிடம் தகுந்த பதிலைப் பெறும்.

    திண்டுக்கல்லில் நீட் தேர்வில் மாணவி ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் இன்னும் அதை செய்யவில்லை. இப்போது நீட் தேர்விலேயே வந்து நிற்கிறார்கள். நீட் தேர்வு மூலம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு கிடைக்கும். மேலப்பாளையத்தில் 10 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

    எந்த கட்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறுகிறார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர்கள் வெற்றி பெறுவோம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்.

    வருகிற 12-ந்தேதி திட்டமிட்டபடி எனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பணி செய்து வருவதால் சுற்றுப்பயணம் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுப்பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. அரசும், காவல்துறையும் கொடுக்கும் அனுமதியின்படி சுற்றுப்பயணம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள் த.வெ.க கொடி பா.ஜ.க. கூட்டத்தில் எப்போது பறக்கும் என்று கேட்ட கேள்விக்கு, தற்போது அதற்கு பதிலளிக்க இயலாது என புன்னகையுடன் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் முத்து பலவேசம், தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நேற்று அந்த காலணிகள் 2-ம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்டன.
    • அடுத்த கட்ட விசாரணைக்கு தேவைப்படும் என்பதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டத்தில் கூட்டத்துக்கு வந்திருந்த பலரும் தங்கள் காலணிகள் மற்றும் உடமைகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதனால், காலணிகள் சாலையில் நாலாபுறமும் சிதறி கிடந்தன. பின்னர், தூய்மை பணியாளர்கள் மூலமாக அந்த காலணிகள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டது. இதனை, ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் பார்வையிட்டார். அதன் பின்னர் கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அதன் பின்னர் சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ராகர்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து, நேற்று அந்த காலணிகள் 2-ம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்டன. அந்த காலணிகளை கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஏற்றி பாலம்மாள் புரத்தில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நேற்று சேகரித்த காலணிகளின் எடை சுமார் 450 கிலோ இருக்கும் என்றும், அது அடுத்த கட்ட விசாரணைக்கு தேவைப்படும் என்பதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
    • படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

    Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

    இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்நிலையில், இதயம் முரளி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    • அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தனிப்பட்ட தரவை பாதுகாக்கும் தொழில்நுட்ப அம்சமாகும்.

    வாட்சப் செயலுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி என்பதால் பலரும் அரட்டை செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அரட்டை செயலியில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்று இணையத்தில் கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த அளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "எங்கள் முழு வணிகமும் நாங்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம் மற்றும் அவர்களின் தரவை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் வரப்போகிறது. அனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. மேலும் உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம்.

    எல்லா இடங்களிலும் எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அதற்கு அடுத்த பதிவில், "எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இப்போது சோதனையில் உள்ளது. நாங்கள் அதை நவம்பரில் வெளியிடப் போகிறோம்" என்று தெரிவித்தார்.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இல்லாதது மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரட்டை செயலி செயல்படுகிறது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

    ×