என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எடப்பாடி பழனிசாமி கார் மாறி சென்றாலும் பரவாயில்லை, விழும் கால் மாறி விழுகிறார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* எடப்பாடி பழனிசாமி கார் மாறி சென்றாலும் பரவாயில்லை, விழும் கால் மாறி விழுகிறார்.
* கால் மாறி விழுந்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.
* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை உள்வாடகைக்கு விட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை பார்த்த வி.சி.க.வினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பைக் மீது எனது கார் மோதவில்லை. பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் என்று கூறி இருந்தார்.
மேலும், திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரிய வருகிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.
எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.
அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
- காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை.
டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை அவர் தொடங்கி உள்ளார்.
இன்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆப்கன் அமைச்சர் முத்தாகி கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில் பேசிய ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
எங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு உங்கள் தேசிய வளர்ச்சிக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது.
அதை மேம்படுத்துவதற்காக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்ப பணியகத்தை இந்திய தூதரக அந்தஸ்துக்கு மேம்படுத்துவதை இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த நட்பை உறுதிப்படுத்துவதிலும், நமது உறவுகளை முன்னேற்றுவதிலும் உங்கள் வருகை ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.
கடந்த மாதம் ஆப்கனில் பூகம்பம் ஏற்பட்ட க சில மணி நேரங்களுக்குள் போது இந்தியா நிவாரணப் பொருட்கள் பூகம்பம் ஏற்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம்.
இரு நாடுகளும் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலால் நமது வளர்ச்சி ஆபத்தில் உள்ளது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த உங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எங்களுடன் நீங்கள் காட்டிய ஒற்றுமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் சுரங்க வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு நீங்கள் விடுத்த அழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் நாம் விவாதிப்போம். மேலும் காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த 2021 இல் தாலிபான் ஆட்சிக்கு வந்த பின் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட உள்ளது கவனம் பெற்றுள்ளது
- இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.
- திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.
- 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
- இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. தூண்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்கு போன்றவற்றால் இந்த பணியில் தடை ஏற்பட்டது. இதனால் 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
பின்னர் 2020-ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கின. இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது. 17 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும். அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும் என்றனர்.
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட கால தடைக்கு பிறகு இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. இது லட்சக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி மாதத்தில் ரெயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வேதுறை தற்போது செய்து வருகிறது.
- ஆளுநரை தமிழ் கற்க வைத்ததே தமிழ்நாட்டின் போராட்டம் தான்.
- எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் 2026-ம் ஆண்டு தேர்தலில் சங்கிகளை மீண்டும் விரட்டி அடிப்போம்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* நமது நண்பரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கி விட்டார்.
* பாசிச பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஆளுநர் ரவி தி.மு.க.விற்கு பிரசாரம் செய்து வருகிறார்.
* தமிழ்நாடு யாருடன் போராடும் என கேள்வி எழுப்பி உள்ளார் ஆளுநர்.
* தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து போராடும் என ஏற்கனவே கூறிவிட்டேன்.
* தமிழை பயின்று வருவதாக கூறி இருக்கிறார் ஆளுநர்.
* ஆளுநரை தமிழ் கற்க வைத்ததே தமிழ்நாட்டின் போராட்டம் தான்.
* நேரடியாக தமிழகத்தில் நுழைய முடியாமல் அ.தி.மு.க. தோள் மீது பா.ஜ.க. ஏறி வருகிறது. புதிதாக பலரையும் தேடிக் கொண்டுள்ளது.
* எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் 2026-ம் ஆண்டு தேர்தலில் சங்கிகளை மீண்டும் விரட்டி அடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது.
கிராம ஊராட்சிச் செயலர் பணி என்பது, கிராம ஊராட்சி மன்றத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது, கிராம ஊராட்சிக்கு வரும் அரசாணைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவது, கிராம வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியது.
கிராம ஊராட்சி செயலர் பணிக்கு www.tnrd.tn.gov.in தளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தி, அம்மாத இறுதிக்குள் பணி ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
வரும் நவம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
வரும் நவம்பர் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பிறகு டிசம்பர் 3-ந்தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துவர்.
இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 16-ந்தேதிக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து 17-ந்தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளுக்கு இயக்க ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
- 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
- போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அக்டோபர் 2023 இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் 2 வருடங்கள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் -இன் முயற்சியால் முடிவுக்கு வர உள்ளது.
பணய கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் , இஸ்ரேலும் ஏற்றுக்கொண்ட நிலையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இன்று இந்த போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காசாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறும். இஸ்ரேலியக் காவலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள். ஹமாஸ் காவலில் உள்ள மீதமுள்ள இஸ்ரேலியக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.
இதனால் பணய கைதிகள் விடுதலையை எதிர்கொக்கும் இஸ்ரேலியர்களும், தினந்தோறும் நிகழும் தாக்குதல்களில் இருந்து விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பெற்ற காசா மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த 2 வருடங்களில் நடந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் 67,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐநா கூறுகிறது. இதற்கிடையே உணவுப் பொருட்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்ததன் காரணமாக இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் காசா சுகாதர அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவர்களின் 1,029 குழந்தைகள் ஒரு வயதுக்குட்பட்டவர். இனப்படுகொலையின் போது பிறந்து பின்னர் 420 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள இடிபாடுகளை அகற்றவே 10 வருடங்கள் ஆகும் என ஐநா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர் சோகங்களுக்கு முடிவுரையாக காசா மக்களுக்கு தற்போதைய போர் நிறுத்தம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், வியாழக்கிழமை அதிகாலையில் காசாவின் வடக்கு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் சில பகுதிகளில் தொடர்ந்த போதிலும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இந்த போர் நிறுத்தத்திற்கான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கான் யூனிஸில் உள்ள இளைஞர்கள் வீதிகளில் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். கான் யூனிஸைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற இளைஞர், "போர் நிறுத்தம், இரத்தகளரி, கொலைகளுக்கு முடிவு வந்துவிட்டது. ஒட்டுமொத்த காசா பகுதி, அரபு மக்கள் மற்றும் உலகமே மகிழ்ச்சி அடைகிறது" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
காசாவில் இரண்டு ஆண்டுகளாக நடந்த கொலைகளுக்கும் இனப்படுகொலைக்கும் பிறகு பாலஸ்தீனிய குடிமக்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணம் இது என்று காலெத் ஷாத் என்ற இளைஞர் குறிப்பிட்டார்.
- சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.
- சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் ‘பேபி குயின்’ என்று அழைக்கப்படுகிறார்.
திரை உலகில் 'ஹிட்' படங்கள் கொடுத்து வருமானத்தை பெருக்கி கொண்டு ரியல் எஸ்டேட் துறையில் பல நடிகைகள் முதலீடு செய்து சூப்பர் ஹிட் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் முன்னணி கதாநாயகிகள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர்.
நயன்தாரா: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்து சென்னையில் அபார்ட்மென்ட், ஐதராபாத், கொச்சியில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சமந்தா: சினிமா உலகில் உச்சத்தை தொட்டுள்ள சமந்தா ஐதராபாத்தில் பலகோடி மதிப்புள்ள வீடுகளை வாங்கி 'பிராபர்டி குயின்' என்று பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.
காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையான காஜல் அகர்வால் ரியல் எஸ்டேட்டிலும் பேரரசியாக இருக்கிறார். மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் வணிக வளாகங்களில் பங்குகள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஹன்சிகா: தமிழ் சினிமா ரசிகர்களால் 'சின்ன குஷ்பு' என்று வர்ணிக்கப்படுபவர் ஹன்சிகா. சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு, அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் 'பேபி குயின்' என்று அழைக்கப்படுகிறார்.
ராஷ்மிகா: ராஷ்மிகா ஐதராபாத், பெங்களூரு, மும்பையில் அபார்ட்மென்ட்கள், வீடுகள் வாங்கி இருக்கிறார். 'நேஷனல் கிரஷ்' என்று அழைக்கப்படும் 'பிராபர்டி கிரஷ்' ராஷ்மிகா மந்தனா.
ஷில்பாஷெட்டி: ஷில்பா ஷெட்டி மும்பையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்கள், பங்களாக்கள் மட்டுமின்றி துபாயிலும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து வணிக வளாகங்களிலும் பங்கு வைத்துள்ளார்.
கியாரா அத்வானி: நடிகை கியாரா அத்வானி மும்பையில் அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்து வருகிறார்.
தமன்னா: தமன்னா மும்பை ஐதராபாத்தில் வீடுகள் மட்டுமின்றி சில தொழில் அதிபர்களுடன் இணைந்து பிசினஸ் செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
வித்யாபாலன்: நடிகை வித்யாபாலன் மும்பையில் பல அபார்ட்மெண்ட்கள் வாங்கி 'ஸ்மார்ட் இன்வெஸ்டர்' என புகழ் பெற்று வருகிறார்.
- இந்த நாவலை 1994 இல் பிரபல ஹங்கேரிய இயக்குனர் பேலா டார், 7 மணிநேரம் 30 நிமிடம் ஓடக்கூடிய முழு நீள திரைப்படமாக எடுத்தார்.
- பேரழிவு என்பது ஒரே ஒரு நிகழ்வு அல்ல, அது தொடர்ச்சியான ஒரு செயல்முறை ஆகும்.
நான் பேரழிவை பற்றி எழுதுகிறேன் - லாஸ்லோ
71 வயதான ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்கை (László Krasznahorkai) 2025 நோபல் பரிசுக்கு தேர்வாகி உள்ளார்.
1954இல் ஹங்கேரியின் தென்கிழக்குப் பகுதியில், ரோமானியா எல்லைக்கு அருகில் உள்ள குயூலா (Gyula) என்ற சிறிய நகரில் லாஸ்லோ பிறந்தார்.
அபத்தவாதம், அதீதம், இருத்தலியல் ஆகிய பாங்குகளில் அமைந்த இவரின் படைப்புகள், பிரான்ஸ் காஃப்கா மற்றும் தாமஸ் பெர்ன்ஹார்ட் போன்றோரின் எழுத்து மரபில் இருந்து உருவானது எனலாம்.

சரிவின் விளிம்பில் இருக்கும் சமூகம் இவரின் படைப்புகளில் மீண்டும் மீண்டும் ஊடாகுகிறது. அதுவே இவருக்கு பேரழிவுவின் (Master of Apocalypse) ஆசான் என்ற பெயர் அமைய காரணமாகிறது.
தற்கால எழுத்தாளர்களில் மத்திய ஐரோப்பிய இலக்கிய மரபில் தனக்கென தனி இடத்தை லாஸ்லோ உருவாகியுள்ளார்.
லாஸ்லோவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முற்றுப்புள்ளிகள் இல்லாத மிக நீளமான, தொடர்ச்சியான வாக்கியங்களைப் பயன்படுத்துவதுதான்.
இது ஒரு கதையை ஒரே மூச்சில் சொல்வது போன்ற இடைவிடாத, தலைசுற்ற வைக்கும் உணர்வை வாசகருக்குக் கொடுக்கும்.
லாஸ்லோவின் முதல் நாவல் 'சாதன்டாங்கோ' (Satantango) 1985இல் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.
கம்யூனிசம் வீழ்ச்சியடையும் தருவாயில், ஹங்கேரிய கிராமப்புறத்தில் கைவிடப்பட்ட ஒரு கூட்டுப் பண்ணையில் வாழும் ஏழைகளின் அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தை சித்தரிக்கும் இந்த பிரதி நம்பிக்கைத் துரோகம் மற்றும் சமூகச் சரிவைப் பற்றி பேசுகிறது.
இந்த நாவலை 1994 இல் பிரபல ஹங்கேரிய இயக்குனர் பேலா டார், 7 மணிநேரம் 30 நிமிடம் ஓடக்கூடிய முழு நீள திரைப்படமாக எடுத்தார்.
லாஸ்லோவின் 2வது நாவலான 'தி மெலன்கோலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்' (The Melancholy of Resistance) 1989 இல் வெளிவந்தது. ஹங்கேரியில் கார்பாத்தியன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகருக்கு மர்மம் மற்றும் வினோதம் நிறைந்த சர்க்கஸ் குழு ஒன்று வருகிறது.
உயிரிழந்த ராட்சத திமிங்கலத்தின் சடலத்தை அவ்வூரில் சர்க்கஸ் குழு காட்சிக்கு வைக்கிறது. இதனை தொடர்ந்து அவ்வூரில் நிகழும் வன்முறை, அதிகார மாற்றத்திற்கான களம் அமைக்கபடுவதை விவரிக்கும் நாவல் ஒழுங்குக்கும் குழப்பத்திற்கும் இடையிலான போராட்டத்தை உவமைப்படுத்துகிறது.
இந்த நாவலும் இயக்குனர் பேலா டார் இயக்கத்தில் 'வெர்க்மீஸ்டர் ஹார்மோனீஸ்' என்ற பெயரில் 2000 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது.
1999 இல் வெளிவந்த லாஸ்லோவின் போரும் போரும் (War and war) நாவல், கோர் என்ற ஆவணக் காப்பாளரின் கதையை விவரிக்கிறது.
தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் கோர், தான் கண்டறிந்த ஒரு பண்டைய காவியத்தை உலகறியச் செய்ய புடாபெஸ்ட்டில் இருந்து நியூயார்க்கிற்குப் பயணம் மேற்கொள்வதாக கதை நகர்கிறது. இந்த படைப்பு லாஸ்லோவின் முற்றுப்புள்ளி இல்லாத நடைக்கு சிறந்த உதாரணமாக முன்வைக்கப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின் 2016 இல் 'பாரன் வென்கைமின் ஹோம் கமிங்' (Baron Wenckheim's Homecoming) என்ற நாவலை லாஸ்லோ வெளியிடுகிறார்.
ரஷிய இலக்கிய மேதை தாஸ்தோயெவ்ஸ்கியின் கதை பாணியை பின்பற்றி எழுதப்பட்ட இந்நாவல் சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவன் தன் குழந்தைப் பருவ காதலை தேடி அர்ஜென்டினாவிலிருந்து தாய்நாட்டிற்கு திரும்புவதை நகைச்சுவை மற்றும் சோகத்துடன் விவரிக்கிறது.

கடைசியாக லாஸ்லோவின் படைப்பாக 2021இல் 'ஹெர்ஷ்ட் 07769' (Herscht 07769) என்று நாவல் வெளிவந்துள்ளது. வழக்கமாக ஹங்கேரியை தனது கதைகளின் களமாக வரிக்கும் லாஸ்லோ இந்த நாவலை ஜெர்மனியின் துரிங்கன் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார்.
அந்நகரில் நிகழும் கொலைகள், வன்முறை அதனால் சமகாலத்தில் நிலவும் அமைதியின்மை ஆகியவற்றை பின்னணியாக கொண்டு இக்கதை நகர்கிறது. வன்முறையும் அழகும் ஒன்றிணையும் புள்ளியாக இந்த படைப்பை விமர்சகர்கள் கருதுகின்றனர்.

1990கள், மற்றும் 2000 த்தின் முற்பகுதியில் சீனா மற்றும் ஜப்பானுக்கான தனது பயணங்களின் தாக்கம் குறித்தும் லாஸ்லோ எழுதியுள்ளார்.
பரவலாக நாவலாசிரியராக கருதப்படும் லாஸ்லோ 2008இல் 'செய்போ தேர் பிலோ' (Seiobo There Below) என்ற சிறுகதை தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மொத்தத்தில் லாஸ்லோ தனிமனித மற்றும் சமூகத்தின் வீழ்ச்சி குறித்தும் நிலையின்மையால் சபிக்கப்பட்ட அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட மனித இருப்பு குறித்தும் தனது படைப்புகளில் தொடர்ந்து பேசிய வண்ணம் உள்ளார் எனலாம். இதையே "நான் பேரழிவைப் பற்றி எழுதுகிறேன்" என்ற லாஸ்லோவின் கூற்றும் தெள்ளிதின் விளக்குகிறது.
பேரழிவு குறித்து நேர்காணல் ஒன்றில் லாஸ்லோ கூறியவை பின்வருமாறு, "பேரழிவு என்பது ஒரே ஒரு நிகழ்வு அல்ல, அது தொடர்ச்சியான ஒரு செயல்முறை ஆகும். அது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடரும். பேரழிவு என்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தீர்ப்பு"
- ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள், நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும்.
- நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இல் உள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், PTC காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை (Entry/Exit Structures) வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை Bridge and Roof Company (India) Limited நிறுவனத்திற்கு ரூ.250.47 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள் (civil works), நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் (architectural finishes), மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும். மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெரும்பாலான நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற போக்குவரத்தை மையப்படுத்திய பிரத்யேக சொத்து மேம்பாட்டு இடங்களை (Transit Oriented Property Development - TOD) உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை (Non-Farebox Revenue) ஈட்ட முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof Company (India) நிறுவனத்தின் சார்பாக பொது மேலாளர் திரு.T.ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர். டி. ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் சில நாட்களாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் இரவு வேளைகளில் மழை பெய்ததால் உஷ்ணம் குறைந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்களாகியும் வடகிழக்கு பருவமழைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.






