சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி: உள் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்

ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள், நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும்.நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி: உள் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்
Published on

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இல் உள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், PTC காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை (Entry/Exit Structures) வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை Bridge and Roof Company (India) Limited நிறுவனத்திற்கு ரூ.250.47 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள் (civil works), நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் (architectural finishes), மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும். மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெரும்பாலான நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற போக்குவரத்தை மையப்படுத்திய பிரத்யேக சொத்து மேம்பாட்டு இடங்களை (Transit Oriented Property Development - TOD) உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை (Non-Farebox Revenue) ஈட்ட முடியும்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof Company (India) நிறுவனத்தின் சார்பாக பொது மேலாளர் திரு.T.ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர். டி. ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com