என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    தமிழகத்தில் சில நாட்களாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் இரவு வேளைகளில் மழை பெய்ததால் உஷ்ணம் குறைந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனிடையே, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

    இந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்களாகியும் வடகிழக்கு பருவமழைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

    • நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை.
    • அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு போர்களை தான் நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அது டிரம்புக்கு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

    இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை. ஆனால் அவர்கள் (நோபல் பரிசு குழு) என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் அதற்காக அதை செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். நான் நிறைய உயிர்களைக் காப்பாற்றவே அதை செய்தேன். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு ஒரு பரிசு கிடைத்தது. ஆனால் அவர் நம் நாட்டை அழித்தார். ஒபாமா ஒரு நல்ல அதிபர் அல்ல என்றார்.

    கடந்த 2009-ம் ஆண்டு ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச ராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    • ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
    • இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், நடிகர் சூர்யா- இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.

    'அஞ்சான்' படத்தின் இந்தி மொழிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது. 



    • அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 315 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 310 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பஸ்களும் நாளை 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    • மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
    • நேற்றும் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துக் கொண்டே இருக்கிறார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் நீலாங்கரை வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு, சென்னை ஐகோர்ட்டு, விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் என பிரபலங்களின் வீடுகளுக்கும், முக்கிய இடங்களுக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே இருக்கிறார்.

    தொடர்ச்சியாக டி.ஜி.பி. அலுவலகத்தின் இ-மெயில் முகவரிக்கு மிரட்டல் கடிதம் வந்து கொண்டே இருக்கிறது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

    இப்படி ஒரு மாதத்துக்கும் மேலாக முக்கிய இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கூறிவரும் வாலிபர் எங்கிருந்து மிரட்டல் விடுகிறார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

    இ-மெயில் மூலமாக இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கும் மர்மநபர்கள் தங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு இமெயில் ஐ.பி. முகவரி உடனடியாக மாறும் வகையில் அதனை தயார் செய்து வைத்துக் கொண்டே மிரட்டல் விடுப்பது வழக்கம்.

    இப்படி மிரட்டல் விடும் நபர் எங்கிருக்கிறார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. எந்த முகவரியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது என்று போலீசார் ஆராய்ந்து பார்த்தால் அது வெளிநாடுகளில் இருந்து வந்தது போன்று காட்டி விடும்.

    இதன் காரணமாகவே மிரட்டல் ஆசாமி எங்கிருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி தான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரும் தொடர்ச்சியாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மிரட்டலை அனுப்பி கொண்டே இருக்கிறார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக இதுவரையில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தீவிரவாத தடுப்பு பிரிவு செல்போன் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வெடிகுண்டு மிரட்டல் கிடைத்தால் உடனடியாக அதனை போலீசார் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் இ-மெயில் மூலம் விடுக்கப்படும் மிரட்டல்களை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதன்மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் மர்மநபர் போலீசுருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறார்.

    இப்படி சென்னை போலீசை அலறவிடும் வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை கண்டுபிடிப்பதற்காக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை கண்டுபிடிப்பதற்காக சைபர் கிரைம் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியையும் போலீசார் நாடி உள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகர சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நபர் போலீசை குழப்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் செயல்பட்டு வருகிறார்.

    இருப்பினும் அவரது மிரட்டல்களை நாங்கள் ஒருபோதும் அலட்சியமாக கருதாமலேயே செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போதும் வெடிகுண்டு நிபுணர்களோடு சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தவறுவதில்லை.

    தினம்தோறும் வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் சென்னை போலீசாருக்கு தேவையற்ற பணிச்சுமையும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே ஏதாவது ஒரு வழியில் மிரட்டல் ஆசாமியை கண்டு பிடித்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    இப்படி மிரட்டல் ஆசாமியை பிடிப்பதற்கு போலீசார் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்றும் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம், மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம், அசோக் நகரில் உள்ள கிஷோர் கே.சாமி, கோடம்பாக்கத்தில் உள்ள செய்தி ஏஜென்சி நிறுவனம் அலுவலகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்பட ஒரே நாளில் சுமார் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    இப்படி வெடிகுண்டு மிரட்டல்களால் சென்னை போலீசை திணறடிக்கும் நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகள் பலனளிக்குமா?

    இல்லை வெடிகுண்டு மிரட்டல்கள் தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார்.
    • வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான்.

    இவர் பஞ்சாபின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் சிறந்த உடற்பயிற்சி நிபுணரும் ஆவார். சொந்தமாக உடற்பயிற்சி கூடம் வைத்து உடற்பயிற்சி நிபுணராக வாழ்க்கையை தொடங்கிய இவர் கடந்த 2009-ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்றார், மிஸ்டர் ஆசியா போட்டியில் 2-ம் இடமும் பிடித்தார்.

    2013-ம் ஆண்டு அர்னால்ட் பாடிபில்டிங் போட்டிக்காக ஸ்பெயின் சென்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்தார். அர்னால்ட் அவர் உடலை பார்த்து வியந்து அவரை பாராட்டி பேசினார். அர்னால்டின் அந்த பாராட்டு வரீந்தர் சிங்கை இந்தியாவின் கொண்டாடப்படும் நட்சத்திரமாக ஆக்கியது. அதன் பிறகு இந்தியாவில் அவருக்கு படவாய்ப்புகள் வரத்தொடங்கின.

    2012-ம் ஆண்டு பஞ்சாபி மொழியில் கபடி ஒன்ஸ் அகைய்ன் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர் 2014-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகமானார். அதன் பிறகே பிரபல நட்சத்திரமானார்.

    ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார். இறுதியாக அவர் சல்மான்கான், கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்த டைகர் 3 படம் 2023-ம் ஆண்டு வெளியானது.

    உடற்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் அசைவ உணவே சாப்பிடுவார்கள். ஆனால் வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார். சைவ உணவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிவந்தார்.

    இந்த நிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரது கையில் (பைசெப்) சிறு காயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அறுவை சிசிச்சை செய்து கொள்ள அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
    • இரண்டாவது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.

    போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

    • காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர்.
    • கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள மேலத்திடியூரில் பி.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மட்டும் அல்லாது கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    இதனால் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதுதவிர விடுமுறை காலங்களில் அரசு போட்டித்தேர்வுகள் பெரும்பாலானவை இந்த கல்லூரியில் தான் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இங்கு என்ஜினீயரிங் படித்துவரும் உவரியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவன் நாகர்கோவிலில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது எடுத்த பரிசோதனையில், அந்த மாணவனுக்கு விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய 'லெப்டோஸ்பை ரோசிஸ்' எனும் எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த தகவல் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர். அதில் அவர்களுக்கும் எலிக்காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதார அலுவலர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கல்லூரியில் அதிரடி ஆய்வு நடத்தியதில், சுத்திகரிக்கப்படாத குடிநீர், சுகாதாரமற்ற வளாகம், சுத்தமில்லாத கழிப்பறைகள், உணவு பாதுகாப்பு கூடத்தில் பாதுகாப்பு இல்லாத முறையில் உணவு தயாரிப்பு உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அனைத்து சுகாதார பணிகளையும் மேற்கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டனர்.

    இதனிடையே நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் கல்லூரி உணவு கூடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் செய்யும் உபகரணங்களான மாவு அரைக்கும் எந்திரம் உள்ளிட்டவைகள் சுத்தமாக இல்லாததும் அதில் புஞ்சைகள் இருந்ததும், கல்லூரி சமையலறையில் இருந்து அழுகிய காய்கறிகள் இருந்ததும், கல்லூரி வளாகத்தில் முறையான வடிகால் அமைப்பு பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உணவுக்கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் கூறியதாவது:-

    கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாட்டினால் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது கல்லூரியில் சுகாதார பணிகள் மேற்கொண்டு முழுமையாக முடிந்த பின்னரே கல்லூரியை திறக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    அதேநேரம் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இன்றும், நாளையும் மருத்துவ முகாம் நடத்தி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். வருகிற புதன்கிழமை கல்லூரி திறக்கப்படும் என மாணவர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முழுமையான சுகாதார பணிகள் முடிந்த பின்னரே திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    கல்லூரியின் பின்புறம் உள்ள வெள்ளநீர் ஓடையில் இருந்து நீரை எடுத்து குடிக்க, உணவு சமைக்க பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வித குளோரினேசனும் செய்யவில்லை. எனவே உடனடியாக வெளியில் இருந்து குடிநீர் விலைக்கு வாங்க வேண்டும். இல்லையெனில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து குளோரினேசன் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கல்லூரிக்கு செல்லும் குடிநீர் பைப் இணைப்புகள் தாசில்தார் மேற்பார்வையில் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.
    • அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்

    இந்தியா- பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    அவருக்கு சில நாடுகளும் ஆதரவு தெரிவித்து பரிந்துரைத்தன. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்க உள்ள நிலையில் அதுகுறித்து டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த டிரம்ப்,"நாங்கள் 7 போர்களை தீர்த்து வைத்தோம். 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.

    வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்றார்.

    இதற்கிடையே வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரம்ப்பின் படத்தை "அமைதித் தலைவர்" என்ற தலைப்பில் பகிர்ந்து உள்ளது.

    இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டொனால்டு டிரம்புக்கு நோபல் பரிசு கொடுங்கள்.அவர் அதற்கு முழு தகுதி படைத்தவர்" என்று தெரிவித்துள்ளது.

    இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில் நேதன்யாகுவின் கருத்து வந்துள்ளது.  கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க அதிகாரபூர்வமாக பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.
    • தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.

    காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.

    சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஏ.சி. இருக்கைக்கு ரூ.600 முதல் ரூ.900 ரூபாய் வசூலிக்கப்படும்.

    ஆனால் இப்போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆம்னி பஸ்சில் இந்த கட்டணம் ரூ.3989 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.

    ஏ.சி. படுக்கை வசதிக்கு மதுரைக்கு ரூ.2000 முதல் ரூ.3200 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2000 முதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் ரூ.3500. ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2,700 கட்டணம் தற்போது நிர்ணயித்து உள்ளனர்.

    இதே போல நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.2460 கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.3363 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்தக் கட்டணம் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் அதன் தேவையை பொருத்து உயர்த்தி கொள்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் குடும்பமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் தனியார் பஸ் ஆபரேட்டர்கள் வெளிப்படையாக தங்களது இணையதளத்தில் கூடுதல் கட்டணத்தை அறிவித்து முன்பதிவு செய்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    எனவே பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். விசேஷ நாட்களை பயன்படுத்தி இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

    மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் பயன்பாடு குறையும். கட்டணத்தையும் குறைக்க வழியுண்டு. எனவே தென் மாவட்டங்களுக்கு பகல் நேர ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். முன்பதிவு இல்லாத ரெயில் சேவையை அதிகரித்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்ய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

    • பள்ளி பேருந்துகளின் மஞ்சள் நிறம் அமெரிக்காவில் தோன்றி உள்ளது.
    • மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் அனைவராலும் கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    சாலையில் பல்வேறு வண்ணங்களில் பல வாகனங்களை நாம் கவனித்திருப்போம். ஆனால் பெரும்பாலான பள்ளி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை கவனித்திருக்கிறோமா? பள்ளி வாகனங்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

    ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் வலைத்தளத்தின் தகவலின்படி, பள்ளி பேருந்துகளின் மஞ்சள் நிறம் அமெரிக்காவில் தோன்றி உள்ளது. 1930-களில், கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியர் கல்லூரி பேராசிரியரான ஃபிராங்க் சைர், பள்ளி வாகனங்களை ஆராயத் தொடங்கினார்.

    அதுவரை, பள்ளி வாகனங்களின் வடிவமைப்பை, குறிப்பாக பேருந்துகளை தீர்மானிப்பதற்கான குறிப்பிட்ட தரநிலைகள் எதுவும் இல்லை.

    பின்னர் அவர் அமெரிக்க பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதில் நாடு முழுவதிலுமிருந்து முக்கிய ஆசிரியர்கள், போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பேருந்தின் நிறத்தை அவர்கள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தனர். கல்லூரி பேராசிரியர், கூட்டம் நடைபெற்ற அறையின் சுவரில் பல வண்ணங்களை ஒட்டி, அதில் ஒன்றை அவர்களிடம் தேர்ந்தெடுக்கச் சொன்னார்.

    மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் அனைவராலும் கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் பெரும்பான்மையானவர்கள் மஞ்சள் நிறத்தை தேர்ந்தெடுத்தனர். அதுவே பள்ளி பேருந்துகளின் நிறமாக மாறிவிட்டது. அதனால் தான் பள்ளி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

    மஞ்சள் நிறத்தை மனிதர்களால் எளிதில் காண முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். இது அதிகபட்சமாகத் தெரியும் தன்மையைக் கொண்டுள்ளது. மனித கண்களில் கூம்பு வடிவ ஒளி ஏற்பி செல்கள் (cone-shaped photoreceptor cells) இருப்பதே இதற்குக் காரணம். கண்களில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய மூன்று வகையான கூம்புகள் உள்ளன. மஞ்சள் ஒளி சிவப்பு மற்றும் பச்சை செல்களை ஒரே நேரத்தில் பாதிப்பதால் பார்ப்பது எளிது என்றும் தெரிவித்தனர்.

    மற்ற நிறங்களை விட மஞ்சள் நிறம் மனிதக் கண்ணால் வேகமாக உணரப்படுகிறது. இது மற்ற வாகனங்களை விட பள்ளி பேருந்தை எளிதாக பார்க்கவும், கவனிக்கவும் உதவுகிறது.

    • வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    போலி மருந்துகள் அதிகரித்து வருகின்றன. எது உண்மையானது எது போலியானது என்று தெரியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையை உணர்ந்த மத்திய அரசு, அனைத்து வகையான மருந்துகளிலும் கியூஆர் குறியீடுகளை அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த முறையில் கியூஆர் குறியீடு மற்றும் பார் குறியீட்டை ஸ்கேன் செய்தால் அது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    நற்பெயரைக் கொண்ட மற்றும் நன்றாக விற்பனையாகும் முன்னுரிமை பிராண்ட் மருந்துகள், குறியீடுகள் மற்றும் பார் குறியீடுகளை வைத்திருப்பது கட்டாயமாகும்.

    வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    ஒரு மருந்தை ஸ்கேன் செய்தால் தனித்துவமான தயாரிப்பு அடையாளக் குறியீடு மருந்தின் பொதுவான பெயர்கள் பிராண்ட் பெயர் உற்பத்தி செய்யும் பகுதி, தேதி, தொகுதி எண் போன்ற விவரங்கள் தெரியும்.

    மருந்து பேக்கேஜிங்கில் பார் குறியீடு அல்லது கியூஆர் குறியீடு இல்லாவிட்டாலும் அல்லது ஸ்கேன் செய்த பிறகு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் அது போலியானது என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×