என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,055-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200

    20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560

    19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-02-2025- ஒரு கிராம் ரூ.108

    22-02-2025- ஒரு கிராம் ரூ.108

    21-02-2025- ஒரு கிராம் ரூ.109

    20-02-2025- ஒரு கிராம் ரூ.109

    19-02-2025- ஒரு கிராம் ரூ.108

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • QR குறியீடுகளை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது
    • இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.

    ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள கல்லறைகளில் திடீரென தோன்றிய மர்மமான QR குறியீடுகள் கடந்த சில மாதமாக ஒரு பெரும் புதிராக மக்களை பீதியில் ஆழ்த்தின.

    கடந்த டிசம்பரில் அங்கு மர்மமான முறையில் ஒட்டப்பட்ட QR குறியீடு ஸ்டிக்கர்களை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது வினோதமான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்த QR குறியீடு ஸ்டிக்கர்கள் மியூனிக்கில் உள்ள வால்ட்பிரைட்ஹாஃப், சென்ட்லிங்கர் ப்ரீட்ஹாஃப் மற்றும் ப்ரீட்ஹாஃப் சோல்ன் கல்லறைகளில் காணப்பட்டன.

    சிலர் இதை ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்ட் என்றும், மற்றவர்கள் இது சில குறும்புக்காரர்களின் செயல் என்றும் கருதினர். கல்லறைகள் நிர்வாகத்தின் தலைவரான பெர்ன்ட் ஹோரோஃப், இதை மிகவும் விசித்திரமான சம்பவம் என்றும், இந்த ஸ்டிக்கர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று தனக்குப் புரியவில்லை என்றும் கூறினார்.

     

    கல்லறைகளில் இருந்து ஸ்டிக்கர்களை அகற்றுவது அதிக செலவை ஏற்படுத்துவதால், இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.

    இறுதியில், ஒரு உள்ளூர் தோட்டக்கலை நிறுவனம் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் கல்லறைகளை சுத்தம் செய்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது.

    அதன் ஊழியர்களின் வசதிக்காக, எந்த கல்லறை சுத்தம் செய்யப்பட்டது, எந்த கல்லறை இன்னும் சுத்தம் செய்யப்பட உள்ளது என்பதை அவர்கள் அறியும் வகையில் QR குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தது.

     

    இந்நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஆல்ஃபிரட் ஜான்கர் பேசுகையில், எங்கள் நிறுவனம் பெரிய அளவில் செயல்படுகிறது, அனைத்து வேலைகளும் முறையாக செய்யப்பட வேண்டும்.

    கல்லறைகளைப் பழுதுபார்ப்பதற்கு கற்களை அகற்றி, சுத்தம் செய்து, பின்னர் மீண்டும் நிறுவ வேண்டும். இதனால் செயல்முறை சிக்கலானதாகிறது. எனவே குழப்பம் ஏற்படாமல் இருக்க அடையாளத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டது என்று விளக்கினார்.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி.
    • இந்திய அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி.

    சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அணி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது. தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. தற்போது இந்திய அணியிடமும் தோல்வியை தழுவி இருக்கிறது.

    தொடரின் இரு போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், முற்றிலுமாக பறிபோக வில்லை. பாகிஸ்தான் அணி வங்காளதேசம் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று, நாக் அவுட் சுற்றில் மற்ர அணிகளின் முடிவுகள் அடிப்படையில், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

    அதன்படி நியூசிலாந்து அணி வங்காளதேசம் மற்று்ம இந்தியா அணிகளுடன் அடுத்து விளையாட உள்ள போட்டிகளில் தோல்வியை தழுவ வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு தனக்கு எஞ்சியுள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு செய்யும் போது மூன்று போட்டிகளின் முடிவில் அவர்களுக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.

    அப்போது, நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளும் இதேபோன்ற நிலையில் இருக்கும். இந்த சூழல் உருவாகும் பட்சத்தில் நெட் ரன்-ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகலாம்.

    நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு விராட் கோலி சதம் அடிக்க 42.3 ஓவர்களில் 244 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

    முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டன. பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியுமா என்பதை அடுத்தடுத்த போட்டிகளின் முடிவில் தான் தெரியவரும். 

    • மணமகள்களின் தந்தை உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வந்து சமரசம் செய்தபோதும் மணமகன்கள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கர்னாவால் கிராமத்தை சேர்ந்த அக்காள்-தங்கை இருவருக்கு ஒரே நாளில் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதன்படி மணமகள்களின் வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அங்கு விழா ஏற்பாடுகள் களைகட்டின. மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமண விழாவில் குவிந்தனர்.

    இந்த நிலையில் மணமகள்கான அக்காள்-தங்கை இருவரும் மணமகள் அலங்காரம் செய்து கொள்ள உறவினர்களுடன் காரில் அழகு நிலையம் சென்றனர். அவர்கள் அலங்காரத்தை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் உரசியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் காரில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மணமகள்கள் இருவரையும் காரில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அவர்களின் முகத்தில் சேற்றை வாரி இறைத்தனர். இதுப்பற்றி மணமகள்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் அவர்கள் பெரும் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை நையப்புடைத்தனர்.

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திருமணம் நடைபெறும் இடத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.

    மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களை சரமாரியாக தாக்கியதுடன், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி களேபரம் செய்தனர். இதில் மணமகள்களின் தந்தை உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த வன்முறை காரணமாக மணமகன்கள் இருவரும் திருமணத்தை நிறுத்தினர். போலீசார் வந்து சமரசம் செய்தபோதும் மணமகன்கள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.

    ஒரே நாளில் நடக்க இருந்த அக்காள்-தங்கையின் திருமணம் ஒரு சிறிய விபத்தால் நின்றுபோனது, அந்த கிராமத்தினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

    • இந்திய அரசாங்கத்துடன் இணைந்து $750 மில்லியன் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது
    • USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளது.

    இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாகக் கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் USAID அமைப்பிடம் பெற்ற நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில், அமெரிக்க நிறுவனமான USAID, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து 750 மில்லியன் டாலர் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி  வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டங்கள் எதுவும் தேர்தல்கள் அல்லது வாக்கு சதவீத அதிகரிப்புடன் தொடர்புடையவை அல்ல என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

     

    ரூ. 6,498 கோடி (750 மில்லியன் டாலர்) மதிப்பீட்டில் விவசாயம்-உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், குடிநீர்-சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை-சுகாதாரம், நிலையான காடுகள்-காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை(innovation) திட்டங்களுக்காக USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக குறிப்பிட்ட டிரம்ப் உடைய கூற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.  

    • அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

    கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நுரையீரலில் நிமோனியா பாதிப்பு காரணமாக சுவாச பிரச்சினையால் அவதியுற்று வரும் போப் பிரான்சிஸ்-க்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளதாக சமீபத்திய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் போதிலும், நேற்றிரவு முதல் அவருக்கு சுவாச பிரச்சினை மேலும் அதிகரிக்கவில்லை என்று வாடிகன் தெரிவித்து இருக்கிறது. போப் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்ட அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்.
    • அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் "அம்மா" என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளில்,

    நம் உயிர்நிகர் அன்பு தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.

    "எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதயதெய்வம் அம்மா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று கூறியுள்ளார்.


    • "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்"
    • தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசி தரூர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து சசி தரூர் பாராட்டி பேசினார். கேரளாவில் ஆளும் இடது முன்னணி ( எல்.டி.எப் ) அரசின் கொள்கைகளையும் சசி தரூர் பாராட்டி பேசினார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

     

    கேரள மாநில காங்கிரஸ் சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் கூறியது உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சசி தரூர் சந்தித்து பேசினார்.

    அரை மணி நேர சந்திப்பில் ராகுலிடம் தான் சில முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்கூறியதாக சசி தரூர் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்சனை பற்றி பேச மறுத்துவிட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்'' என்று மட்டும் கூறிவிட்டு நழுவினார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற சசி தரூர், நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். கட்சிக்காக பணியாற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கு வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

    கட்சி மாறுவது குறித்த வதந்திகள் உண்மை இல்லை. என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

     

    இதற்கிடையே சசி தரூரை வரவேற்கத் தயாராக இருப்பதாகக் கேரள மாநில சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது. சசி தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்றும் தாங்கள் அவரை வரவேற்போம் என்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். சசி தரூருக்காக கட்சி எப்போதும் ஒரு கதவைத் திறந்து வைக்கும் என்று சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறினார்.

    சமீபத்தில் சசி தரூரின் எக்ஸ் பதிவு ஒன்றும் வைரலானது. 18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரே எழுதிய ஒரு கவிதையிலிருந்து சில வரிகளை சசி தரூர் பகிர்ந்தார். "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்" என்று அந்த கவிதை கூறுகிறது. சசி தரூரும் அதையே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது. 

    • நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
    • நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    அதனைத்தொடர்ந்து மறுநாள் (மார்ச் 15-ந்தேதி) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் கூடுகிறது.

    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

    பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்ட நிலையில் அடித்தட்டு மக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து அதனையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்.
    • இரணிய தீவு அருகே தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்தது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், நேற்று 32 மீனவர்களை சிறைபிடித்த சம்பவத்தை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • 1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது.
    • கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது

    1971 ஆம் ஆண்டு பிரிந்த பிறகு பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் தொடங்கியது.

    இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் 50,000 டன் பாகிஸ்தான் அரிசியை வாங்க வங்கதேசம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதற்கட்டமாக 25,000 டன் அரிசியுடனான கப்பல் கடந்த சனிக்கிழமை கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது. 2 ஆம் கட்ட இறக்குமதி,  25,000 டன் அரிசியுடன் அடுத்த மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது. கடந்த ஆண்டு வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது.

    இது கலவரமாக மாறிய நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை உருவாக்க தங்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக வங்கதேசம் கூறுகிறது. 

     

    ×