என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிப்ரவரி 18ம் தேதி 4.6 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.
- ஆப்கானிஸ்தானில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி 4.6 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.
தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஆப்கானில்தானில் 4.6 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.
இந்நிலையில், இன்று மதியம் 2.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதன்மூலம், ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் அய்யர்-அக்சர் படேல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்த ஷ்ரேயாஸ் அய்யர் 79 ரன்னுக்கும், அக்சர் படேல் 42 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் நியூசிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
- ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
- எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை நாளை காலை 11.17 மணிக்கு படக்குழு வெளியிட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நானி தற்பொழுது ஹிட் 3 மற்றும் தி பாரடைஸ் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
- 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இந்த கூட்டத்தில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காது என தெரிவித்தது. இதற்கிடையே, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
தேமுதிகவை பொறுத்தவரையில் தாய் மொழியை காத்து அதேபோல் அனைத்து மொழியையும் காக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
பல்வேறு வகைகளில் வருங்காலம் சிறக்கும். எனவே அவர் அவர்களுக்கு பிடித்த மொழிகளை படிப்பதில் எந்த தவறும் இல்லை.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும் ஒரு வார காலத்திற்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது. அதனால் உறுதியாக தேமுதிக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்.
தமிழக முழுவதும் பல்வேறு விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதை வஸ்துகள் அதிகரிப்பு, வேலை இல்லாத நிலைமை, பாலியல் வன்கொடுமை என எல்லா பக்கமும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நிச்சயம் இது தடுக்கப்பட வேண்டும். 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 300-வது போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்
- கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சால் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
விராட் கோலியின் 300-வது போட்டியை காண அவரது மனைவி அனுஷ்கா சர்மா துபாய் வந்திருந்தார். இந்நிலையில், கோலியின் விக்கெட்டை பார்த்து அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.
இதனிடையே கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்சை விராட் கோலிக்கு ஜடேஜா செய்து காட்டினார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
- ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
- ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணம் செய்ய மறுத்த காதலனை தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் உடனடியாக திருமணம் செய்து கொள்ள ஜெயசூர்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ஜெயசூர்யாவுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி, ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என வாட்ஸ் அப்பில் காதலி அனுப்பிய மெசேஜை பார்த்து பதறிய ஜெயசூர்யாவின் பெற்றோர் இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் காதலி ரம்யா, அவரது பெற்றோர் தலைமறைவு ஆகியுள்ளனர்.
- மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள்.
தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாளை +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இன்று இரவு நன்றாக உறங்குங்கள். உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள்.
முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையவும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்கவும்.
ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால், ஆழமாக பெரு மூச்சு விட்டு, சில நொடிகள் அமைதி காத்தால் - தெளிவாகும் நமது மனம் விடைகளை கண்டுபிடிக்கும்.
அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்களுக்கான உங்களுடைய உணர்வுபூர்வ ஆதரவு முக்கியமானது.
தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜோதிகா `டப்பா கார்டல்’ என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார்.
- இத்தொடர் கடந்த 28 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு இந்தி திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக ஜோதிகா `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார். இவருடன் மலையாள நடிகை நிமிஷா சஜயன், ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டெ, அஞ்சலி ஆனந்த் மற்றூம் கஜராஜ் ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார்.
இக்கதை 5 இல்லத்து அரசிகள் டப்பா என்ற சாப்பாடு கொடுக்கும் டெலிவரி செர்விஸை செய்து வருகின்றனர். அதில் போதை பொருட்களை மறைத்து வைத்து டெலிவரி செய்கின்றனர். இதற்கு அடுத்து என்ன ஆனது? இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பற்றி இத்தொடரின் கதை அமைந்துள்ளது. இத்தொடர் கடந்த 28 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தொடரில் நடிகை ஜோதிகாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நிமிஷா சஜயன். அதில் அவர் கூறியதாவது " "ஜோ சேச்சி. நான் சந்தித்ததிலேயே மிகவும் அன்பு கொண்டவர், பணிவானவர். நீங்கள் எனக்காக செய்த எதையும் மறக்கவே மாட்டேன். நீங்கள்தான் BEST. உங்களுக்கென எனது இதயத்தில் எப்போதும் தனியிடமுண்டு.
MY WONDER WOMAN.." என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இஸ்லாமிய மக்களைத் தம் நெஞ்சில் வைத்து நேசிப்பவர் விஜய்
- CAA சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்பவர் விஜய்
இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் என காரணம் காட்டி விஜய் பாதுகாப்பு பெற்றதாக வன்னி அரசு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வன்னி அரசு பேச்சுக்கு த.வெ.க. கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி எங்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக எள்ளளவும் அறமற்ற அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் சகோதரர் திரு.வன்னியரசு அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் கழகத்தின் மாநிலக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த என்னை நியமனம் செய்தவர் எங்கள் தலைவர்!
கழகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இஸ்லாமிய உறவுகளுக்கு முன்னுரிமை அளித்தவர் எங்கள் தலைவர்!
கல்வி விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவர்கள் பலருக்குப் பரிசளித்துப் பாராட்டியவர் எங்கள் தலைவர்!
CAA சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்பவர் எங்கள் தலைவர்!
எங்கள் தலைவர் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் நீங்கள் பேசியுள்ள அப்பட்டமான பொய்யின் வாயிலாக ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் ஏதோ தமிழகத்தில் உள்ள தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்பவர்கள் போலச் சித்திரித்து அவமரியாதை செய்துள்ளீர்கள். இதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க.வின் ஊதுகுழலாக இத்தகைய பொய்யினைச் சர்வ சாதாரணமாகப் பேசும் நீங்கள், நாங்கள் பெருமதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தங்கள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும் அவப்பெயரைத் தேடிக் கொடுத்துள்ளீர்கள் என்பதை மறவாதீர்.
இஸ்லாமிய மக்களைத் தம் நெஞ்சில் வைத்து நேசிப்பவர் எங்கள் தலைவர்!
இஸ்லாமிய மக்களும் எங்கள் தலைவரைத் தங்கள் மனத்தில் வைத்து மதிப்பவர்கள்! உங்களை ஏவிவிடுவோரின் பொய், புரட்டுகளால் ஒருபோதும் இதனை மாற்றவோ மறைக்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் இது போன்று அநாகரிகமான முறையில் இஸ்லாமிய மக்களை அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்து, நாகரிக அரசியல் பாதையில் பயணிக்க முயற்சி செய்யுங்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
- வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?
மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மேட்டூர் அனல் மின்நிலையத்தின் முறையே 210*4 மெகாவாட், 600 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 1500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மூன்றாம் நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
போராடும் தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்கள் அனைவரும் மேட்டூர் அனல் மின்நிலையத்தில், பல்வேறு நிறுவனங்களின் மூலமாக 10 முதல் 13 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தவிர அவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான எந்த உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக பணி நிலைப்புக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பணி நிலைப்பு என்பது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை. அதை தமிழக அரசும், மின்வாரிய நிர்வாகமும் மறுப்பது பெரும் சமூக அநீதி ஆகும்.
பத்தாண்டுகள் பணி செய்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கின்றன.
அதுமட்டுமின்றி, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பத்தாண்டுகளுக்கும் மேல் உழைத்த தொழிலாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை.
தனியார் நிறுவனங்கள் அத்தகைய கடமையை நிறைவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசே, இத்தகைய உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது சிறிதும் நியாயமற்றது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 153-ஆம் வாக்குறுதியாக, "அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததன் மூலம் உழைக்கும் தொழிலாளர்களுக்கு திமுக அரசு பெருந்துரோகம் செய்துவிட்டது.
மேட்டூர் அனல்மின்நிலையத்தில் இவர்களுக்கு முன் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1998-ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கி போராடியது. போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், பா.ம.க. மற்றும் தொழிலாளர்கள் அமைப்புடன் பேச்சு நடத்திய கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தது.
அன்று தந்தை கலைஞர் காட்டிய மனிதநேயத்தையும், தொழிலாளர்கள் மீதான அக்கறையையும் இன்று தனயன் மு.க.ஸ்டாலின் காட்ட மறுப்பது ஏன்? என்பது தான் பா.ம.க. எழுப்ப விரும்பும் வினா.
திமுக தொழிலாளர்களின் உழைப்பில் வளர்ந்த கட்சி. அப்படிப்பட்ட கட்சி தொழிலாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு துணைபோவது எந்த வகையில் நியாயம்? குறைந்தது பத்தாண்டுகள் பணி செய்தால் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் கால் நூற்றாண்டுகளுக்கு முன் அவர்களுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றதைப் போலவே இப்போதும் மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக களமிறங்கி போராடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் திரிபாதியை வாங்கியது.
- இதற்கு முன்பு ராகுல் திரிபாதி ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சிஎஸ்கே அணி வீரர்களுடன் ராகுல் திரிபாதி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் திரிபாதியை வாங்கியது. இதற்கு முன்பு அவர் ஐதராபாத் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
- லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இன்னும் வரும் நாட்களில் 150 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தான் கதாநாயகனாக நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்பெற்றதால் பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து வரும் நாயகர்களில் முக்கிய பங்கை நிலைநாட்டியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






