என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
- குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12-ந்தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
- இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை சுமார் 30 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பான அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் அறிவித்துள்ளது. மேலும், ரஷியாவுடன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு சமீபத்தில் நிறுத்தப்பட்ட ராணுவ உதவிகளை மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து, ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பு அதிகாரிகள், வான் வழி மற்றும் கடல் வழி தாக்குதல்களில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர். மறுப்பக்கம் அமெரிக்கா சார்பில் ஒரு மாத காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.
"போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனிடம் இன்று வலியுறுத்தினோம், அவர்கள் தரப்பில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். தற்போது பந்து அவர்களிடம் தான் உள்ளது."
"அவர்கள் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில், துரதிர்ஷ்டவசமாக இங்கு அமைதி திரும்ப என்ன தடையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாங்கள் முயற்சிப்போம்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகள் உடனடியாக மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சந்தித்தனர். அப்போது, ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இதன் பிறகு தான், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்தார். அப்போது "அடுத்த சில நாட்களில் நடக்கும் என்று நம்புகிறேன், நான் அதை பார்க்க விரும்புகிறேன். நாளை ரஷியாவுடன் எங்களுக்கு ஒரு பெரிய பேச்சுவார்த்தை இருக்கிறது. சுமூகமான உரையாடலாக அது இருக்கும் என்று நம்புகிறேன்," என தெரிவித்தார்.
- காரில் இருந்த சீமான், அண்ணாமலையை கண்டதும் நலமா இருக்கீங்களா என்று கேட்டார்.
- விட்டுடாதீங்க அண்ணா.. Bye அண்ணா" என்று கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்தார்.
காரில் இருந்த சீமான், அண்ணாமலையை கண்டதும் நலமா இருக்கீங்களா என்று கேட்டார்.

பதிலுக்கு சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை, "Fight பண்ணிட்டே இருங்கண்ணா.. Strong-ஆ இருங்க.. விட்டுடாதீங்க அண்ணா.. Bye அண்ணா" என்று கூறினார்.
அவருக்கு பதிலாக thumbs up-ஐ சீமான் காட்டினார்.
- 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 11.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12.57 மணிக்கு நிறைவடைகிறது. நாளை இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரியது.
- 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் மீட்டர் அமைப்பதற்கான 2-வது டெண்டரை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.
- இன்று மாசி மகம். சுபமுகூர்த்த தினம்.
- ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-28 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி காலை 10.50 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: மகம் மறுநாள் விடியற்காலை 5.09மணி வரை பிறகு பூரம்.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று மாசி மகம். சுபமுகூர்த்த தினம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். மதுரை ஸ்ரீ கூடலழகர் உபய நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம். திருச்செந்தூர், பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் கோவில்களில் ரதோற்சவம். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் இந்திர விமானத்தில் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன. பத்ராசலம் ஸ்ரீ ராமபி ரான் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவ திருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளி யங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவி லில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். திருப்பெருந் துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்க ளில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-நன்மை
கடகம்-சலனம்
சிம்மம்-சுகம்
கன்னி-பாசம்
துலாம்- பண்பு
விருச்சிகம்-அமைதி
தனுசு- உயர்வு
மகரம்-களிப்பு
கும்பம்-உதவி
மீனம்-பண்பு
- ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.
- யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான அனுபாமா என்ற பெண் யானை உள்ளது. இந்த யானையை நேற்று காலையில் பாகன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் யானையின் உரிமையாளர் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் யானைக்கு தென்னை ஓலை மற்றும் அதற்கு தேவையான உணவுகளை கொடுத்து விட்டு மாலையில் பாகன் யானையை திரும்ப திற்பரப்புக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பாகன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் திடீரென அண்டுகோடு பகுதியில் வைத்து மதுபோதையில் இருந்த பாகன் யானை மீது படுத்து தூங்கினார். அப்போது பாகனுடைய கையில் இருந்த அங்குசம் கீழே விழுந்தது. அந்த அங்குசத்தை யானை எடுத்து பாகனிடம் கொடுத்தது. பாகன் வாங்காததால் அங்குசம் மீண்டும் கீழே விழுந்தது. இதனால் ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அப்பகுதியினர் அருமனை போலீசுக்கும், களியல் வனச்சரகத்துக்கும் தகவல் தொிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், வனச்சரக அலுவலர் அப்துல் காதர் முகைதீனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் யானையின் உரிமையாளருக்கு தகவல் தொிவித்து அவரும் வரவழைக்கப்பட்டார்.
இதையடுத்து யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து மது போதையில் இருந்து தெளிந்த பாகனை கீழே இறக்கினார்கள். இதையடுத்து வனத்துறையினரும், யானை உரிமையாளரும் யானையை வாகனத்தில் ஏற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பாகனை விட்டுவிட்டு யானை வாகனத்தில் ஏற மறுத்து பிடிவாதம் பிடித்தது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து யானையை அண்டுகோடு பகுதியில் இருந்து அருமனை வழியாக திற்பரப்புக்கு நடத்தி கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் யானையும் பாகனும் முன்னே நடந்து செல்ல வனத்துறையினரும், உரிமையாளரும் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக யானையை திற்பரப்புக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் யானை உரிமையாளர் மற்றும் பாகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
- சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் வழிமறித்தனர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளில் 16 பேரை இதுவரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முன்னதாக, பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறும் போது, "பாதுகாப்புப் படையினர் 104 பயணிகளை (58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள்) - ஒரு பெட்டியிலிருந்து மீட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
ரெயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் தீவிர துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரிண்ட் கூறியுள்ளார்.
- அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
- சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் நேற்று அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.
அதிலும் குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவானது. இதுதவிர சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும், பல இடங்களில் 100 டிகிரியை நெருங்கியும் வெப்பம் பதிவானது. நேற்று பெய்த மழையால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது. காலையில் சூரியன் தென்பட்டாலும், சற்று நேரத்தில் மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கியது. ஓரிரு இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாலங்காட்டில் 2.4, சோழவரத்தில் 1.4, பூண்டியில் 1.5 செ,மீ. மழை பதிவாகி உள்ளது.
- விஜய்க்கு ‘ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
- நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வருகிற 14-ந்தேதி சென்னை வருகின்றனர்.
அவர்கள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.
- மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் ஏற்கமாட்டோம் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
- மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கடிதத்தில் கூறவே இல்லை.
சென்னை:
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, இன்று மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் குழு பரிந்துரை அடிப்படையில் மட்டுமே PM SHRI பள்ளிகளை ஏற்போம் என கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் ஏற்கமாட்டோம் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கடிதத்தில் கூறவே இல்லை.
தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் - அதிகமாகவோ, குறைவாகவோ எதுவும் இல்லை. உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.






