என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
    • சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது.

    கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் நேற்று அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.

    அதிலும் குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவானது. இதுதவிர சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது.

    கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும், பல இடங்களில் 100 டிகிரியை நெருங்கியும் வெப்பம் பதிவானது. நேற்று பெய்த மழையால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.

    சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது. காலையில் சூரியன் தென்பட்டாலும், சற்று நேரத்தில் மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கியது. ஓரிரு இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாலங்காட்டில் 2.4, சோழவரத்தில் 1.4, பூண்டியில் 1.5 செ,மீ. மழை பதிவாகி உள்ளது.

    • விஜய்க்கு ‘ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
    • நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வருகிற 14-ந்தேதி சென்னை வருகின்றனர்.

    அவர்கள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.

    • மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் ஏற்கமாட்டோம் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
    • மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கடிதத்தில் கூறவே இல்லை.

    சென்னை:

    தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, இன்று மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் குழு பரிந்துரை அடிப்படையில் மட்டுமே PM SHRI பள்ளிகளை ஏற்போம் என கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் ஏற்கமாட்டோம் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

    மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கடிதத்தில் கூறவே இல்லை.

    தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் - அதிகமாகவோ, குறைவாகவோ எதுவும் இல்லை. உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார். 



    • ஹோலி பண்டிகை சத்ய யுகத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது.
    • வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.

    அலிகார்:

    வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.

    அதனால், பிரச்சனைகள் எழக்கூடாது என்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதிகள் தொழுகை நேரத்தை 1 மணி நேரம் தாமதமாக, அதாவது பகல் 2 மணிக்கு நடத்துமாறு லக்னோவில் உள்ள ஈத்கா மசூதியின் இமாம் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைதூரத்துக்கு செல்லாமல், அருகில் உள்ள மசூதியிலேயே தொழுகை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.

    சம்பல் நகரில், இந்துக்கள் பகல் 2.30 மணிவரை ஹோலி கொண்டாடுவது என்றும், அதன்பிறகு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அலிகார் தலைமை முப்தி காலித் ஹமீத், ஹோலி பண்டிகை அமைதியாக நடக்க முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வண்ணப்பொடிகள் தூவும் பகுதி வழியாக செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே, ஹோலி பண்டிகை தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் தெரிவித்த யோசனை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரபிரதேச தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக உயர் அதிகார ஆலோசனை குழு தலைவர் ரகுராஜ் சிங். இவர், இணை மந்திரிக்கு சமமான அந்தஸ்தில் இருப்பவர்.

    ரகுராஜ் சிங் கூறியதாவது:-

    ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் தொழுகை காரணமாக, மாநில அரசு உஷார் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் சிலர் ஆட்சேபனை எழுப்பி வருகிறார்கள்.

    ஹோலி பண்டிகை சத்ய யுகத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது. சனாதன தர்ம நம்பிக்கை சார்ந்த விஷயம். வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.

    அன்றைய தினம், மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூடுவதுபோல், முஸ்லிம் பெண்கள் 'ஹிஜாப்' அணிவதுபோல், முஸ்லிம் ஆண்கள் தார்ப்பாயால் செய்யப்பட்ட 'ஹிஜாப்' அணியலாம்.

    அப்படி அணிந்துகொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லலாம். அவர்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாது. எளிதாக தொழுகை நடத்தலாம். இந்துக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரகுராஜ் சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டுக்குள் இருங்கள்

    இதுபோல், சமீபத்தில் சம்பல் பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார்.

    ''வண்ணப்பொடிகளை பிடிக்காதவர்கள், வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். ஹோலி பண்டிகை, ஆண்டுக்கு ஒருதடவை தான் வருகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை தொழுகை, ஆண்டுக்கு 52 தடவை வருகிறது'' என்று அவர் கூறினார்.

    அவரது கருத்துக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்தார்.

    • தி.மு.க. மாணவரணி செயலாளரான எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • தி.மு.க. மாணவரணி இணை செயலாளரான எஸ்.மோகன் வர்த்தக அணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

    * தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தி.மு.க. மாணவரணி செயலாளரான எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தி.மு.க. மாணவரணி இணை செயலாளர் பூவை சி.ஜெரால்டு சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தி.மு.க. மாணவரணி இணை செயலாளரான எஸ்.மோகன் வர்த்தக அணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஊடகங்களில் தி.மு.க. சார்பில் பேசுவதற்காக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எம்.பி.க்கள் செல்வகணபதி, கே.என். அருண்நேரு, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் தி.மு.க. சார்பில் விவாதங்களில் பங்கேற்பர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய வருகை அவரின் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக இருக்கும்.
    • ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார்.

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை அதிபருடன் அவரது மனைவி உஷா வான்ஸூம் இந்தியா வரவுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் ஊடக நிறுவனமான பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில், அமெரிக்காவின் துணை அதிபராக அவர் மேற்கொள்ள இருக்கும் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக அவரது இந்திய வருகை இருக்கும்.

    முதல் சர்வதேச பயணத்தின் போது துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். உரையின் போது சட்டவிரோத குடியேற்றம், மத சுதந்திரம் மற்றும் தேர்தல் விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார். இவரது உரை உலகளவில் எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை குறித்து அவர் பேசிய கருத்துக்கள் அமெரிக்க அரசுடன் நட்புறவு கொண்ட நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த உஷா வான்ஸ், தான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு முதல் முறையாக அமெரிக்காவின் 'Second Lady'-ஆக வருகை தரவுள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • ஆறு மணி நேரம் வரை ரெயில் சேவை ரத்து.

    சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணி, 9.00 மணி, 9.30 மணி, 10.30 மணி மற்றும் 11.35 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் காலை 9.55 மணி, 11.25 மணி, மதியம் 12.00 மணி, 1.00 மணி, 2.30 மணி மற்றும் மாலை 3.15 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.35 மணி, 10.15 மணி, மதியம் 12.10 மணி,1.05 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதே தேதியில் காலை 11.45 மணி, மதியம் 1.15 மணி, 3.10 மணி மற்றும் இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணி, மதியம் 12.40 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சூலூர்பேட்டையில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதே தேதியில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

    • ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
    • புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து அதன் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். புதிய கவர்னர் கையெழுத்திட்ட ரூ.50 நோட்டு அறிமுகம் செய்ததுடன், ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும்.
    • ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

    சென்னை:

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்றுவழியில் பால் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு விசாரணையின்போது இந்த தகவலை ஆவின் நிறுவனம் பதிவு செய்து இருக்கிறது.

    இந்த நிலையில் மாற்றுவழி என்பது கண்ணாடி பாட்டில் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுமா? அல்லது வேறு ஏதாவது முறையில் வழங்கப்படுமா? என்பதை ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

    ஆனால் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் இவை இரண்டையும் மாற்றுவழியாக கொண்டாலும் கூட அது சாத்தியப்படாது என்பதுதான் பால் முகவர்கள், வியாபாரிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.

    அப்படி இதை ஒரு மாற்றுவழியாக எடுத்துக்கொண்டாலும் கூட, நுகர்வோரின் பட்ஜெட்டில் இது பாதிப்பை ஏற்படுத்தும். முகவர்கள், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றை சரியாக பராமரித்து மீண்டும் பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு வருவது என்பது சிரமத்தை கொடுக்கும்.

     

    அதேநேரம், ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும் என்றால், பாட்டிலில் கொண்டுவந்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த எண்ணிக்கையில்தான் பால் வாங்கி வைப்பார்கள். இதனால் விற்பனையும் குறையும். தட்டுப்பாடும் ஏற்படும். அதேபோல், பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை மீண்டும் சுத்தமாக பயன்பாட்டுக்கு கொண்டுவருமா? என்பதும் கேள்விக்குறிதான்.

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை என்றாலும், இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பதால் மாற்றுவழி வெற்றி பெறுமா? என்பது 100 சதவீதம் சந்தேகம்தான் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்தார்.

    ஏற்கனவே ஆவின் நிறுவனம் தரப்பில் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் 1½ லிட்டர் டப்பாவில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.120. இதுவே பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் இதே பாலின் விலை ரூ.90. டப்பாவில் அடைத்து விற்கப்படும் சமன்படுத்தப்பட்ட 1½ லிட்டர் பாலின் விலை ரூ.110. இதுவே பாக்கெட்டுகளில் ரூ.68-க்கு கிடைக்கிறது. நுகர்வோருக்கு பால் விலை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டும் ஒரு உதாரணமாக இது சொல்லப்படுகிறது.

    மொத்தத்தில் ஆவின் நிறுவனம் இன்னும் 2 வாரத்தில் நிரந்தர தீர்வை அறிவித்து, அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் மக்களின் அன்றாட பட்ஜெட்டில் கூடுதல் செலவையே கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. மாற்றுவழி நடைமுறைக்கு வந்தால் தற்போதைய அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலையில் இருந்து குறைந்தது ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என்றே பால் முகவர்கள், வியாபாரிகள் கூறுகின்றனர்.

    • அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
    • போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி அமன் சாவ். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு அண்டை மாநிலமான சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    அமன் சாவ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தொடர்ந்த வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக அவரை ராய்ப்பூரில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி ஜார்கண்ட் போலீசார் ராய்ப்பூர் சென்று, அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    ராஞ்சியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள பலாமு மாவட்டத்தின் செயின்பூர் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அமன் சாவின் கூட்டாளிகள் அவரை தப்ப வைப்பதற்காக போலீஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

    அமன் சாவின் கூட்டாளிகள் வீசிய குண்டு போலீஸ் வாகனத்தின் முன்பு விழுந்து வெடித்தது. இதனால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.

    அதை தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை பயன்படுத்தி அமன் சாவ், போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமன் சாவ் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதை தொடர்ந்து அமன் சாவின் கூட்டாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    காயம் அடைந்த போலீஸ்காரர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    • ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
    • குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரே நேரத்தில் 2 புதிய ஏவுதளங்களை உருவாக்கி திறன்களை விரிவுபடுத்த உள்ளது. குறிப்பாக, ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.

    தற்போது 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்ட 3-வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த 2 ஏவுதளங்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

    • மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது.
    • லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தலைமறைவாகிவிட்டார்.

    மும்பை:

    பால்கரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் துணை கமிஷனராக பணிபுரிந்து வருபவர் தாத்யாசேப் தேரே. இவர் நபர் ஒருவரிடம் வணிக வரியை குறைத்து கணக்குகாட்ட தனக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஜி.எஸ்.டி. அதிகாரியை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார்தாரரிடம் பணம் கொடுக்க ஒப்புக்கொள்வதாக கூறும்படி கூறியுள்ளனர். அதன்படி புகார்தாரரும் ஜி.எஸ்.டி. அதிகாரி தாத்யாசாகேப் தேரேவை தொடர்புகொண்டு பணத்தை கொடுப்பதாக தெரிவித்தார்.

    இதன்பேரில் மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி புகார்தாரர் பணத்துடன் ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு ஜி.எஸ்.டி. அதிகாரிக்கு பதிலாக அவரது உதவியாளரும், தனியார் வரி ஆலோசகருமான ஏக்நாத் பெட்னேகர் வந்து அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டார். இதை அங்கிருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏக்நாத் பெட்னேகரை சுற்றிவளைத்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது குறித்து அறிந்ததும் லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தாத்யாசாகேப் தேரே தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    ×