என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியது.
    • ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

    நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 17 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.

    சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

     

    மேலும் காயமடைந்த 11 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 18 சக்கர டிரக் வாகன ஓட்டுநர் சாலமன் அரயா என்ற 37 வயது நபரை ஆஸ்டின் போலீசார் கைது செய்தனர்.

    போதையில் அவர் வாகனம் ஒட்டியதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
    • குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கடந்த மார்ச் 14 தொடங்கி மார்ச் 16 வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு நேற்றும் ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வந்திருந்தனர்.

    இந்நிலையில் கையில் இரும்பு கம்பியுடன் நுழைந்த நபர் ஒருவர் கோவிலில் குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.

    கையில் ஒரு இரும்புக் கம்பியுடன் வந்த அவரை பார்த்த கோவில் ஊழியர் ஜஸ்பீர் சிங் தடுக்க முயன்றார். ஆனால் அந்த நபர் ஊழியரை கம்பியால் தாக்கினார். பின் பக்தர்களும் மற்ற ஊழியர்களும் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் அவர் தாக்கினார்.

     

    பிற பக்தர்களும் ஊழியர்களும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பக்தர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அபவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் காயமடைந்தவர்களில், ஒரு பக்தர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொற்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் அதிக சோதனைக்கு பின் பக்தர்களை உள்ளே அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் அரியானாவின் யமுனா நகரில் வசிக்கும் சுல்பான் என்பது தெரியவந்துள்ளது.

    • நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) என்று அடையாளம் காணப்பட்டனர்.

    நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    • உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
    • இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    போர் தொடங்கியதில் இருந்து இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே, உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்த திட்டம் குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:

    போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஏனென்றால் இது விரோதங்களையும், மனித உயிரிழப்பையும் நிறுத்துவதற்கான ஓர் உன்னதமான பணியாகும்.

    போர் நிறுத்தம் தொடர்பான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம். இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என தெரிவித்தார்.

    • ஐ.பி.எல். தொடரில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
    • இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

    இஸ்லாமாபாத்:

    இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்ற பிறகே வெளிநாட்டு லீக் தொடரில் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

    எனவே எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.பி.எல். போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

    நீங்கள் (இந்தியா) உங்களது வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு விடுவிக்காவிட்டால் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏன் அதே மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.
    • வட கொரிய அதிபருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன் என தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், வடகொரிய அதிபர் குறித்து அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை பல முறை சந்தித்து உச்சி மாநாடு நடத்தியுள்ளேன்.

    வட கொரியா அணு சக்தியை கொண்ட நாடு தான். அவருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன்.

    வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.

    இருப்பினும் வடகொரியாவின் அணு ஆயுத எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
    • திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.

    நெல்லை:

    தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • விம்பிள்டனில் 7 முறை, அமெரிக்க ஓபனில் 4 முறை, பிரெஞ்சு ஓபனில் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றார்.

    பெல்கிரேட்:

    செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2003-ம் ஆண்டு 15 வயதில் தொழில்முறை வீரராக மாறியதிலிருந்து டென்னிசில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறையும், விம்பிள்டன் தொடரில் 7 முறையும், அமெரிக்க ஓபனில் 4 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    ஜோகோவிச் கடந்த ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அதன்பின் கடந்த ஆண்டு முதல் தான் பங்கேற்ற போட்டிகளில் தொடர் தோல்விகளால் தடுமாறு வருகிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மாண்டோ-கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் அரையிறுதியில் தோல்வி

    இத்தாலி ஓபன் தொடரின் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    ஜெனீவா ஓபன் தொடரின் அரையிறுதியில் தோல்வி

    பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் காயம் காரணமாக பாதியில் விலகல்

    விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி

    அமெரிக்க ஓபனில் 3வது சுற்றில் போராடி தோல்வி

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் தோல்வி

    பிரிஸ்பேன் ஓபன் தொடரின் காலிறுதியில் தோல்வி

    ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் காயம் காரணமாக பாதியில் இருந்து விலகல்.

    கத்தார் ஓபனில் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    சமீபத்தில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இப்படி, கடந்த ஆண்டில் நடைபெற்ற முன்னணி தொடர்களில் தோல்வியைச் சந்தித்து வரும் ஜோகோவிச் விரைவில் பார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • வரும் 2028ல் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5.7 டிரில்லியன் டாலராக உயரும்.
    • அதன்மூலம் உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும்.

    புதுடெல்லி:

    உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனம் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கடந்த 2023-ம் ஆண்டில் 3.5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதார மதிப்புடன் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியது.

    வரும் 2026-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 4.7 டிரில்லியன் டாலர்களாக உயரும். அப்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.

    வரும் 2028ம் ஆண்டிற்குள் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி 5.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடன் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.

    கடந்த 1990-ம் ஆண்டில் உலகின் 12-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, 2000-ம் ஆண்டில் 13-வது இடத்துக்கு பின்தங்கியது. 2020-ல் 9-வது இடத்துக்கும், 2023ல் 5-வது இடத்துக்கும் முன்னேறியது.

    உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கும்.

    வலுவான மக்கள்தொகை வளர்ச்சி, துல்லியமான ஜனநாயகம், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உயரும்.

    உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், 2025-ம் ஆண்டில் இந்திய பங்குகள் விலைகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ராய்ப்பூர்:

    சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் ராய்பூரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கைபந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ராம்தின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரையன் லாரா 41 ரன்னும், சாட்விக் வால்டன் 31 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டினோ பெஸ்ட் 4 விக்கெட்டும், டுவெயின் ஸ்மித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதி ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • இந்தியாவிற்கு 2 மொழி மட்டுமின்றி, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை.
    • சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

    ஐதராபாத்:

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பேசியதாவது:

    இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். தமிழ்நாட்டிலும் எங்களுக்கு அரசியல் ஆதரவாளர்கள் உள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் எங்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.

    தமிழ் மக்கள் எனது தெலுங்கு உரைகளைக் கேட்கிறார்கள் என்பதை அறிந்தேன். தமிழ் மக்கள் காட்டிய அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்-இது என்ன வகையான தர்க்கம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாண் இந்தி, தமிழ் மராத்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்.

    • கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரியில் ராஜினாமா செய்தார்.
    • கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    ஒட்டாவா:

    கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்க உள்ளார்.

    மார்க் கார்னி 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

    தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகளாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (11,134 வாக்குகள்), கரினா கோல்ட் (4,785 வாக்குகள்), பிராங்க் பேலிஸ் (4,038 வாக்குகள்) பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×