என் மலர்
தலைப்புச்செய்திகள்
- விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்தது T
- கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரும் அடங்குவார்.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கடந்த ஆகஸ்ட் 20 காலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றம்சாட்டப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டி ராஜேஷ்பாய் சகாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்ததாகவும், டெல்லியில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கோபமடைந்து இந்த தாக்குதலை செய்ததாவும் தெரியவந்தது.
ராஜேஷ் டெல்லிக்கு வந்தபோது, அவரது நகரத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் தொடர்பில் இருந்தார். டெல்லி காவல்துறை குழு ராஜ்கோட்டில் ஐந்து பேரை விசாரித்தது. இதில் கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரும் அடங்குவார். அந்த ஓட்டுனரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் காவலில் எடுத்து.
இந்நிலையில் ராஜேஷ் ரேகா குப்தாவை கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
சம்பத்தன்று ராஜேஷ் முதல்வரின் வீட்டிற்கு கத்தியை கொண்டு வந்துள்ளார். ஆனால் போலீஸ் பாதுகாப்பைக் கண்டதும், அவர் கத்தியை சிவில் லைன்ஸ் பகுதியில் வீசினார். அது தற்போது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
- MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
- விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் MiG-21 விமானத்தை ஓட்டினார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் விடைபெற உள்ளன.
விமானப்படையில் தற்போது இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் உள்ளன. செப்டம்பர் 26 ஆம் தேதி சண்டிகரில் நடைபெறும் விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்.
நேற்று ராஜாஸ்தானின் பிகானரில் உள்ள நல் விமானப்படை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பிரியாவிடை விழாவில் விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் MiG-21 விமானத்தை ஓட்டினார்.
சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

MiG-21
1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.
இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.
62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும்.
- "கனமழை பெய்து வரும் சூழலில் தவீ ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்"
- தூதரக ரீதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் சூழலில் சிந்து நதியின் கிளையான தவீ ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்தியா எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களின்படி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இது குறித்துத் தெரிவித்தது.
வழக்கமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) கீழ் இரு நாடுகளின் ஆணையர்களிடையே இதுபோன்ற தகவல் பரிமாற்றம் நடைபெறும்.
இருப்பினும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அப்போதிருந்து, ஒப்பந்தத்தின் கீழ் எந்தத் தகவல் பரிமாற்றமும் இல்லை. இந்தச் சூழலில் தூதரகம் மூலம் எச்சரிக்கைகள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.
- தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
- வெளியேற முடியாமல் பலர் ஆலையின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் சர்ஜிக்கல் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பால் உற்பத்தி ஆலையில் நேற்று மாலை அம்மோனியா வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலையில் வாயு கசிந்ததை அடுத்து, அங்கிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் வெளியேற முடியாமல் பலர் ஆலையின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க ஆலையின் சுவரை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கிருந்து சுமார் 30 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த சிலருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது, ஆலையின் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மேலும் கசிவு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
- அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு குறித்து 2016ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்த சமயத்தில் ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிடுமாறு மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 2017இல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து சான்றிதழை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, மோடியின் சான்றிதழை டெல்லி பல்கலைக்ழகம் வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
- விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
- சம்பவத்தின் போது டிராக்டர்-டிராலியில் 61 பக்தர்கள் இருந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் டிராக்டர் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் இன்று காலை பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
லாரி, பின்புறத்தில் மோதியதால் டிராக்டர் டிராலி கவிழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது டிராக்டர்-டிராலியில் 61 பக்தர்கள் இருந்தனர். அவர்கள் ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தனர். விபத்தில் காயமடைந்த 43 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 43 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
- ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
- இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே 6 பாகிஸ்தானிய டிரோன்கள் நடமாட்டத்தை அடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி, கனுயன் மற்றும் பால்ஜரோய் பகுதிகளில் இந்த டிரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த டிரோன்கள், கட்டுப்பாட்டுக் கோடு அருகே சிறிது நேரம் காற்றில் வட்டமிட்டு பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் எச்சரிக்கப்பட்ட இந்திய ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) எல்லையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து இதேபோன்ற டிரோன் ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன.
எல்லையில் இந்திய ராணுவ தளங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பெற பாகிஸ்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
- பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
- ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.
ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-
பாஜக-வை சேர்ந்தவர்கள் ஆணவக் கொலைகள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறோம். மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் எனக்கே பலரைத் தெரியும். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.
நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. நம்பி வருபவர்களை நாங்கள் வர வேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
- தண்டகாரண்யம் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
- தண்டகாரண்யம் திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது.
2019-ம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் பயங்கரவாதத்தையும், காவல் அதிகாரிகள் மற்றும் காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், தண்டகாரண்யம் பாடத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் வழக்கு.
- தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி 1988ல் சென்னை இ.சி.ஆர் பகுதியில் வாங்கிய சொத்துக்கு, போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக அவரின் கணவர் போனி கபூர் குற்றம்சாட்டியுள்ளார்.
மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் உரிமை கோருவதாக போனி கபூர் தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், போலி வாரிசுச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
- ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கில் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் கடந்த 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இசைஞானி இளையராஜாவின் அதிரடியான இசையில், விஜயகாந்துடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
தற்போது, பலரும் இப்படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கில் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
அப்போது, இப்படத்தில் இடப்பெறும் "ஆட்டமா தேரோட்டமா" பாடலுக்கு, மன்சூர் அலிகான் மற்றும் பேரரசு நடனமாடி வைப் ஆனார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், 'கேப்டன் பிரபாகரன்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், பேரரசு உள்ளிட்ட பிரபலங்கள் கேக் வெட்டி விஜயகாந்த் பிறந்தநாளைக் கொண்டாடினர்.






