என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பூமியை சமநிலைப்படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானது என்பது அறிஞர்களின் கருத்து.
    • மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான்.

    மரங்களின் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் மரங்களின் மாநாடு. நாட்டுக்காக நிற்பவர்களால்தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போர் மாநாட்டை நடத்த முடியாது.

    தண்ணீரை தொடர்ந்து காற்றையும்கூட இவர்கள் விற்பார்கள். டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலைவரும். காற்று மாசுபட்டு போனதா, இல்லை நாம் காற்றை மாசுபடுத்தி சென்றோமா என யோசித்து செயல்பட வேண்டும். வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணியை மரங்கள் செய்யும்.

    பூமியை சமநிலைப்படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானது என்பது அறிஞர்களின் கருத்து. ஒரு மரத்தை நட்டாலே ஆண்களும் தாயாக முடியும். மரம் நம் அன்னை, நம் தாய்.

    மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான். புவி வெப்பமாவதுதான் இதற்கு காரணம். பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு கட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியையே நம்மால் கடந்த காலத்தில் தாங்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால், பூமி பேரழிவை சந்திக்கும்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    • 79 வயதாகும் டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.
    • தலைமை பதவிக்கான பயிற்சிக்கு தயாராகியுள்ளதாக துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் ஜே.டி. வான்ஸ், தன்னுடைய தற்போதைய பணி, அமெரிக்காவில் பயங்கரமான சோகம் நடைபெற்றால், தன்னை தலைமை பதவியை ஏற்பதற்கு தயார்படுத்தியுள்ளது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஜே.டி. வான்சின் இந்த கருத்து டிரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்நிலையில், இணையத்தில் "Trump Died" மற்றும் "Donald Trump death" போன்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன. மேலும் டிரம்ப் இறந்துவிட்டார் என்று எண்ணற்ற மீம்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    79 வயதாகும் டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதாக அவ்வப்போது யூகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இத்தகைய மீம்கள் ட்ரெண்டாகியுள்ளன.

    அதே சமயம் டிரம்ப் இறந்துவிட்டார் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
    • சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பங்கேற்றார்.

    இந்த பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், "வாக்காளர் உரிமை பேரணியில்சேர நான் இங்கு வந்துள்ளேன். யாத்திரையை ஆதரித்ததற்காக பீகார் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப் போகிறது" என்று தெரிவித்தார்.

    • நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.
    • கார்/வேனுக்கு ஒருமுறை சென்று ரிட்டன் வருவதற்கு 155 ரூபாய்க்கு பதில் 160 ரூபாய் வசூலிக்கப்படும்.

    சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மிகவும் பிசியாக இயங்கும் சுங்கச்சாவடிகளில் ஒன்று. நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும். அதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும். இந்த நிலையில் வருகிற 1ஆம் தேதி முதல் (நாளைமறுநாள்), அதாவது திங்கட்கிழமை முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.

    கார்/ பயணிகள் வேன்- ஒரு முறை செல்ல 105 ரூபாய் (பழைய கட்டணம் 105 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 160 ரூபாய் (பழைய கட்டணம் 155 ரூபாய்). மாதந்திர பாஸ் 3170 ரூபாய் (பழைய கட்டணம் 3100 ரூபாய்) ஆகும்.

    லைட் கமர்சியல் வாகனங்கள்- ஒருமுறை செல்ல 185 ரூபாய் (பழைய கட்டணம் 185 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 275 ரூபாய் (பழைய கட்டணம் 270 ரூபாய்). மாதந்திர பாஸ் ரூ. 5545 (பழைய கட்டணம் 5420 ரூபாய்) ஆகும்.

    டிரக்/பஸ்- ஒரு முறை செல்ல 370 ரூபாய் (பழைய கட்டணம் 360 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 555 ரூபாய் (பழைய கட்டணம் 540 ரூபாய்). மாதாந்திர பாஸ் ரூ. 11085 (பழைய கட்டணம் 10845 ரூபாய்).

    மல்டிபிள் ஆக்சில் வாகனங்கள் (இரண்டு ஆக்சிலுக்கு மேற்பட்டவை)- ஒருமுறை செல்ல 595 ரூபாய் (பழைய கட்டணம் 580 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 890 ரூபாய் (பழைய கட்டணம் 870 ரூபாய்). மாதாந்திர பாஸ் 17820 ரூபாய் (பழைய கட்டணம் 17425 ரூபாய்).

    பள்ளி பேருந்துகளுக்கு கிடையாது. மாதாந்திர பாஸ் 1000 ரூபாய் ஆகும் (பழைய கட்டணம் 100 ரூபாய்).

    அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்

    அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்'. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

     

    இப்படத்தை விகாஸ் இயக்கினார். பட வெளியீட்டின் போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது "அண்மையில் நான் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கிறேன். படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து போனார்கள். தமிழில் நான் கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தில் போஸ்டரில் கூட என் முகம் வராது. ஆனால் அஜய் , மம்மூட்டி போன்ற நடிகர்கள் சினிமாவிற்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். நிறைய பேர் சினிமாவில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனா ஒரு சிலர் தான் திருப்பி தர நினைக்கிறார்கள் " என ஜோதிகா பேசியுள்ளார்.

    இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் நெட்டிசன்கள் ஜோதிகா கூறுவது தவறு, தமிழ் சினிமாவில் என்றும் பட நாயகிகளை போஸ்டர்களில் போடுவார்கள்,  என தமிழில் ஜோதிகா நடித்த திரைப்படங்ளின் போஸ்டரி பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமியை 'தற்குறி' என்று அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • புதிய பாஜக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

    2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.

    கூட்டணி முறிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    அந்த சமயத்தில் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயியின் மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட தன்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று அண்ணாமலை பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உருவபொம்மை எரிப்பு என அதி.மு.க.-வினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதோடு, அதிமுக தலைவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அண்ணாமலை தலைமையிலான பாஜகவும் தனித்தனியாக கூட்டணி அமைத்து 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

    இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டால் பாஜகவும் கூட்டணி அமைப்பதாக எடப்பாடி தரப்பு அமித் ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியான நிலையில், புதிய பாஜக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

    பின்னர் உடனடியாக அமித் ஷாவின் நேரடி தலையீட்டால், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது. தினமும் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான கருத்துக்களை கூறி வந்த அண்ணாமலை அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தவுடன் சைலன்ட் மோடுக்கு சென்றார்.

    இந்நிலையில், மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "இபிஎஸ் வரட்டும், புரட்சி வரட்டும். முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப்போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026ல் மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக அண்மையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்குவது பாஜகவின் கடமை" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உடைந்துவிட கூடாது என்பதில் இருகட்சிகளும் உறுதியாக உள்ளதை தான் எடப்பாடி - அண்ணாமலையின் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

    • கடந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருள்கள் ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது.
    • எனவே, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாட்டை அதிகம் பாதிக்கிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி கடந்த 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. உற்பத்தி மற்றும் மென்பொருள் துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, அமெரிக்காவைத் தனது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகக் கொண்டுள்ளது.

    கடந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருள்கள் ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது. இந்தியா முழுவதும் அது 20 சதவீதம் மட்டுமே. எனவே, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாட்டை அதிகம் பாதிக்கிறது.

    அமெரிக்க அரசின் இந்த வரி உயர்வுபோல் முன்பு எப்போதும் ஏற்பட்டதில்லை. இதனால் அனைத்துத் துறைகளின் ஏற்று மதியாளர்களிடமும் அச்சம் நிலவுகிறது. கடும் சுங்கவரி உயர்வுகள் ஏற்கனவே பெறப்பட்ட பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட காரணமாகியுள்ளன. இந்த உயர்வுகள் எங்கள் தயாரிப்புகளை உலகளவில் போட்டியிட முடியாதவையாக மாற்றியுள்ளன.

    இந்த கடின சூழ்நிலையில் மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை. தமிழ்நாடு அரசு தன்னால் இயன்றதைச் செய்து கொண்டிருந்தாலும், ஒரு மாநில அரசால் செய்யக் கூடியவற்றுக்கு வரம்புகள் உள்ளன. எனவே, மத்திய அரசு தன் பங்கை உணர்ந்து, குறிப்பாகத் துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவின் ஏற்றுமதித் துறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையான கொள்கை வடிவமைப்பை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu) நடத்திய பகுப்பாய்வுப்படி, அமெரிக்காவின் 50 சதவீத சுங்கவரி விதிப்பால் மாநிலத்தின் கணிக்கப்பட்ட இழப்பு 3.93 பில்லியன் டாலராக இருக்கும். அதிகம் பாதிக்கப்படுபவை துணிநூல், இயந்திரங்கள், வைரம் மற்றும் நகைகள், வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொழில் துறைகளே.

    இந்தத் துறைகளில் வேலை இழப்பு 13 சதவீதத்திலிருந்து 36 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது.

    கேள்விக்குறியாகும் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இந்தியாவின் துணிநூல் ஏற்றுமதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 28 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாட்டின் துணிநூல் துறை கோடிக்கணக்கான குடும்பங்களைப் பாதுகாக்கிறது.

    திருப்பூர் மாவட்டத்தில், துணிநூல் தொழிலாளர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள். பல பத்தாண்டுகளாக மக்கள் வாழ்க்கையை மாற்றிய சமூக-பொருளாதாரச் சூழல் இது. திருப்பூரே கடந்த ஆண்டு சுமார் ரூ.40,000 கோடி வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டியது. ஏற்றுமதியைத் தாண்டி, இந்தத்துறை நிறைய துணைத் தொழில்களை உருவாக்குகிறது – நிறைவு, போக்குவரத்து, பொதியிடல், இயந்திர உற்பத்தி என நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கச் சுங்க வரிகள் துணிநூல் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் கவலைக்கிடமானது. 50 சதவீத சுங்கவரியில், இந்தத் துறையின் சாத்தியமான இழப்பு ஏறத்தாழ 1.62 பில்லியன் டாலர் வரை இருக்கும் என எங்கள் மதிப்பீடுகள் காட்டுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களின் வேலைகள் உடனடியாக ஆபத்தில் உள்ளன.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டதாக முதல்வர் கூறுகிறார்.
    • 10% கூட நடைமுறைக்கு வராத நிலையில் பச்சைப்பொய்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு வராத நிலையில், அனைத்து முதலீடுகளும் நடைமுறைக்கு வந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை விட பச்சைப் பொய் எதுவும் இருக்க முடியாது.

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரப்போவதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக சுற்றுலா சென்றிருக்கிறார். அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "'திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலம் 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

    தாம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்; பொய்யைத் தவிர வேறெதுவுமில்லை.

    திமுக அரசின் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுக் கதைகள் எந்த அளவுக்கு பொய்யானவை என்பதை கடந்த சில ஆண்டுகளில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், கோயபல்ஸ் கொள்கையை கடைபிடிக்கும் திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் இந்த பொய்யை நம்ப மாட்டார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலின் சிங்கப்பூர் பயணம் குறித்து கடந்த 20ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    அதன்பின் 10 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எவ்வாறு மீதமுள்ள 20 விழுக்காடு ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்தன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

    2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மொத்தம் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், அவற்றின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும் என்றும் திமுக அரசு அறிவித்தது. ஆனால், ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களின் பெயர்கள், விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கூட திமுக அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த விவரங்களை திமுக அரசு ரகசியமாக வைத்திருப்பதில் இருந்தே உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

    80% முதலீடு வந்து விட்டது, 100% முதலீடு வந்து விட்டது என நாளொரு பொய்யையும், பொழுதொரு கதையையும் திமுக அரசு கூறிவரும் நிலையில், உண்மை நிலை என்ன? என்பதை விளக்க சில புள்ளி விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

    2024ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிக முதலீடு செய்ய முன்வந்த 10 நிறுவனங்களின் பட்டியலை மட்டும் தமிழக அரசு வெளியிட்டது. அவற்றில் டாடா பவர் நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த நிறுவனம் இதுவரை ரூ.3800 கோடி மட்டுமே முதலீடு செய்துள்ளது.

    அதுவும் கூட முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன் 04.07.2022ஆம் நாள் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது ஆகும். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.70,000 கோடியில் ஒரு ரூபாய் முதலீடு கூட வரவில்லை.

    அதேபோல், அதானி குழுமம் உறுதியளித்த ரூ.42,768 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ உறுதியளித்த ரூ.12,000 கோடி, ஹுண்டாய் உறுதியளித்த ரூ.6180 கோடி ஆகியவற்றிலிருந்து ஒரு பைசா கூட வரவில்லை.

    வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில் ரூ.4000 கோடி மதிப்பில்தான் தூத்துக்குடி மகிழுந்து ஆலையை அமைத்திருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.37,538 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், அதன் பசுமை அமோனியா ஆலைக்கு அண்மையில்தான் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

    மீதமுள்ள நிறுவனங்கள் குறித்து எந்த விவரங்களையும் வெளியிட மு.க.ஸ்டாலின் அரசு மறுக்கிறது. திமுக அரசின் முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்த நிலையில் உள்ள நிலையில், அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் திமுக அரசு பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது.

    திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் திமுக அரசு இப்படித்தான் பொய்யுரைத்து வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவார்; அடுத்த நிகழ்ச்சியில் 90% என்று கூறுவார்; இப்போது 98% என்று கூறி வருகிறார். அதேபோல்தான் இப்போது தொழில் முதலீடு தொடர்பான விவகாரங்களிலும் 77%, 80%, 100% என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் கதைகளை கூறி வருகிறார்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

    தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 4 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. திமுக அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அந்த விவரங்களை வெளியிட்டு, தாங்கள் ஈர்த்த முதலீடுகளின் அளவை நிரூபிக்கலாம். ஆனால், அதை திமுக அரசு செய்யாது. காரணம் பொய் மட்டும்தான் திமுகவின் முதலீடு. திமுகவின் இந்த மோசடிகள் வெகுவிரைவில் அம்பலமாகும். அப்போது திமுக அரசை ஆட்சியிலிருந்து தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல்.
    • விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர்.

    நாளை ஞாயிற்றுக்கிழமை தூர்வாஷ்டமி தினமாகும். அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை நாளை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக நாளைய தினம் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

    தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.

    'அருகம்புல்' என்பதன் மற்றொரு பெயர், 'தூர்வா' என்பதாகும். விநாயகர் பூஜையில் இது முக்கியமான ஒன்றாகும். தூர்வா மூன்று கத்திகளைக் கொண்டது போல் இருக்கும். இது முதன்மைக் கடவுளரான சிவன், சக்தி, விநாயகர் ஆகிய மூவரையும் குறிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்தும், ஆற்றலைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.

    ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, 'தூர்வாஷ்டமி' ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, 'தூர்வாஷ்டமி ப்ராடா' என பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

    இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள்.

    இந்து மதத்தில் தூர்வா (அருகல்புல்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் கைகளிலிருந்து விழுந்த சில முடிகளெனவும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் செல்கையில் ஒருசில துளிகள் தூர்வா புல் மீது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. முழு மனதுடன் பூஜை செய்ய, வரும் தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற்று வாழ்க்கையில் மன அமைதி உண்டாகி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    அனலாசுரன் என்கிற அரக்கன் பூமிக்கு வந்து முதலில் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சாப்பிட்ட பிறகு தேவலோகம் சென்றான். தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைய, விநாயகரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியுமென அவர் கூறவும், அவ்வாறே அவர்கள் செய்தனர்.



    விநாயகப்பெருமான், அனலாசுரனை விட பிரம்மாண்ட வடிவெடுத்து, அசுரனைப் பிடித்து விழுங்கி விட, விநாயகரின் வயிறு வெப்பத்தால் நிறைந்தது. அந்த எரிச்சல் தேவர்கள் மற்றும் உலக உயிர்கள் அனைத்தின் வயிற்றிலும் எரிய ஆரம்பித்தது. விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர். இந்திரன், சந்திரன் ஆகியோர் விநாயகரின் தலையில் அமிர்தத்தை விட்டபோதும், மகாவிஷ்ணு, விநாயகரை தாமரை மலரால் அர்ச்சித்தபோதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அங்கிருந்த எண்பதாயிரம் முனிவர்களும் ஒரு முடிவெடுத்தனர்.

    ஒவ்வொரு முனிவரும் 21 தூர்வா புற்களைக் கொண்டு விநாயகரின் உடலை மூட ஆரம்பித்தனர். அதிசயமாக விநாயகரின் உடலில் உஷ்ணம் மெதுவாகத் தணிந்து இயல்பு நிலைக்கு வர, அதே நேரத்தில் மற்ற உயிர்களின் வெப்ப உஷ்ணமும் சரியாகி விட்டது.

    உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல். விநாயகருக்கு எந்த மலர் கொண்டு அர்ச்சித்தாலும், கூடவே தூர்வா புல்லினால் அர்ச்சனை செய்தால்தான் அது முழுமையடையும். அத்தகைய பெருமைகளைக் கொண்ட தூர்வா புல்லுக்கு தூர்வாஷ்டமி தினத்தன்று பூஜை செய்து மனதார வழிபடுவது நல்ல பலன்களையும் அமைதியையும் அளிக்கும்.

    • உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் ரூ.37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்,.
    • மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

    முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐரோப்பிய பயணத்திற்கு முதலில் எனது வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜக சார்பாக முழு மனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம்.

    ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு வருடமும் பல வெளிநாடுகளுக்குப் பயணித்த தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பது தான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.

    காரணம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் 37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்! மகாராஷ்டிரா முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்நாவிஸ் அவர்கள், டாவோஸ் பயணத்தில் ₹15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அவரது மாநிலத்திற்குக் குவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ₹6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மூன்று வருடங்கள் கடந்தும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை! சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த போது கையெழுத்தானவை வெறும் காகித உடன்படிக்கைகளாகவே இன்றும் நிலுவையில் உள்ளன.

    மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்பெயின் பயணம் மூன்று உடன்படிக்கைகளோடு சொற்பமாக முடிந்து விட்டது. அதிலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை! 2024-இன் அமெரிக்கப் பயணத்தில் ₹7.500 கோடி மதிப்பிலான 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அரசு கூறினாலும், இதுவரை ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.

    கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசின் தொழில் துறையின் ஆற்றலின்மையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேலும், செலவை சுருக்கி வரவைப் பெருக்குவதில் பிற மாநில அரசுகளும் முதல்வர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இதுநாள் வரை தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

    அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்தினாலே நமது தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். ஊழல், லஞ்சம். முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, தொழில் துவங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குப் படையெடுக்கும்.

    இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதால் யாருக்கு என்ன பயன்?" என்று தெரிவித்துள்ளார்.

    • டிவிஎஸ் ஆர்பிட்டர் 3.1 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஓலா S1 X+ (ஜென் 3) 4 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமும் செய்துள்ளது. டிவிஎஸ் ஆர்பிட்டர் (Orbiter) என அழைக்கப்படும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.99,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் புளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் என ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் மாடல் ஓலா நிறுவனத்தின் S1 X+ மற்றும் விடா VX2 பிளஸ் ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

    டிவிஎஸ் ஆர்பிட்டர் Vs ஓலா S1 X+ Vs விடா VX2 பிளஸ்: அம்சங்கள்

    டிவிஎஸ் ஆர்பிட்டர் 3.1 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 158 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 68 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

    ஓலா S1 X+ (ஜென் 3) 4 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. இது 242 கிலோமீட்டர் ரேஞ்ச், 14.75 hp பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 125 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    விடா VX2 பிளஸ் 3.4 kWh பவர் யூனிட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோமீட்டர் வரை செல்லும். இது வெறும் 3.1 வினாடிகளில் மணிக்கு 0-40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    டிவிஎஸ் ஆர்பிட்டர் Vs ஓலா S1 X+ Vs விடா VX2 பிளஸ்: விலை

    டிவிஎஸ் ஆர்பிட்டர் ரூ.99,900 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    ஓலா S1 X+ ரூ.1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    விடா VX2 பிளஸ் ரூ.82,790 (எக்ஸ்-ஷோரூம்)

    • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி முடிவடைந்த நிலையில், ஆர்ஆர் அணியில் இணைந்தார்.
    • இவரது தலைமையில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9ஆவது இடத்தை பிடித்தது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உறுதி செய்துள்ளது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2025ஆம் ஆண்டுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். போட்டிக்கு முன்னதாக அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இருந்தபோதிலும் லீல் சேரில் அமர்ந்தவாறு பணியாற்றினார்.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வீரர், பயிற்சியாளர் என்ற வகையில் நீண்ட கால உறவு இருந்து வந்த நிலையில், தற்போது அந்த அணி உடனான உறவு முடிவுக்கு வருகிறது.

    அணியில் தலைமை பயிற்சியாளரை தாண்டி மிகப்பெரிய பொறுப்பு வழங்க உரிமையாளர்கள் ஆஃபர் தெரிவித்த நிலையில், தற்போது மறுக்கப்பட்டதால் ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று 9ஆவது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தது.

    ×