என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"கூட்டணி தர்மம்" - அடக்கி வாசிக்கும் அண்ணாமலை - இழுத்துப் பிடிக்கும் இ.பி.எஸ்.
- எடப்பாடி பழனிசாமியை 'தற்குறி' என்று அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- புதிய பாஜக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.
கூட்டணி முறிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த சமயத்தில் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயியின் மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட தன்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று அண்ணாமலை பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உருவபொம்மை எரிப்பு என அதி.மு.க.-வினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதோடு, அதிமுக தலைவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அண்ணாமலை தலைமையிலான பாஜகவும் தனித்தனியாக கூட்டணி அமைத்து 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டால் பாஜகவும் கூட்டணி அமைப்பதாக எடப்பாடி தரப்பு அமித் ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியான நிலையில், புதிய பாஜக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் உடனடியாக அமித் ஷாவின் நேரடி தலையீட்டால், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது. தினமும் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான கருத்துக்களை கூறி வந்த அண்ணாமலை அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தவுடன் சைலன்ட் மோடுக்கு சென்றார்.
இந்நிலையில், மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "இபிஎஸ் வரட்டும், புரட்சி வரட்டும். முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப்போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026ல் மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக அண்மையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்குவது பாஜகவின் கடமை" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உடைந்துவிட கூடாது என்பதில் இருகட்சிகளும் உறுதியாக உள்ளதை தான் எடப்பாடி - அண்ணாமலையின் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.






