என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது. டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை நதியின் நீர்மட்டம் இன்று காலை அபாய அளவைத் தாண்டியது. இதனால் யமுனை நதியின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
யமுனை உட்பட சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்ததால், யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையின் மதகுகளை அதிகாரிகள் திறக்க தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிப்பு ஏற்படக்கூடிய சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குருகிராமில் பெய்த கனமழையால் மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனர்.
யமுனை நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால், பழைய ரெயில் பாலத்தில் இன்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வயல்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது நிலைமை மோசமாகி உள்ளது. நேற்று இரவு முதல் மக்களை மீட்டு வருகிறோம். மக்களை பாதுகாப்பாக மீட்டுள்ளோம்.
நேற்று இரவு முதல் 50-60 பேரை மீட்டுள்ளோம். சிக்கித் தவிக்கும் கால்நடைகளையும் மீட்டு வருகிறோம். இந்த படகுகள் டெல்லி அரசின் சார்பாக இயக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
- நெட்ப்ளிக்சில் வெளியான வெனஸ்டே சீசன் 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே. நெட்ப்ளிக்சில் வெளியான வெனஸ்டே சீசன் 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில், வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார்.
தற்போது வெனஸ்டே தொடரின் 2வது சீசன் வெளியாகி உள்ளது. வெட்னஸ்டே சீசனின் முதல் 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது.
இந்நிலையில், வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக ஆலோசனை.
- கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதற்கு காலக்கெடு வைக்கப்பட்டது.
அந்தக் காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் ரகசியமாக பரிந்துரை செய்து அதற்கான கடிதத்தை டாக்டர் ராமதாசிடம் வழங்கினர்.
இன்னும் 2 நாட்களில் டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என நேற்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக பா.மக. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளராக தற்போது தைலாபுரம் தோட்டம் வந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க.மாவட்ட செயலாளர்கள் 108பேரும், மாவட்டத் தலைவர்கள் 108பேரும், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் 111பேரும், மாவட்ட தலைவர்கள் 111 பேரும் கலந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார்.
- நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது.
- நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பேட் கேர்ள்’.
- 'காந்தி கண்ணாடி' படத்தில் கே.பி.ஒய். பாலா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'தலைவன் தலைவி', 'கூலி', படங்கள் வெளியானது. இவ்விரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இம்மாதம் (செப்டம்பர்) வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்...
வருகிற 5-ந்தேதி 4 படங்கள் வெளியாக உள்ளது. அவை, 'மதராஸி', 'பேட் கேர்ள்', 'காட்டி', 'காந்தி கண்ணாடி' உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் 'பேட் கேர்ள்'. வர்ஷா பரத் இயக்கி உள்ள இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.
கிரிஷ் ஜகாரலமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள 'பொலிட்டிக்கல் த்ரில்லர் காட்டி'. அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பின் 'காட்டி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
'காந்தி கண்ணாடி' படத்தில் கே.பி.ஒய். பாலா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பாலாஜி கே ராஜா கையாள, சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
செப்டம்பர் 12-ந்தி வெளியாகும் படங்கள்...
* மிராய்
* யோலோ
* பாம்ப்
* குமார சம்பவம்
செப்டம்பர் 19-ந்தேதி வெளியாகும் படங்கள்...
* கிஸ்
* தண்டகாரண்யம்
* சக்தி திருமகன்
செப்டம்பர் 25-ந்தேதி பவன் கல்யாண் பிரியங்கா மோகன் நடித்து தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'ஓஜி' படமும், பல்டி உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன.
- சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
- முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
* இயற்கை பேரிடர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு 5 ஆண்டு காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத சூழலிலும் பல்வேறு திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் மத்திய அரசின் நிதி இல்லாமலேயே தி.மு.க. அரசு தமிழகத்தை மீட்டுள்ளது.
* கொரோனா கால நெருக்கடிகள், நிதி நெருக்கடிகளை கடந்து மக்கள் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன.
* உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
* 3.49% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 1.17%, 4.91% ஆக இருந்த நிதி பற்றாக்குறை 3% ஆக குறைந்துள்ளது.
* சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 0.07% ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.19% ஆக உயர்த்தி உள்ளோம்.
* உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம். இது 10 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்சமாகும்.
* தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்துள்ளது.
* 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 10.2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
* முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
* நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 3.28 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
* தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட்கள், 14 நியூ டைடல் பார்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.
* மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்.
* மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்த வீடியோக்களும் வைரலாக பரவி வருகின்றன.
- அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் பிரதமர் மோடி பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.
சீனாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற அமெரிக்கா மற்றும் பல்வேறு நாட்டின் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் கூட அங்கு பயன்பாட்டில் இல்லை.
உள்நாட்டை சேர்ந்த வெய்போ என்ற சமூக வலைதளம் மட்டுமே அங்குள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு சீனா சென்ற பிரதமர் மோடி பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் வெய்போ தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கடந்த 2 நாட்களாக வெய்போ தளத்தில் பிரதமர் மோடி தான் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றதால் இந்த ஆண்டு ஷாங்காய் உச்சி மாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் பிரதமர் மோடி பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.

இந்த நிலையில் சீனாவின் வெய்போ சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஒன்றாக கலந்துரையாடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்த வீடியோக்களும் வைரலாக பரவி வருகின்றன. பிரதமர் மோடியின் நடை, உடை, பாவனைகள் மற்றும் துணிச்சலான முடிவுகள் குறித்து சீனர்கள் அதிகம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த உச்சி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக எந்த ஒரு வீரரும் 90 சிக்சர்கள் கூட அடிக்கவில்லை.
- அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் சாதனையை வசீம் முறியடித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகிறது. ஒரு அணி மற்ற அணியுடன் 2 முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்நிலையில் நேற்றைய 3-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் எமிரேட்ஸ் அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியின் கேப்டன் வசீம் பல மகத்தான சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் வசீம் 37 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகளை பறக்க விட்டார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மாவை (105 சிக்சர்) பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் வசீம் (110 சிக்சர்) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக எந்த ஒரு வீரரும் 90 சிக்சர்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
80 டி20 போட்டிகளில் விளையாடிய வசீம், 156.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,859 ரன்கள் எடுத்துள்ளார் (சராசரி: 38.12). இதில் 3 சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் அடங்கும். வேறு எந்த யுஏஇ பேட்ஸ்மேனும் டி20யில் 1,300 ரன்கள் கூட எடுக்கவில்லை.
மேலும் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (173 சிக்சர்கள்) வசீம் (174 சிக்சர்கள்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி, டி20 போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட சிக்சர்களை (160) அடித்த மற்றொரு வீரர் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மட்டுமே.
- அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகினால் அவருக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளது

செங்கோட்டையன் திமுகவில் சேர வாய்ப்புள்ளதா?
* எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே செங்கோட்டையன் அதிமுகவில் பயணிக்கிறார்.
* அதிமுகவின் மிக மூத்த தலைவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.
* அதிமுகவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜி கொங்கு மாவட்டங்களின் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
* ஒருவேளை செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் அவரை விட ஜுனியரான செந்தில் பாலாஜியின் கீழ் செயல்படவேண்டிய நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது
* ஆதலால் செங்கோட்டையன் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு மிக குறைவே

செங்கோட்டையன் பாஜகவில் இணைந்து பயணிப்பாரா?
* அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாவதற்கு முன்பே டெல்லி வரை சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
* அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பின்பு செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
* அதிமுக - பாஜக கூட்டணி இல்லையென்றால் கூட செங்கோட்டையன் பாஜகவில் இணைவதற்கு சாத்தியம் இருந்திருக்கும்.
* ஆகவே கூட்டணியால் இப்போது பாஜகவிற்கு செங்கோட்டையன் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவே, அதற்கு அவர் அதிமுகவிலேயே இருந்துவிடலாம்
செங்கோட்டையன் தனிக்கட்சி தொடங்குவாரா?
* செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினால், திமுக, அதிமுகவை மீறிப் பிரகாசிப்பது கடினம், ஆதலால் அந்த முடிவை செங்கோட்டையன் எடுப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே.
செங்கோட்டையனின் ஒரே வாய்ப்பு த.வெ.க.?
* நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்தி லட்சக்கணக்கில் மக்களை கூட்டி தனது கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பதை காண்பித்தார்.
* ஆனாலும் கூட, இதுவரை தேர்தலை சந்திக்காத த.வெ.க. தேர்தலில் போட்டியிட்டால் தான் அதனுடைய பலம் என்னவென்று காட்டமுடியும்.

* 2026 சட்டமன்ற தேர்தலில் தான் த.வெ.க.வின் பலம் என்னவென்று மற்ற கட்சிகளுக்கு தெரியவரும்.
*வளர்ந்து வரும் கட்சியாக உள்ள த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளது.
* தனது அரசியல் வாழ்க்கையில் கடைசிக் கட்டத்தில் இருக்கும் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்து அக்கட்சியின் கொங்கு மாவட்ட முகமாகவும் பொறுப்பாளராகவும் ஆகுவதற்கு வாய்ப்புள்ளது.
*அரசியலில் பழம் தின்று கோட்டை போட்ட செங்கோட்டையன், அரசியலில் இப்போது தான் காலடி எடுத்து வைத்திருக்கும் விஜயை தலைவராக ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழலாம். ஆனால் இத்தகைய நம்ப முடியாத முடிவுகள் தான் அரசியலே.
இருப்பினும் செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது செப்டம்பர் 5 ஆம் தேதி மக்களுக்கு தெரிந்து விடும்.
- ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது.
- ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த 2 தொடரில் இருந்தும் முதுகு வலி காயம் காரணமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். மேலும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பெரிய அடியாக உள்ளது.
- அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும்.
- தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர்:
கடலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம், டாக்டர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், போக, போக தெரியும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், நான் அரசியல் வியாதியும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. சமூக சீர்திருத்தவாதி என்றார்.
முன்னதாக கடலூர் அருகே ராமாபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டாக்டர் அன்புமணி பற்றிய கேள்விக்கு, சொல்வதற்கு ஏதும் இல்லை. எதுவும் இல்லை. அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும். எதுவும் சொல்லக்கூடாது என்றார்.
அதைத்தொடர்ந்து பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபிநாத் வீட்டுக்கு சென்ற அவர் அவரது இரட்டை குழந்தைகளில், ஒன்றை எடுத்து கொஞ்சியபடி தாலாட்டு பாடினார். காலை எழும் சூரியனே , ஆராரோ, ஆரிராரோ என்று பாடினார்.
இந்த தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
- இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்கிறது.
வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வந்த நிலையில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
அதனை அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா முழுவதும் பரவி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக் கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.






