என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது.
    • குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம்.

    நரேந்திர மோடி 'இலவச ரீசார்ஜ் திட்டம்' பற்றிய தகவல்கள் தவறானவை என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.

    "SaoudKiTech" என்ற யூடியூப் சேனலில் பரவும் ஒரு வீடியோ, இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மொபைல் பயனர்களும் ஒரு வருட இலவச ரீசார்ஜ் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறது. இந்த கூற்று முற்றிலும் போலியானது என்பதை பத்திரிகை தகவல் பணியகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.

    அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது. கூடுதலாக, மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செய்திகள், படங்கள் அல்லது வீடியோக்களை எக்ஸ் வழியாகவோ அல்லது +918799711259 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ நேரடியாக பத்திரிகை தகவல் பணியகத்துக்கு புகார் அளிக்கலாம்.

    குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம் என்றும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை ஆன்லைனில் பகிர வேண்டாம் என்றும் பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்தி உள்ளது.

    • இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது

    ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.

    இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.

    வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.  

    இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

    அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.

    இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.

    இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?
    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.

    பேச்சை மனப்பாடம் செய்வதற்காகவே சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

    * தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?

    * மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் 15 நிமிடங்கள் தான் உரையாற்ற அனுமதி கேட்டுள்ளனர்.

    * சங்கி என்றால் நண்பன் என பொருள் வருகிறது, திராவிடம் என்றால் திருடன் என்றே வருகிறது.

    * த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.

    * ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது என்ற அடிப்படை கூட விஜய்க்கு தெரியவில்லை.

    * விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்.

    * தி.மு.க அரசியல் எதிரி என்றால் அ.திமு.க. அரசியல் எதிரி இல்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.
    • ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது.

    காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் 9 அன்று கூடியிருந்தனர்.

    அப்போது, இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.

    இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

    அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.

    இந்த தாக்குதல் கோழைத்தனமானது என கத்தார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முன்னதாக கண்டித்திருந்தார்.

    இந்நிலையில் தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது பேசிய அவர், தாக்குதல் நடைபெற்ற அன்று காலை நான் பிணைக் கைதி ஒருவரது குடும்பத்தினருடன் பேசினேன். அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கவனிக்கின்றனர். ஆனால், தாக்குதலின் மூலம் நேதன்யாகு அந்த பிணைக் கைதிகளுக்கான அனைத்து நம்பிக்கையையும் கொன்றுவிட்டார்.

    இஸ்ரேலால் ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது. இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு - இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும். அதில் இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.  

    • பல சிக்கல்கள் நிறைந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
    • பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில், தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணங்களில் உயிரிழப்பவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும், ஆஸ்பத்திரியில் இருந்து கோர்ட்டுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை மூடிய நிலையில் 'சீல்' வைத்து அனுப்பப்படுகிறது. போலீசார் நேராக வந்து அறிக்கையை பெற்றுக்கொள்வார்கள். இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாருக்கும், கோர்ட்டுக்கும் அனுப்புவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

    அறிக்கையில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தான் கையொப்பமிட வேண்டும். ஒருவேளை அந்த டாக்டர் வேறு மாவட்டத்திற்கோ அல்லது வேறு ஆஸ்பத்திரிக்கோ பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டாலும் அவர் அறிக்கையில் கையொப்பமிட்டு பார்சல் மூலம் போலீசாருக்கு அனுப்பும் சூழல் ஏற்படுகிறது. மேலும், ஆஸ்பத்திரி தரப்பில் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தில் தயார் செய்யப்படுகிறது. ஆனால், போலீசார் தங்கள் பணிகளுக்கு இடையில் இந்த அறிக்கையை சென்று வாங்கி வர காலதாமதம் ஆகிறது என கூறப்படுகிறது.

    இவ்வாறு பல சிக்கல்கள் நிறைந்த இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.

    அதன்படி, கோர்ட்டு உத்தரவின் பேரில், தமிழக அரசு ஒரு புதிய வசதியை கொண்டு வர உள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரி சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த அறிக்கைகளை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-

    பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 24 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். இந்த அறிக்கையை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.

    பிரேத பரிசோதனை அறிக்கை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று தங்கள் சான்றிதழ்களை காண்பித்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.

    பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்த புதிய வசதியின் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் உள்ள தாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது போலீசார் நேரில் வந்து பிரேத பரிசோதனை அறிக்கை வாங்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
    • அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.

    சென்னை:

    நமது நாட்டில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களின் வினியோகத்தை தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை ஏ.பி.சி. என்று அழைக்கப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்துவருகிறது.

    அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கான தணிக்கை அறிக்கையை பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதில் கசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 2 கோடியே 89 லட்சத்து 41 ஆயிரத்து 876 பிரதிகள் விற்பனையாகி இருந்தது.

    நடப்பு ஆண்டின் முதல் பாதியான கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையுள்ள காலக்கட்டத்தில் 2 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரத்து 148 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. இது முந்தைய 6 மாதத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 272 பிரதிகள் அதிகம்.

    மேலும் கடந்த ஆண்டின் 2-ம் பாதியை விட 2.77 சதவீதம் உயர்வு ஆகும். இது அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.

    நாளிதழ்களின் விற்பனை அதிகரித்திருப்பது நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட, ஆழமான தகவல்களுக்காக வாசகர்கள் செய்தித்தாள்களை தொடர்ந்து நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. நாளிதழ்களின் விற்பனை எழுச்சியடைந்திருப்பது அச்சு ஊடகத்தின் வலுவான செயல்திறனை குறிப்பதோடு, செய்தி பயன்பாடு மற்றும் விளம்பர ஈடுபாட்டுக்கான வலிமையான ஊடகமாக அதன் நிலையையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும்.
    • பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.

    மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு உள்ளிட்ட 10 வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும்.

    பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

    • கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
    • நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.

    சென்னை:

    யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.

    தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.

    இந்த உயர்த்தப்பட்ட பரிவர்த்தனை வரம்பு வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    • வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும்.
    • கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர்-தஞ்சாவூர், எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16865), வரும் 17-ந்தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16866), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும்.

    எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), வரும் 17-ந்தேதியில் இருந்து நவம்பர் 9-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரையில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இடைப்பட்ட காலத்தில் 13க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்டார்.
    • பாஜக உறுப்பினர்கள் 43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

    மணிப்பூரில் மே 2023 இல் குக்கி, மெய்தேய் சமூக மக்கள் இடையே பழங்குடியின அந்தஸ்து பெறுவது தொடர்பாக இனக்கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாயினர்.

    இரு சமூகங்களை சேர்ந்த ஆயுத குழுக்களால் இன்னும் மணிப்பூரில் பதற்றம் தணிந்தபாடில்லை. கடந்த பிப்ரவரியில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.

    கலவரம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூர் செல்லாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. குறிப்பாக இந்த இடைப்பட்ட காலத்தில் 13க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்ட போதும் சொந்த நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பிரதமர் செல்லாதது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் கலவரத்தின் பின் முதல் முறைக்காக பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்ல உள்ளார்.

    குக்கிகள் பெரும்பான்மையாக வசிக்கும் சூரசந்த்பூரில், ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.

    மெய்தேய் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில், ரூ.1,200 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் ஃபுங்யார் மண்டல பாஜக உறுப்பினர்கள்  43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

    "கட்சியின் தற்போதைய நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். ஆலோசனை இல்லாமை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை இல்லாமை மற்றும் அடிமட்டத் தலைமைக்கு மரியாதை இல்லாதது ஆகியவை எங்கள் முடிவுக்கு முக்கிய காரணங்கள்" என்று ராஜினாமா செய்த உறுப்பினர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

    • முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
    • அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டு ராகவா லாரன்ஸ் அவரது உதவி செய்யும் குணத்திற்காக அறியப்படுகிறார்.

    இந்நிலையில் சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்கும் முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் 80 வயது முதியவரும் அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை இணையதளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    முதியவர் காண்பித்திருக்கும் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விவரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்" என்று ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். 

    ×