என் மலர்
உலகம்

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா இந்தியா?.. விரைவில் ஒப்பந்தம் - அமெரிக்கா
- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
- இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது
ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.
இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.
வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.
இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.






