என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்.. ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
- இடைப்பட்ட காலத்தில் 13க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்டார்.
- பாஜக உறுப்பினர்கள் 43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
மணிப்பூரில் மே 2023 இல் குக்கி, மெய்தேய் சமூக மக்கள் இடையே பழங்குடியின அந்தஸ்து பெறுவது தொடர்பாக இனக்கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாயினர்.
இரு சமூகங்களை சேர்ந்த ஆயுத குழுக்களால் இன்னும் மணிப்பூரில் பதற்றம் தணிந்தபாடில்லை. கடந்த பிப்ரவரியில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.
கலவரம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூர் செல்லாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. குறிப்பாக இந்த இடைப்பட்ட காலத்தில் 13க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்ட போதும் சொந்த நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பிரதமர் செல்லாதது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் கலவரத்தின் பின் முதல் முறைக்காக பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்ல உள்ளார்.
குக்கிகள் பெரும்பான்மையாக வசிக்கும் சூரசந்த்பூரில், ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
மெய்தேய் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில், ரூ.1,200 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் ஃபுங்யார் மண்டல பாஜக உறுப்பினர்கள் 43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
"கட்சியின் தற்போதைய நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். ஆலோசனை இல்லாமை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை இல்லாமை மற்றும் அடிமட்டத் தலைமைக்கு மரியாதை இல்லாதது ஆகியவை எங்கள் முடிவுக்கு முக்கிய காரணங்கள்" என்று ராஜினாமா செய்த உறுப்பினர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.






