என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இடைப்பட்ட காலத்தில் 13க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்டார்.
- பாஜக உறுப்பினர்கள் 43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
மணிப்பூரில் மே 2023 இல் குக்கி, மெய்தேய் சமூக மக்கள் இடையே பழங்குடியின அந்தஸ்து பெறுவது தொடர்பாக இனக்கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாயினர்.
இரு சமூகங்களை சேர்ந்த ஆயுத குழுக்களால் இன்னும் மணிப்பூரில் பதற்றம் தணிந்தபாடில்லை. கடந்த பிப்ரவரியில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.
கலவரம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூர் செல்லாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. குறிப்பாக இந்த இடைப்பட்ட காலத்தில் 13க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்ட போதும் சொந்த நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பிரதமர் செல்லாதது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் கலவரத்தின் பின் முதல் முறைக்காக பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்ல உள்ளார்.
குக்கிகள் பெரும்பான்மையாக வசிக்கும் சூரசந்த்பூரில், ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
மெய்தேய் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில், ரூ.1,200 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் ஃபுங்யார் மண்டல பாஜக உறுப்பினர்கள் 43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
"கட்சியின் தற்போதைய நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். ஆலோசனை இல்லாமை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை இல்லாமை மற்றும் அடிமட்டத் தலைமைக்கு மரியாதை இல்லாதது ஆகியவை எங்கள் முடிவுக்கு முக்கிய காரணங்கள்" என்று ராஜினாமா செய்த உறுப்பினர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.
- முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
- அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டு ராகவா லாரன்ஸ் அவரது உதவி செய்யும் குணத்திற்காக அறியப்படுகிறார்.
இந்நிலையில் சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்கும் முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் 80 வயது முதியவரும் அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை இணையதளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
முதியவர் காண்பித்திருக்கும் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விவரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்" என்று ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-27 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி பிற்பகல் 2.01 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : பரணி மாலை 4.30 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று மகாபரணி, கார்த்திகை விரதம் (இன்று பித்ரு கடன் இயற்றுதல் நன்று). சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிசு
ரிஷபம்-பாசம்
மிதுனம்-பண்பு
கடகம்-பரிவு
சிம்மம்-செலவு
கன்னி-ஆதாயம்
துலாம்- வரவு
விருச்சிகம்-சலனம்
தனுசு- வெற்றி
மகரம்-விருப்பம்
கும்பம்-நிறைவு
மீனம்-தாமதம்
- ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
- சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்
இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் , அப் பதவிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது.
இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர்.
இதில், சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதை ஒட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன் தான் வகித்து வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக நடைபெறும்.
ரிஷபம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகள் அகலும்.
மிதுனம்
மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
கடகம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சிம்மம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கவனம் தேவை.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லையுண்டு.
துலாம்
சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொலைபேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர்.
தனுசு
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
புகழ் கூடும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.
கும்பம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மீனம்
அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். போட்ட திட்டங்கள் நிறைவேறலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயில் தேடிவரலாம்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்துச் சிதறியது.
- இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதன்பின் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது.
இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி பலியாகினர். 90-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முதல் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது.
- பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.
இதையடுத்து, நாளை மறுதினம் துபாயில் அரங்கேறும் முக்கியமான லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இவ்விரு அணிகள் முதல் முறையாக சந்திக்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய வீரர்கள் ஆட்டத்தின் மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தியாவிடம் சிறந்த அணி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்ற விஷயங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல், தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். களம் இறங்கி வெற்றி பெறுங்கள். அரசாங்கம் தங்களது வேலையை பார்த்துக் கொள்ளும். வீரர்கள் தங்களது வேலையை சரியாக செய்ய வேண்டும். அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நன்றாக ஆடியது. கோப்பையையும் நமது அணி வெல்லும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இசட் பிளஸ் பிரிவில் இருந்து வருகிறார்.
- ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கும் சி.ஆர்.பி.எப். நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் துப்பாக்கி ஏந்திய சுமார் 12 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது நிகழ்வுகளில் அதாவது உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டி உள்ளது. அதாவது, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திட்டமிடாத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளது.
இது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இது தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சி.ஆர்.பி.எப்-ன் வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. மேலும் ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆனால், சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்திய அரசுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறி வரும் ராகுல் காந்தியை மிரட்டும் செயல் இது என குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோல் சி.ஆர்.பி.எப். ராகுல் காந்திக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், தனது சினிமா பயணம் அரை நூற்றாண்டை எட்டியுள்ளதை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும், வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூருக்கு வந்த இளையராஜா கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின், நகைகளை காணிக்கையாக செலுத்தினார். நகைகளைச் சமர்ப்பிக்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். நன்கொடைகளை வழங்கிய இளையராஜாவுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோவிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லூர் தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் இளையராஜா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. நிசாகத் கான் 42 ரன்னும், ஜீஷன் அலி 30 ரன்னும், யாசிம் முர்தசா 28 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பர்வேஸ் ஹொசைன் 19 ரன்னும், தன்சித் ஹசன் 14 ரன்னும் எடுத்தனர்.
3-வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து 59 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வங்கதேசம் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தவ்ஹித் ஹிருதோய் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்படுவதாகவோ சில தகவல்கள், வதந்திகள் பரவி வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.






