என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
    • ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி நகரப்பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷத். இவர் தென்காசி நகரின் மையப்பகுதியில் உள்ள அம்மன் சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அதே சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வரும் உரிமையாளரான காலிப் என்பவர், தனக்குத் தெரிந்த ஒருவரின் 56 கிராம் நகை ரூ.3.5 லட்சத்திற்கு அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை அடகில் இருந்து திருப்ப நீங்கள் பணம் கொடுத்தால், அவர் அந்த நகையை உங்களிடமே விற்பனை செய்வார் என கூறி உள்ளார்.

    இந்த நிலையில், ஹர்ஷத் தன்னிடம் இருந்த ரூ3.5 லட்சம் பணத்தை காலிப்பிடம் கொடுத்து அந்த நகையை திருப்பிய நிலையில், அந்த நகை தரம் குறைந்த நகையாக இருந்துள்ளது.

    அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹர்ஷத் இது தரம் குறைந்த தங்கம் எனவும், இது எனக்கு வேண்டாம் தன்னுடைய பணத்தை திருப்பி தாருங்கள் என கூறியுள்ளார்.

    ஆனால், பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று இரவு ஹர்சத்தை, காலிப் உள்பட சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர்சத்தை தாக்கிய காலிப் மற்றும் அவரது சகோதரர்களான அஸ்லம், ஹாஜி உள்ளிட்ட 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருமுறை மட்டும் லாபம் என்று ரூ.8860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
    • பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த 26 வயது நபர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    இவரது செல்போனிற்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்தது. பின்னர் சலீம் முகமதுவை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் இதற்காக பதிவு செய்து கொள்ள டெலிகிராமில் ஒரு லிங்கையும் அனுப்பி உள்ளார். இதனை உண்மை என்று நம்பிய என்ஜினீயர் கடந்த 15.11.2025 முதல் 20.11.2025 வரை 31 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.9.63 லட்சத்தை அனுப்பியுள்ளார்.

    இதில் ஒருமுறை மட்டும் லாபம் என்று ரூ.8860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். பல நாட்கள் கடந்த நிலையில் எவ்வித லாபத் தொகை வரவில்லை. இதுகுறித்து சலீம் முகமது அந்த டெலிகிராம் லிங்கில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சலீம் முகமது ரூ.9.54 லட்சத்தை தன்னிடம் இருந்து மோசடி செய்து விட்டனர் என்பதை உணர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வங்கிகளுக்கு தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் மெயில் அனுப்பி விசாரித்ததில் 11 வங்கிகளில் இருந்து சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
    • 2017-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.3.64 லட்சமாக இருந்துள்ளது.

    சென்னை:

    சென்னை விபசார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜலட்சுமி. இவர் 2017-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.42 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    1999-ம் ஆண்டு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி இதற்கு முன்னர் பொருளாதார குற்றப்பிரிவிலும், மது விலக்கு பிரிவிலும், போக்குவரத்து பிரிவிலும் பணியாற்றி இருக்கிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதன் அடிப்படையில்தான் தற்போது இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    2017-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.3.64 லட்சமாக இருந்துள்ளது. அது 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் ரூ.4.62 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

    • தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது.
    • அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது பற்றி பா.ஜ.க. நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது:-

    கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்கமாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் பிரேமலதா தி.மு.க.வுடன் இணைந்துள்ளார். அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.

    தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. எனவே யார் வந்தாலும் சேர்த்து கொண்டு கரையேற முயற்சிக்கிறது.

    ஆனால் இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.

    அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் தே.மு.தி.க.வையும் இழுத்து போட்டுள்ளார்கள்.

    காங்கிரசுக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் தி.மு.க. கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது.

    காமராஜர் காலத்துக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலக் கட்டத்திலும் தனியாக நிற்க முயற்சி எடுத்தது கிடையாது. கரைந்து போன அந்த கட்சி இனி எந்த காலத்திலும் கரைதேறாது என்றார். 

    • தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.
    • அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இன்று இணைந்தது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது.

    எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.

    தி.மு.க. கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது.

    கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெரினா கடற்கரையில் நெய்தல் நிலப்பரப்பை சீர்குலைக்கும் செயலாகும்.
    • ரோப் கார் திட்டத்தை கொண்டு வருவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மலைப் பிரதேசங்களிலும், பனிப் பிரதேசங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை கடற்கரை பகுதியில் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன?

    பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த செயல் இருக்கும் இயற்கையான புகழ்வாய்ந்த மெரினா கடற்கரையில் நெய்தல் நிலப்பரப்பை சீர்குலைக்கும் செயலாகும்.

    கார்ப்பரேட் நிறுவனம் லாபம் சம்பாதிக்க மெரினா கடற்கரையை விற்க நினைப்பது வரலாற்று அபத்தம் மட்டுமல்ல, சென்னை வாழ் மக்களுக்கும், மீனவர்களுக்கும் இழைக்கும் பெரும் அநீதியாகும்.

    ஏற்கனவே மெரினா கடற்கரையில் நீலக்கொடி பிரதேச திட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தை அறிவித்து அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    நீலக்கொடி பிரதேச திட்டத்தை மெரினா கடற்கரையில் அமல்படுத்தக் கூடாது என அனைத்து மீனவ கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்பகுதியில் ரோப் கார் திட்டத்தை கொண்டு வருவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இந்த திட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.

    • விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை.
    • மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.

    திருச்சி:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க., தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களின் எண்ணத்துக்கு நேர்மாறாக உள்ளது. விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. இது மக்கள் மனநிலைக்கு ஏற்ற கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

    ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த பிரயோசனமான அறிவிப்பும் இல்லை.

    மாநில சுயாட்சிக்காக சட்டத்தை திருத்துவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசில் நல்ல இலாகாக்களை பெறுவதில் தான் போராடி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூட சுயாட்சியை வலியுறுத்தவில்லை. பிரதமர்களிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை. த.மா.கா. குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே என் கவனம் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் என் கவனமும், செயல்பாடும் உள்ளது.

    ராஜ்ய சபை உறுப்பினர் குறித்து எதுவும் தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. த.மா.க.வை பொருத்தவரை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் எம்பது தான் முதல் பணி. வெற்றி தான் இலக்காக இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு குறித்து சிந்திக்கவில்லை.

    லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி த.மா.கா.தான். தி.மு.க. அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால், மாநில சுயாட்சி, கவர்னர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு வரிகள் மூலம் சுமையை ஏற்றிய அரசு தி.மு.க. அரசு. மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.

    காங்கிரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தான். சுக்குநூறான பொருளை எப்படி ஒட்ட நினைத்தாலும் அது மீண்டும் சுக்குநுறாக தான் போகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் போட்டியிடமாட்டோம்.
    • எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஒருபுறம் அடையாள அரசியலும், மற்றொரு புறம் கொள்கை அரசியலும் சூறாவளி போல் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒரு புதிய இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம்.

    எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். சாதி சமயம் மதத்தை தவிர்த்து புதிய சமுதாயத்தை அமைப்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.

    திறமை இருந்தும் சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த இயக்கம் செயல்படும்.

    சமத்துவம் சம வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு அறநிலை அரசியலை நாங்கள் முன்னெடுத்து செல்வோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது எங்களது நோக்கம் அல்ல. தேர்தலில் போட்டியிடமாட்டோம். ஆனால் எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம். மக்களைத் தொடர்ந்து சந்திப்போம். சுற்றுப்பயணம் செய்வோம். விஜய்க்கு கூட்டம் கூடுவது அவரது உழைப்பும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையும் தான்.

    ஆனால் அவர் எம்.ஜி.ஆர். போல வர முடியுமா செயல்பட முடியுமா என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், விஜய்க்கும் தான் போட்டி. வருகின்ற 23-ந்தேதி காஞ்சிபுரத்தில் புதிய கட்சி தொடக்க விழா நடைபெறும் என்றார்.

    பேட்டியின் போது பொதுச்செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார், பிரேமலதா ரஞ்சித் குமார், ஜோதி ராமன், ஜோதி அம்மாள் உடன் இருந்தனர்.

    • ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும்.
    • உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில விளையாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய அளவில் வளர்ச்சி சதவீதம் 5.6 சதவீதமாக உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் வளர்ச்சி 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    குறுக்கு வழியில் மட்டுமே ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. பாஜவிற்கு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்.

    அதனால் தான் கடந்த தேர்தலில் துரோகத்திற்கும், குறுக்கு வழிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற ஒற்றை கருத்தோடு தி.மு.க.வை வெற்றி பெற வைத்து மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்தீர்கள்.

    இன்று புதியதாக வந்த ஒருவர்(விஜய்) மீது இளைஞர்கள் மோகத்தில் உள்ளனர். அம்மாக்கள் சொன்னால் தான் அவர்கள் கேட்பார்கள். படத்தை பார்க்க சொல்லுங்கள், விசிலை அடிக்க சொல்லுங்கள். ஆனால் வாக்குகளை தி.மு.க.விற்கு போட சொல்லுங்கள்.

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், ஆயிரம் ரூபாயை தடுக்க பார்த்தவர்களுக்கு சவுக்கடியாக 5,000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர். அதை அடுத்த முறை ஆட்சி பொறுப்பேற்றதும் 2,000 ரூபாயாக தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி 16,000 ரூபாயாக உள்ள நிலையில் அதை இந்திய அளவில் இலவசமாக கொடுத்து வருபவர் நம் முதலமைச்சர். எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் இல்லை.

    தேவைப்பட்டால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம். ஆனால் திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும். ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திரம் கிடைத்தபோது அவர்கள் மொழியை 97 சதவீதம் பேர் பேசி வந்தனர். ஆனால் இன்று 3 சதவீதம் பேர் தான் அவர்கள் தாய் மொழியை பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தி திணிப்பால் ஒரு மொழியே அழிந்து வருகிறது.

    உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளது.
    • மீனவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது.

    இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், இலங்கைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்களும் அவர்களது நான்கு மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், 18.02.2026 அன்று ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் மற்றும் அவர்களது மூன்று மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டதையும், அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மீனவ சமூகத்தின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலையே நம்பியுள்ளதால் இலங்கை அதிகாரிகளால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளது.

    மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது, அவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது.

    எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், தற்போது கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    • தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
    • இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.

    அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.

    அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.!

    இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?

    தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!

    இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.

    இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது.
    • ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.

    மதுரையில் ம.தி.மு.க. பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

    தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. வரும் தேர்தல் கடுமையாக இருக்கும் என சில ஏடுகள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நாங்கள் தி.மு.க.வோடு பேசும் போதுதான், எத்தனை தொகுதிகள் கேட்கிறோம் என தெரியவரும்.

    அதுபற்றி முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதால் 234 தொகுதிகளில் நிற்பேன் என கூறினேன். மைக்கேல்பட்டி மாணவி இறப்பை மத மாற்றம் என பா.ஜ.க. அபாண்டமான குற்றச்சாட்டை வைத்தது.

    தற்போது சி.பி.ஐ. விசாரித்தது. மத மாற்றம் காரணம் இல்லை என கூறி உள்ளது. பா.ஜ.க. பழி சொன்னதற்காக அப்போது யாரெல்லாம் பழித்து பேசினார்களோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது. இதனால் எதிர்தரப்பு கலகலத்து கொண்டிருக்கிறது.

    ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். அ.தி.மு.க. குறித்து நான் பேசியதை முழுமையாக வெளியிடவில்லை. முழுமையாக பேசியதை பார்த்தால் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்கும்.

    ம.தி.மு.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. தொண்டர்களுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கலாம், அது இயற்கை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×