என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது.
- ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. தேர்தல் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைகிறது. இதற்கான வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது, விளம்பரத் துறை, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சமூக ஊடகப் பிரிவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சட்ட உதவி, தலைவர்கள் சுற்றுப்பயண ஏற்பாடு, அகில இந்திய தலைவர்கள் வருகை, தங்க வைத்தல், பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 30 துறைகள் அமைக்கப்படுகிறது.
இதுதவிர கூட்ட அரங்கம், தலைவர் அறை, முக்கிய தலைவர்கள் கலந்துரையாடும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற 25-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். 26-ந்தேதி (வியாழன்) இந்த அலுவலகத்தை மத்திய மந்திரி பியூஷ்கோயல் திறந்து வைக்கிறார். அதன் பிறகு கட்சி அலுவலகமும் தற்காலிகமாக இங்கு செயல்படும்.
- தேர்தல் ஆதாயத்தை மனதிற்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுத்தது சந்தர்ப்பவாத திமுக.
- விஜய்யின் தலைக்கனமும், ஆணவமும் மிக மிக ஆபத்தானது
கடந்தாண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக மாநாடு கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடங்கும். விஜய்யின் வருகை பல மணி நேரம் தாமதமானதாலும், அவரைக் காண மக்கள் திடீரென முண்டியடித்ததாலும் இந்த நெரிசல் ஏற்பட்டது என்றும், மின்வெட்டு மற்றும் போதிய தண்ணீர் வசதி இல்லாததும் உயிரிழப்புக்கு காரணங்களாகச் சொல்லப்பட்டன.
விஜய் தரப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ரூ.2 லட்சம் அறிவித்தது. சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தற்போதுவரை ஆளும்கட்சியான திமுகவை மட்டுமே விஜய் குறைக்கூறி வருகிறார். இந்நிலையில் இன்றும் முதலமைச்சர் தன்மீது பழிபோட்டதாக வேலூரில் பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாதகவின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"தெலங்கானாவில் அல்லு அர்ஜுனைக் கைதுசெய்தது போல, கரூர் பேரவலத்திற்குக் காரணமான விஜய்யைக் கைதுசெய்திருக்க வேண்டும். ஆனால், வழக்குக்கூட போடாது முழுமையாகக் காப்பாற்றிவிட்டது கேடுகெட்ட திமுக.
'விஜய்யைக் கைதுசெய்து, அது திமுகவுக்கு வாக்கரசியலில் எதிர்மறையாகத் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது?' எனும் இலாப, நட்டக் கணக்குப் போட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காது விட்டது திமுக. அவ்வளவு அக்கறை மக்கள் மீது? வெட்கக்கேடு!
41 பேரின் பிணங்களின் மேல் கூட்டணி அமைக்க அதிமுகவும், பாஜகவும் முயற்சித்ததென்றால், தேர்தல் ஆதாயத்தை மனதிற்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுத்தது சந்தர்ப்பவாத திமுக. 41 பேரின் மரணத்தைவிட அரசியல் இலாபம்தான் முக்கியமெனக் கருதிய ஸ்டாலின் அரசின் அயோக்கியத்தனம் அது!
இன்றைக்கு, "கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டார்கள்" என்கிறார் விஜய். அப்படியென்றால், கரூர் பேரவலத்தில் விஜய்க்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? எந்தவிதத்திலும் அவர் காரணமில்லையா? எப்படி இப்படியெல்லாம் பேச விஜய்க்கு மனம் வருகிறது?
இப்போதுவரை கரூர் மரணங்கள் விஜய்க்கு எந்த உறுத்தலையும், குற்ற உணர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு அவரது இந்தப் பேச்சே உதாரணம்.
விஜய் என்றைக்கும் திருந்தப் போவதுமில்லை; வருந்தப் போவதுமில்லை. தன்னிடமிருக்கும் பணத்தையும், திரைக்கவர்ச்சியையும் முதலீடாகக் கொண்டு மக்களை ஆண்டுவிடத் துடிக்கும் விஜய் மிக மோசமானக் காரியக்கிறுக்கன். கடந்தக் கூட்டத்தில் இறந்தவரின் பெயரைச் சொல்லி இரங்கல்கூட தெரிவிக்காத விஜய்யின் தலைக்கனமும், ஆணவமும் மிக மிக ஆபத்தானது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய்க்கும் தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மாணவி தனது தாயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் மகள் என்றும் பாராமல் அவருக்கு தாயே தூக்கமாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்திக்கு விருந்தாக்கினார். இதில் கர்ப்பம் அடைந்த மாணவி தாயின் பிடியில் இருந்து தப்பி திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார்.
இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வாழ்க்கையை சீரழித்த கொடூர தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார்.
இதையடுத்து பெற்ற மகளையே தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
- பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
பெரும்பாறை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளில் பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்து கவர்ந்திழுப்பது வழக்கம். அதன்படி, தற்போது கொடைக்கானல் நகர்ப்பகுதி, மலைப்பாதைகள் மற்றும் கிராமங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
குறிப்பாக கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி. பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வேலிக்காக சங்கு பூச்செடிகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். அதேபோல் மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை சாலையோரங்களில் மின் விளக்குகளை தோரணங்களாக கட்டிவிடப்பட்டது போன்று சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன. இதனால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், தங்களது கேமரா, செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
- கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மொத்தம் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
- கோவை தெற்கில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கி டிசம்பர் 14-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் இறந்த வாக்காளர்கள் உள்பட 6½ லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் 25 லட்சத்து 75 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர்.
இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மொத்தம் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 889 பேரும், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 95 ஆயிரத்து 396 வாக்காளர்கள் அடங்குவர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் சட்டசபை தொகுதி வாரியாக இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் விவரம் வருமாறு:-
மேட்டுப்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 22 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 46 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 34 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர்.
சூலூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 987 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 57 ஆயிரத்து 452 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 102 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 541 வாக்காளர்களும் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 430 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 8 ஆயிரத்து 963 பெண் வாக்காளர்கள், 114 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்கில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 383 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 122 பெண் வாக்காளர்கள், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 91 ஆயிரத்து 533 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூரில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 968 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 371 பேரும், 103 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 லட்சத்து 87 ஆயிரத்து 442 வாக்காளர்களும் உள்ளனர்.
கோவை தெற்கில் ஆண் வாக்காளர்கள் 90 ஆயிரத்து 214 பேரும், பெண் வாக்காளர்கள் 96 ஆயிரத்து 263 பெண் வாக்காளர்களும், 32 மூன்றாம் பாலினத்தவர்களும் என 1 லட்சத்து 86 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 758 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 37 ஆயிரத்து 277 பெண் வாக்காளர்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 58 பேரும், கிணத்துக்கடவு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 562 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 55 ஆயிரத்து 888 பேரும், 36 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 486 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி தொகுதியில் 96 ஆயிரத்து 61 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 919 பெண் வாக்காளர்களும், 35 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 15 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறையில் 81 ஆயிரத்து 504 ஆண் வாக்காளர்கள், 90 ஆயிரத்து 759 பெண் வாக்காளர்கள் 21 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 284 வாக்காளர்கள் உள்ளனர்.
- திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.
- திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்!
அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!" இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.
பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.
Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க!
விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் #DMKWomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது! என்று கூறியுள்ளார்.
- இதுவரை தன்னுடைய தாமதத்திற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை.
- 'எனக்கு யாருமே எதிரிகள் இல்லை, அனைவரும் நண்பர்கள்தான்'
வேலூரில் இன்று நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் தன்மீது பழி போட்டிருந்ததாக பேசியிருந்தார். கூட்டத்தில் பேசிய அவர்,
"எனக்கொரு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது யாரு தெரியுமா? முதலமைச்சர் அவர்கள்தான். 'எனக்கு யாருமே எதிரிகள் இல்லை, அனைவரும் நண்பர்கள்தான்' என்று சொன்னார் முதலமைச்சர். அப்படியிருக்க, கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா? நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு அனுமதியோ இடமோ ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? அனைத்தையும் நீங்களே செய்துவிட்டு அப்படியே போறபோக்கில் எதாவது பேசுகிறீர்களா?" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,
"முதலமைச்சர் அவரை குற்றம் சொல்லவில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் யார் வேண்டுமானாலும் அவர் மீது குற்றம் சுமத்துவார்கள், யார் வேண்டுமானாலும் அவரைப் பழிப்பார்கள். நண்பகல் 12 மணிக்கே அங்கு வந்து கூட்டத்தில் உரையாற்றுவேன் என்று சொல்லிவிட்டு, கொளுத்தும் வெயிலில் தண்ணீரோ உணவோ இல்லாமல் மக்களை இரவு 7:30 மணி வரை காத்திருக்க வைக்கும் போது, மக்கள் இறக்கின்றனர். இதற்கு யார் காரணம்? ஏன் அவர் 12.30 மணிக்கு வரவில்லை? இதுவரை அவர் விளக்கவில்லை.
அவர் குடித்திருந்தாரா? நான் அதை கேட்க விரும்பவில்லை. ஆனால் 12 மணிக்கு வருகிறேன் எனக்கூறிவிட்டு ஏன் 7.30 மணிக்கு வந்தார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
- கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.
- பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மாமல்லபுரம் வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கண்களில் முதலில் படுவது, அங்குள்ள 100-ஆண்டிற்கு மேல் பழமையான பாரம்பரிய கலங்கரை விளக்கம் தான். இதன் மேல் ஏறி உச்சியில் நின்று, கடற்கரை நகரமான மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை மற்றும் குடவரை கோவில்களின் அழகை வான்வழி பார்வையில் பார்த்து ரசிப்பார்கள்.
இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான சாரம் கட்டும் பணிகள் முன்அறிவிப்பு இல்லாமல் திடீரென நேற்று நடந்ததால் அதனை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.
இந்த பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென கலங்கரை விளக்கம் மூடப்பட்டதால் விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
- SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது.
- ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும் பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 பேரும் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும் பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போதும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
- தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு!
- தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும்தான் போர்!
வேலூரில் நடைபெற்ற தவகெ கூட்டத்தில், திமுக-வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக தாக்கிப்பேசிய விஜய், உண்மையில் இந்த தேர்தல் எதுக்கான தேர்தல் என்று சொல்லட்டுமா..? எனக் கேள்வி எழுப்பி தொடர்ச்சியாக உரையாற்றினார்.
இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத திமுக-வுக்கும் நடக்கும் போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் டெல்லி, என்டிஏ.. போன்றவை என்ன லாஜிக் என்றே புரியவில்லை சார். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும் தான் இந்த போர் என்று தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.
விஜய்யின் உரையை கேட்ட தவெக தொண்டர்கள், கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
- தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
- பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.
45 நாட்களுக்கு தற்காலிகமாக மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
ஆனாலும் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
தலைமைச் செயலகம் வழியாக 8 பஸ்கள், நுங்கம்பாக்கம் வழியாக 5 பஸ்கள், ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 27 பஸ்கள், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பஸ்கள் என மொத்தம் 60 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
இது தவிர எழும்பூர் நிலையம் வழியாக பஸ்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது. தீவுத்திடல், ராயபுரத்தில் இருந்து புறப்படக்கூடிய பஸ்கள் சென்ட்ரல், தலைமை செயலகம், சிந்தாதிரிப்பேட்டை வழியாக எழும்பூர் நிலையம் சென்று அங்கிருந்து அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,
"தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூரில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் அங்கிருந்து முக்கிய பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக எந்தெந்த பகுதிகளுக்கு சேவை தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப பஸ் வசதி அளிக்கப்படுகிறது. 101 வழித்தடத்தில் கூடுதலாக மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது" என்றார்.
- தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
- இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது:-
"இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் மாடல் தொகுதியாக இருப்பது கொளத்தூர் தொகுதி. எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை வளர்த்து எடுத்துள்ளோம்.
ஏதோ தேர்தல் வரும் போது மட்டும் ஒன்று, இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கவில்லை. கடந்த 5 வருடமாக பார்க்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும் வந்து உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து கொண்டு வருகிறோம். இங்கு பல்கலைக்கழகம் போன்று கபாலீசுவரர் கல்லூரியை உருவாக்கி உள்ளார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் உருவாக்கி உள்ளோம். கல்வி எனும் கடவுள்தான் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கும். பெரிய பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்களை மையப்படுத்தி மக்களை தேடி வந்து சேவைகளை வழங்குகிற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயர் எடுத்துள்ளது.
இந்த நல்லாட்சி தொடர, நம்ம கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.






